நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 06)

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம்
சனிக்கிழமை
மாற்கு 12: 38-44
முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் ஒரு ஞாயிறுத் திருப்பலியின்பொழுது, மறையுரையாற்றிக் கொண்டிருந்த பங்குத்தந்தை, தன்னுடைய மறையுரையை முடிக்கும்முன்பாக இவ்வாறு சொன்னார்:
“அன்பார்ந்த மக்களே! நம்முடைய பங்கைச் சார்ந்த ஆரோக்கியசாமியை உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஒரு பரம ஏழை. அவர் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வைத்திருந்தார். நேற்று இரவு ஒருவர், அவர் வைத்திருந்த கோழிகளை எல்லாம் திருடிச் சென்றுவிட்டார். அந்த மனிதர் யார் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும், வெளியே சொல்ல எனக்கு விருப்பமில்லை; ஆனால், அப்படிப்பட்ட தாழ்வு மனப்பான்மை உடைய ஒருவர் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும்பொழுது குறைவாகத்தான் செலுத்துவார்.”
இப்படிப் சொல்லி மறையுரையை முடித்த பின்பு, வழக்கத்திற்கு மாறாகப் பங்குத்தந்தையே காணிக்கை எடுக்கச் சென்றார். ‘நாம் காணிக்கை குறைவாகப் போட்டால், பங்குத்தந்தை நம்மைத்தான் சந்தேகப்படுவார்’ என்ற அச்சத்தில் பங்குமக்கள் அனைவரும் அன்றைய நாளில் தாராளமாகக் காணிக்கை செலுத்தினார்கள். திருப்பலி முடிந்தபின்பு பங்குப் பேரவையினர் காணிக்கையை எண்ணி அவரிடம் கொடுத்தபொழுது, அந்தப் பங்கில் அதுவரைக்கும் அப்படியொரு காணிக்கை வந்ததில்லை என்பது பங்குத்தந்தைக்குத் தெரியவந்தது. அப்பொழுது பங்குதந்தை பங்குப் பேரவையினரைப் பார்த்துச் சொன்னார்: “இந்த மக்கள் பயத்தில்தான் இவ்வளவு காணிக்கை செலுத்தியிருக்கின்றார்கள். இவர்கள் மட்டும் மனமுவந்து, முகமலர்ச்சியோடு இப்படிக் காணிக்கை செலுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.”
ஆம், நாம் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகின்றபொழுது, கடமைக்காகவோ, அச்சத்துடனோ அல்ல, முகமலர்ச்சியோடு செலுத்தவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தியில், ஆண்டவர் இயேசு முகமலர்ச்சியோடும் மனமுவந்தும் காணிக்கை செலுத்திய ஏழை கைம்பெண்ணைப் பாராட்டுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு, அந்த ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டுகின்ற அளவுக்கு அவர் என்ன செய்தார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்த இயேசு
இன்றைய நற்செய்தி வாசகமானது, இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. நற்செய்தியின் முதல்பகுதியில், ஆண்டவர் இயேசு மறைநூல் அறிஞர்களைச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம்.
மறைநூல் அறிஞர்கள், கடவுளின் வார்த்தையை எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் எல்லாவற்றையும் மக்கள் தங்களைப் பாராட்டவேண்டும், புகழவேண்டும்; வணக்கம் செலுத்தவேண்டும் என்றே செய்தார்கள். இதைவிடக் கொடியதொரு செயலையும் அவர்கள் செய்தார்கள். அது என்னவெனில், கைம்பெண்களை ஒடுக்கி, அவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக் கொண்டது. இயேசுவின் காலத்தில் கைம்பெண்கள் என்றால், ஆதரவற்றவர்கள் என்ற பட்டியலில்தான் வந்தார்கள். அதுவும் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லையென்றால், அவர்களுடைய நிலைமை இன்னும் திட்டாட்டம்தான். இப்படிப்பட்ட கைம்பெண்களின் வீடுகளை மறைநூல் அறிஞர்கள் பிடுங்கிக்கொண்டதால்தான், இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். மட்டுமல்லாமல், மக்கள் அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றார்.
இப்படி, மறைநூல் அறிஞர்களுக்கு எதிரான தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவுசெய்த பின்னே இயேசு, எருசலேம் திருக்கோயிலில் இருந்த காணிக்கை பெட்டிக்கு எதிராகப் போய் அமர்கின்றார்.
ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டிய இயேசு
எருசலேம் திருக்கோயிலில், கோயில் வரிசெலுத்துவதற்கு என ஏழு பெட்டிகளும், காணிக்கை செலுத்துவதற்கு என ஆறு பெட்டிகளும் இருந்தன. பெண்கள் பகுதியில் இருந்த காணிக்கைப் பெட்டிகளுக்கு எதிராகத்தான் இயேசு அமர்ந்துகொண்டு, அவற்றில் காணிக்கை செலுத்துவோரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். செல்வந்தர்கள் மிகுதியாக அதில் செலுத்தியபொழுது, ஏழைக் கைம்பெண்ணோ தன்னுடைய பற்றாக்குறையிலும் அனைத்தையும் காணிக்கையாக செலுத்துகின்றார். அதைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு தன்னுடைய சீடர்களை அழைத்து, அவருடைய செயலைப் பாராட்டுகின்றார்.
இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, மேலே பார்த்த மறைநூல் அறிஞர்களால் ஒடுக்கப்பட்டு, வறியநிலைக்கு ஆளானாலும், அந்தக் கைம்பெண், ‘இனி எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கையோடு அவருக்குக் காணிக்கையாக செலுத்தியது. இரண்டாவதாக, அந்தக் கைம்பெண் செல்வந்தர்களைப் போன்று மற்றவர் பாராட்டவேண்டும் என்பதற்காகக் காணிக்கை செலுத்தவில்லை. மாறாக, எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் காணிக்கை செலுத்தியது. இந்தக் காரணங்களுக்காகவே இயேசு கைம்பெண்ணைப் பாராட்டுகின்றார்.
நாம் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகின்றபொழுது எப்படிச் செலுத்துகின்றோம்? மற்றவருடைய பாராட்டுக்காகச் செலுத்துகின்றோமா அல்லது எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல், முகமலர்ச்சியோடு காணிக்கை செலுத்துகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்’ (2கொரி 9: 7) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகின்றபொழுது, பிறர் நம்மைப் பாராட்டவேண்டும், புகழவேண்டும் என்பதற்காக அல்ல, கடவுள் நமக்குச் செய்த நன்மைகளை என்னை நன்றிப்பெருக்கோடும் முகமலர்ச்சியோடும் செலுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.