நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 05)

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம்
வெள்ளிக்கிழமை
மாற்கு 12: 35-37
இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்த மக்கள்
நிகழ்வு
அருள்பொழிவு செய்யப்பட்டுச் சிலநாள்களே ஆன அருள்பணியாளர் ஒருவர், வயதில் மூத்த அருள்பணியாளர் ஒருவரிடம், மறையுரை ஆற்றுவது தொடர்பாக ஒருசில விளக்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது மூத்த அருள்பணியாளர் அவரிடம், “தம்பி! மறையுரை ஆற்றும்பொழுது ஒருபொழுதும் நீட்டி முழங்கிவிடக்கூடாது; மிகவும் இரத்தினச் சுருக்கமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உன்னுடைய மறையுரையை மக்கள் விரும்பிக் கேட்பார்கள். இதை விளக்க ஒரு நிகழ்வைச் சொல்கின்றேன் கேள்” என்று சொல்லிவிட்டு அந்த மூத்த அருள்பணியாளர் இந்த நிகழ்வைச் சொன்னார்.
ஒரு பங்கில் மறைப்பரப்பு ஞாயிறு கொண்டாடப்பட்டது. திருப்பலி நிறைவேற்றிய பங்குத்தந்தை, தன்னுடைய மறையுரையின்பொழுது, உலகமெங்கும் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கு ஒவ்வொருவரும் தாராளாக நிதியுதவி செய்யவேண்டும் என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார். மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு, மறைப்பரப்புப் பணிக்காகத் தாராளமாக நிதியுதவி வழங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டார்கள். நேரம் கடந்தது. மக்கள் தன்னுடைய மறையுரை ஆர்வமாய்க் கேட்பதைப் பார்த்த பங்குத்தந்தை இன்னும் உணர்வுப்பூர்வமாகப் பேசத் தொடங்கினார். இதைப் பார்த்துவிட்டு மக்கள், மறைப்பரப்புப் பணிக்காக இரண்டு மடங்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டார்கள்
பங்குத்தந்தை இத்தோடு நிறுத்திவிடவில்லை. இன்னும் நீட்டி முழங்கினார். இடையிடையே ஒருசிலர் தூங்கி வழியத் தொடங்கினர். அதைக்கூட கண்டுகொள்ளாமல் பங்குத்தந்தை தொடர்ந்து மறையுரை ஆற்றினார். ஒருவழியாக அவர் தன்னுடைய மறையுரையை முடித்துவிட்டு, மறைப்பரப்புக்கான காணிக்கைகளை அவரே மக்களிடம் வாங்கச் சென்றபொழுது, அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவெனில், கோயிலில் இருந்த எல்லாரும் தூங்கி வழங்கிகொண்டிருந்தனர். அதைப் பார்த்துவிட்டுப் பங்குத்தந்தை அதிர்ந்து போனார்.
இந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு, மூத்த அருள்பணியாளர் அந்த இளம் அருள்பணியாளரிடம், “இப்பொழுது புரிகின்றதா! மறையுரை ஆற்றும்பொழுது ஏன் நீட்டி முழங்காமல், இரத்தினச் சுருக்கமாக ஆற்றவேண்டும் என்று” என்றார்.
ஆம், மறையுரையாக இருக்கட்டும், சொற்பொழிவாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும், கேட்பவர்களைக் மனமுவந்து கேட்க வைக்கதாக இருக்கவேண்டும். அந்த இரகசியத்தை மக்கள்முன் பேசுகின்றவர்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பேசியதை மக்கள் மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்று வாசிக்கின்றோம். மக்கள் மனமுவந்து கேட்கும் அளவுக்கு இயேசு அப்படி என்ன பேசினார்… எதைப் பற்றிப் பேசினார் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தாவீது மகனாய் இருந்தாலும், இயேசு இறைமகனே!
எருசலேமிற்குள் வெற்றிவீரராய் வந்த இயேசு, திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடித்த பின்பு, அதிகாரத்தில் இருந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக வந்து, தங்களுடைய கேள்விகளால் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க முயன்று தோற்றுப் போனார்கள். இதற்குப் பிறகு எவரும் இயேசுவிடம் எதையும் கேட்கத் துணியவில்லை. அப்பொழுதுதான் இயேசு, மறைநூல் அறிஞர்கள், மெசியா தாவீதின் மகன் என்பதைப் பற்றிப் பேசிவந்தைக் குறித்து விளக்கம் அளிக்கத் தொடங்கினார். இதற்காக அவர் திருப்பாடல் 101: 1 இல் இடம்பெறுகின்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார்.
மனித முறைப்படி இயேசு தாவீதின் மகனாக அவருடைய வழிமரபினராக இருந்தாலும், இயேசு தாவீதுக்கும் ஆண்டவர். அதைத்தான் அவர் மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். இயேசுவின் இப்பேச்சைத்தான் மக்கள் மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இயேசுவை போல எவரும் என்றுமே பேசியதில்லை
இன்றைய நற்செய்தியிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி இயேசுவின் போதனையை மக்கள் மனமுவந்து கேட்டதற்கும், வியந்து கேட்டதற்கும் காரணம் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசுவின் போதனையை மக்கள் மனமுவந்தும் வியந்தும் கேட்டதற்கும் ஒரே காரணம், இயேசுவின் போதனை பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் போதனையைப் போலன்றி அதிகாரம் கொண்ட போதனையாக இருந்தது. இந்த அதிகாரம் இயேசுவுக்குத் தந்தைக் கடவுளிடமிருந்து வந்தது (மத் 28: 17). மட்டுமல்லமால், இயேசு தான் போதித்ததை வாழ்வாக்கியதாலும், வாழ்ந்ததைப் போதித்ததாலும் வந்தது. ‘வாழ்ந்து சொல்லும் வார்த்தைக்கு வலிமை’ என்பதுபோல இயேசு வாழ்ந்ததைப் போதித்தார்; போதித்ததை வாழ்ந்தார். அதனால்தான் “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதல்லை” (யோவா 7: 46) என்று தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பி வைத்த காவலர்கள் சொல்கின்றார்கள்.
ஆகையால், நம்முடைய போதனை அல்லது பேச்சு வல்லமையுள்ளதாக, எல்லாரும் மனமுவந்து கேட்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்றால், நம்முடைய வாழ்விற்கும் போதனைக்குமான இடைவெளி குறையவேண்டும். அந்த இடைவெளியைக் குறைக்க நாம் முயற்சி செய்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘பேச்சாளர்கள் நல்ல செயலாளர்களாக இருக்கவேண்டும்’ என்பார் ஷேக்ஸ்யர். ஆகையால், நாம் நம்முடைய பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, இயேசுவைப் போன்று வாழ்வே பெரிய போதனையாக இருக்கச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.