ஜுன் 6 : நற்செய்தி வாசகம்

மற்ற எல்லாரையும் விட இந்த ஏழைக் கைம்பெண் மிகுதியாகப் போட்டார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
அக்காலத்தில்
இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மறையுரைச் சிந்தனை (ஜூன் 6)
எல்லாவற்றையும் தந்துவிட்ட ஏழைக் கைம்பெண்
ஒரு கிராமப்புற பங்கில் பணியாற்றி வந்த குருவானவர் அவ்வூரில் இருந்த மிகவும் பழமையான ஆலயத்தை புதுபிக்க நினைத்தார். எனவே, அவர் மக்களிடம் நன்கொடைகளைத் தாராளமாகத் தருமாறு ஒவ்வொரு ஞாயிறு திருப்பலியின்போதும் கேட்டுக்கொண்டே இருந்தார்.
ஒருநாள் அவர் ஆலயத்தின் முன்பாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது அவ்வூரில் இருந்த பணக்காரர் ஒருவரைக் கண்டார். அவர் அவ்வூரில் அரசி மண்டி நடத்தி வந்தவர். குருவானவர் அவரிடத்தில் மெல்ல பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார். “என்ன பெரியவரே!, நம்முடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணியைச் செய்துகொண்டிருக்கிறோம், அதற்காக நீங்கள் ஏதாவது நன்கொடை தருகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அந்த பணக்காரர், “ஆலயத்திற்கு கொடுக்கின்ற அளவுக்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரிய பணக்காரன் இல்லையே” என்று ஒருவாறாகப் மழுப்பினார்.
குருவானவர் தொடர்ந்து அவரிடம், “சரி ஐயா, ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்வோம், உங்களுடைய கையில் பத்துக்கோடி ரூபாய் பணமிருக்கின்றதென்றால், அப்போதாவது ஆலயம் புதுப்பிப்பதற்காக பணம் தருவீர்களா?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பணக்காரர், “ஆம் சுவாமி, தாராளமாகத் தருவேன், ஏன், ஐந்து கோடி ரூபாயைக் கூடத் தருவேன்” என்றார். “ஒருவேளை உங்களிடம் இரண்டு பண்ணைகள் இருக்கின்றதென்றால், அதில் ஒரு பண்ணையை ஆலயப் பணிகளுக்காகத் தருவீர்களா? என்று கேட்டார் குருவானார். “என்னிடம் இரண்டு பண்ணைகள் இருக்கும் பட்சத்தில், அதில் ஒன்றை ஆலயத் திருப்பணிக்காக நிச்சயம் தருவேன்” என்றார். “சரி, உங்களிடத்தில் இருக்கின்ற அரசி மூட்டைகளில் ஒரு மூட்டையை ஆலயப் பணிகளுக்காகத் தருவீர்களா?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பணக்காரர் ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்துவிட்டு, “அது எப்படி சாமி, ஒருமூட்டையைத் தரமுடியும், எனக்கென்று தேவைகள் இருக்காதா?” என்றார். குருவானவர் தனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.
இல்லாததைத் தருவதாகச் சொல்லும் மக்கள், தங்களிடம் இருப்பதை கொடுப்பதற்கு யோசிக்கின்றார்கள் என்பதை இந்த நிகழ்வானது வேடிக்கையாக பதிவு செய்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலின் உள்ளே காணிக்கைப் பெட்டியின் அருகே அமர்ந்து, காணிக்கைப் போடுகிறவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது பணக்காரர்கள் நிறைய அதில் போடுகின்றார்கள். ஆனால் ஓர் ஏழைக் கைம்பெண்ணோ தன்னிடம் இருந்த இரண்டு கொதிராந்து நாணயங்களையும் போடுகின்றார். ஆண்டவர் இயேசு அந்தப் பெண்மணியின் செயலைப் பாராட்டுகின்றார்.
இயேசு கிறிஸ்து எதற்காக அந்த ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டவேண்டும் என்பது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. எருசலேம் திருக்கோவிலில் ஆலயப் பாராமரிப்பிற்காக பதிமூன்று காணிக்கைப் பெட்டிகள் பெண்கள் அமரக்கூடிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியில் அழகு வாயில் என்ற இடத்தில் ஆண்டவர் இயேசு அமர்ந்திருக்கும்போது பணக்காரர்கள் தங்களிடமிருந்த மிகுதியாவற்றை காணிக்கையாகச் செலுத்தினார்கள். ஆனால், இந்த ஏழைக் கைம்பெண்ணோ தன்னுடைய வாழ்விற்காக வைத்திருந்த இரண்டு கொதிராந்து நாணயங்களை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் எல்லாவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றார். அதனால்தான் இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டுகின்றார்.
கைம்பெண்ணின் இத்தகைய செயல்பாடு, நாம் கொடுக்கின்றபோது எத்தகைய மனநிலையோடு கொடுக்கவேண்டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. முதலாவதாக, நாம் கொடுக்கின்றபோது தியாக உணர்வோடு கொடுக்கவேண்டும். இன்றைக்கு ஒரு சிலர் கொடுப்பார்கள், ஆனால் கடமைக்காக கொடுப்பார்கள், ஏதோ கொடுக்கவேண்டும் என்பதற்காகக் கொடுப்பார்கள். நற்செய்தி வாசகத்தில் வரும் பணக்காரர்களும் ஏதோ கடமைக்காக தங்களிடமிருந்த மிகுதியானத்தை காணிக்கையாக செலுத்தியிருப்பார்கள். ஆனால் ஏழைக் கைம்பெண் அப்படியில்லை. அவர் தியாக உள்ளத்தோடும் தன்னுடைய பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றார். உண்மையான கொடுத்தல் நம்முடைய கையைக் கடிக்கவேண்டும். அந்த விதத்தில் ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை செலுத்திய விதம் மிகச் சிறப்பு.
இரண்டாவதாக கொடுக்கின்றபோதும்/ காணிக்கை செலுத்துகின்றபோதும் முழுமை (Recklessness) இருக்கவேண்டும். பணக்காரார்கள் எவ்வளவுதான் காணிக்கை செலுத்தினாலும் அதில் முழுமை இல்லை. ஆனால் ஏழைக் கைம்பெண் காணிக்கை செலுத்தியபோது ஒரு முழுமை இருந்தது. இத்தகைய ஒரு சிந்தனையும் நம்முடைய மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றாவதாக பணக்காரர்களுக்கு கடவுளை விடவும் பணம் பெரிதாகப்பட்டது, ஆனால் ஏழைக் கைம்பெண்ணுக்கோ பணத்தை விடவும் கடவுள் பெரிதாகப் பட்டார். எல்லாவற்றையும் காணிக்கையாக செலுத்திய பின்பும் ஆண்டவர் தன்னுடைய வாழ்வைப் பார்த்துக்கொள்வார் என்று இருந்தார். அதனால்தான் ஆண்டவர் அவரைப் பாராட்டுகின்றார்.

Comments are closed.