நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 04)

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம்
வியாழக்கிழமை
மாற்கு 12: 28b-34
அன்பு செலுத்துவது, பலிகளைவிட மேலானது
நிகழ்வு
இளம்பெண் ஒருத்தி இருந்தாள். இவளுடைய குடும்ப மிகவும் வசதியானது; அதனால் இவளுக்கு ஏராளமான தோழிகள் இருந்தார்கள். இவளுடைய பொழுதுபோக்கே தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து, பல இடங்களுக்குச் சென்றுவருவதருதான். ஒருமுறை இவள் தன்னுடைய தோழிகளுடன் காஷ்மிருக்குச் சென்றபொழுது, அங்கு அழகுவேலைப்பாடு நிறைந்த ஒரு சால்வையைக் கண்டாள். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது என்பதாலும், தன்னுடைய தாயின் பிறந்தநாள் பரிசாக அதைத் தரலாம் என்பதாலும், இவள் அதை ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கிக்கொண்டாள்.
இவளுடைய தாயின் பிறந்தநாள் வந்தபொழுது, இவள் தான் வாங்கிவந்த விலையுயர்ந்த சால்யையின் மேல், ‘அம்மா! நான் உங்களை மிகவும் அன்புசெய்கின்றேன்’ என்பதை ஆங்கிலத்தில் எழுதி, அவரிடம் கொடுத்தாள். அதை அன்போடு வாங்கிக்கொண்ட இவளுடைய அம்மா, “மகளே! உன்னிடத்தில் நான் ஒருசில வார்த்தைகள் பேசலாமா?” என்று கேட்க, இவள், “தாராளமாகப் பேசுங்கள் அம்மா!” என்று சொன்னதும், இவளுடைய அம்மா பேசத் தொடங்கினாள்: ‘மகளே! என்னுடைய பிறந்தநாள் பரிசாக எனக்கு நீ இந்த விலையுயர்ந்த சால்வையைப் பரிசளித்திருக்கின்றாய்; மிக்க நன்றி. ஆனாலும் நோய்வாய்ப்பட்டிருக்கின்ற எனக்கு இந்தச் சால்வையைவிடவும், உன்னுடைய உடனிருப்பும் அன்பும்தான் தேவை. அவற்றை இனிமேலானது எனக்குத் தருவாயா?”
தன்னுடைய தாய் இவ்வாறு சொன்னதும், அந்த இளம்பெண் தன்னுடைய தவற்றை உணர்ந்து கண்ணீர் சிந்தி, அழத் தொடங்கினாள்.
இந்த நிகழ்வில் வருகின்ற இளம்பெண் தன்னுடைய தாய்க்கு விலையுயர்ந்த சால்வையைப் பரிசாகக் கொடுத்தபொழுது, அவளுடைய தாய், தனக்குச் சால்வையை விடவும் அன்புதான் வேண்டும் என்று கேட்டார். ஆண்டவரும்கூட நம்மிடமிருந்து பலிகளை விடவும் அன்பைத்தான் எதிர்பார்க்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகம், கடவுள் நம்மிடமிருந்து பலிகளை விடவும் அன்பை எதிர்பார்க்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவைத் தொடர்ந்து வரும் கேள்விகள்
மாற்கு நற்செய்தி பன்னிரண்டாம் அதிகாரம் முழுவதும், இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஒருவர் மாற்றி ஒருவர் வருவதையும், அவர்களுக்கு இயேசு தக்க பதில் தருவதையும் குறித்து வாசிக்கின்றோம். முதலில் பரிசேயர்கள் அனுப்பி வைத்த ஏரோதியர்கள், சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா என்ற கேள்வியோடு வருவார்கள். பின்னர் சதுசேயர்கள் உயிர்ப்பு பற்றிய கேள்வியோடு வருவார்கள். இன்றைய நற்செய்தியில், மறைநூல் அறிஞர், அனைத்திலும் முதன்மையான கட்டளை? என்ற கேள்வியோடு வருகின்றார். இவருக்கும் இயேசுவுக்கும் நடக்கும் உரையாடல்தான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது.
அன்பு பலியைவிட மேலானது
இயேசுவிடம் வருகின்ற மறைநூல் அறிஞர், ஒரு பரிசேயர் (மத் 22: 34-35) என்கிறார் மத்தேயு நற்செய்தியாளர். இது ஒருபுறமிருக்க, இந்த மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேட்ட, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம். இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, யூதர்களிடம் ‘அதைச் செய்யவேண்டும்’, ‘இதைச் செய்யக்கூடாது’ என்று அறநூறுக்கும் மேற்பட்ட கட்டளைகள் அல்லது சட்டங்கள் இருந்தன. இவற்றில் எது முதன்மையான கட்டளை என்பது தொடர்பான விவாதம் அவர்களிடம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது .இரண்டாவதாக, இயேசு மக்கள் நடுவில் ஒரு போதகராக, இறைவாக்கினராக அறியப்பட்டார். எனவே, முதன்மையான கட்டளை என்று இயேசு என்ன சொல்கின்றார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும் மறைநூல் அறிஞர் இயேசுவிடம் இக்கேட்கின்றார் என்று புரிந்துகொள்ளலாம்.
அன்பு செலுத்தினால் இறையாட்சிக்கு உட்படுவோம்
மறைநூல் அறிஞர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இயேசு இணைச்சட்ட நூல் 6:5, லேவியர் நூல் 19:18 ஆகிய இரண்டு இடங்களில் வருகின்ற இறைச் சொற்றொடர்களை ஒன்றாக இணைத்து, இறையன்பு முதன்மையான கட்டளை, பிறரன்பு இதற்கு இணையான கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை என்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதை ஆமோதிக்கும் மறைநூல் அறிஞர், அன்பு பலிகளை விட மேலானது என்கின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை” என்கின்றார்.
ஆம், நாம் இறையன்பு, பிறரன்பு என்ற இந்த இரண்டு கட்டளைகளையும் கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது, இறையாட்சிக்கு மிக அருகில் இருக்கின்றோம் என்பதே உண்மை. ஆகையால், நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுள் தந்திருக்கும் இக்கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து, அவருடைய அன்புக்குரியவர்கள் ஆவோம்.
சிந்தனை
‘அன்பு செலுத்துகின்ற… அன்பு செலுத்தப்படுகின்ற யாரும் ஏழையில்லை’ என்பார் ஆஸ்கார் வைல்ட் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் ஆண்டவரையும், நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வோம்; அன்பு பலியை விட மேலானது என்ற உண்மையை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.