இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். ஜூன்-6ம் தேதி

இயேசுவின் திரு இருதயமானது, தமது தேவ பிதாவின் பேரிலும் நமது ஆத்துமங்களின் பேரிலும் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறதும் தவிர பாவமானது கடவுளுக்கு அளவில்லாத நிந்தையையும், ஆத்துமங்களுக்கு நித்திய நாசத்தையும் வருவிக்கிறபடியால், அதையும் மட்டற்ற விதமாய்ப் பகைக்கிறது. பாவத்தின் மேல் வெறுப்பு இருந்தாலொழிய அன்பு இருக்கவே முடியாது. பாவமானது உலகத்திலுள்ள சகல தீங்குகளிலும் பெரிய தீங்கு.
சாவான பாவத்தைக் கட்டிக் கொள்ளுகிறவர்கள், தங்கள் ஆத்துமத்தை தீய ஆவிக்கு விற்கும் பொருட்டு அதற்கு அடிமைகளாகிறார்கள் என்கிறார் அர்ச். அகுஸ்தீன். “பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்” (தோபி 12 : 10) என்று பாவத்தை விலக்கி நடக்கும்படி தொபியாசுக்கு வானதூதர் இரபேல் அறிவுரைக் கூறியுள்ளார்.
சேசுநாதர் நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும், நமது ஆத்துமங்களை மீட்கவும் நமது பாவங்களைத் தன் மேல் சுமந்து பயங்கரமான தண்டனைகளுக்குத் தம்மை முழுதும் பலியாக ஒப்புக் கொடுத்தார்.
சேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்ய வேண்டுமானால், நீ முன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதோடு, இனி மனது பொருந்தி யாதொரு பாவத்தையும் செய்யாமல் விலகி நட. சில தீய கிறிஸ்தவர்கள் தங்கள் உடலுக்கு வரும் நோயை விலக்க மிகக் கவலையோடு தங்கள் ஆத்துமா முழுவதையும் கவனியாமல் விட்டுவிடுவார்கள். இவர்களைப் போல் நீங்கள் நடக்க வேண்டாம். நோய் வந்தால் மருத்துவரைக் கூப்பிட்டு கசப்பான மருந்தையும் உண்டு மிகுந்த வேதனைக்குரிய சிகிச்சை செய்து கொள்ள சம்மதிக்கிறவர்கள், உடல் சுகத்தைவிட விலையுயர்ந்த ஆத்தும பலத்துக்கான சிறிய வருத்தங்களையும், தியாகத்தையும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
சேசுவின் திருஇருதயத்திற்கு தன்னை முழுதும் ஒப்புக் கொடுக்கும் செபம்
சேசுவின் திரு இருதயமே! உமது மட்டில் எங்களுக்குள்ள அன்பைக் காண்பிக்கவும், எங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணவும், எங்கள் இருதயத்தையும், எங்களை முழுமையாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். உமது உதவியைக் கொண்டு ஒருபோதும் எந்தப் பாவத்தையும் செய்கிறதில்லை என்று பிரதிக்கினை பண்ணுகிறோம். ஆனால் எங்களுடைய பலவீனம் உமக்கு நன்றாய்த் தெரியும். உமது உதவியில்லாமல் ஒரு நன்மையும் எங்களால் செய்யமுடியாது. நீர் செய்ய வேண்டாமென்று விலக்குகிற தீமையை விலக்கி, நீ செய்யென்று கட்டளையிடுகிற நன்மைகளையும், புண்ணியங்களையும் கடைப்பிடிக்க எங்களுக்கு வேண்டிய பலத்தைக் கொடுத்தருளும்.
சேசுவின் திரு இருதய நவநாள்.
கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய சேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்…
(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)
சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப்போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஒடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவிரென்று நம்பியிருக்கிறேன்.
தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான் தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல; தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.
இரக்கமுள்ள திருஇருதயமே! என் விண்ணப்பத்தின்மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே! தேவரீரை நான் வாழ்த்தி வணங்கி போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே! ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதய தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியை கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன்

Comments are closed.