இயேசுவின் திரு இருதய வணக்க மாதம் 4 -ம் தேதி

சேசுவின் திருஇருதயப் பக்தியால் விளையும் பயன்கள்.
சேசுவின் திரு இருதயப் பக்தியை கிறிஸ்தவர்கள் எல்லா இடங்களிலும் எவ்வளவு விடா முயற்சியோடும் நம்பிக்கையோடும் பின்பற்றி செபிக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையைத் திருச்சபையின் முக்கியமான திருநாட்களில் ஒன்றாகப் பாவித்து பல பங்குகளில் மிக பக்தி ஆடம்பரத்தோடு கொண்டாடுகிறார்கள். முதல் வெள்ளிக்கிழமைகளில் பல கிறிஸ்தவர்கள் நற்கருணை பெற்றுக் கொள்கிறார்கள். சிலர் இதற்காக மிகத் தொலைவிலிருந்து வர வேண்டியதிருந்தாலும் தங்கள் முயற்சியை சேசுவின் திரு இருதய அன்புக்காக சந்தோஷமாய் ஒப்புக்கொடுக்கிறார்கள். இந்த உன்னத பக்தி முயற்சிகளையும் இவ்வளவு அன்பு ஈடுபாட்டையும் பார்க்கும்போது சேசுவின் திரு இருதயம் எவ்வளவோ ஆறுதலடைகிறது!
சேசுவின் திரு இருதயப் பக்தியால் ஏற்படும் அபரிமிதமான பலன்களைப்பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் மதப் போதகர்கள் மற்றும் விசுவாசிகளுடைய ஆத்ம மீட்புக்கு சேசுவின் திரு இருதயப் பக்தி மிகவும் உபயோகமாக இருக்கும் என்று அர்ச். மார்கரீத் மரியாவுக்கு ஆண்டவர் தாமே காட்சியில் அறிவித்துள்ளார்.
துறவற சபைகள்:
சேசுவின் திருஇருதயப் பக்தியை அதிகரிக்கச் செய்ய சேசு சபைக்குருவான அருட்திரு. குருவாசே ஆவலாயிருந்தார். அவருக்கு அர்ச். மார்கரீத் மரியா பின்வருமாறு எழுதினார். பரிசுத்த இருதயத்திற்கு தங்களை முழுவதும் ஒப்புக்கொடுத்து தங்களாலான ஆராதனை வணக்கமும், அன்பும் காட்டுகிறதைவிட, புண்ணிய பாதைக்கு அதிக உறுதியான வழி வேறில்லை. எந்த மடங்களில் சேசுவின் திரு இருதயத்துக்கு சிறப்புமிக்க ஆராதனை நடந்து வருகிறதோ, அங்கே பிறரன்பு சகோதர ஒன்றிப்பு ஆகியவை சேசுவின் திரு இருதயத்தின் பராமரிப்பில் உண்டாகும்.
சேசுவின் திரு இருதயமானது அளவிடமுடியாத தேவ வரப்பிரசாதங்களும், ஆசீர்வாதங்களும் நிறைந்த ஞானக் களஞ்சியம், ஆசீர்வாதங்களும் நிறைந்த ஞானக் களஞ்சியம். இந்த திரு இருதயப் பக்தியைப்போல் மிக விரைவில் மிக மேலான புண்ணிய செயல்களுக்கு ஆத்துமாவை அழைத்துக் கொண்டு போகக்கூடிய பக்தி முயற்சி வேறெதுவுமில்லை.
விசேஷமாய் துறவற வார்த்தைப்பாடு கொடுத்தவர்கள் இந்தப்பக்தியை அனுசரிக்கும்படி தூண்டுங்கள். இந்தப் பக்தியால் அவர்கள் எவ்வளவு பலன் அடைகிறார்களென்றால், தளர்ந்து போன பழைய ஞான சுறுசுறுப்பைத் திரும்பப் புதுப்பிக்கவும், ஒழுங்கில் அசட்டைத்தனமாய் வாழ்ந்த மடங்களில் ஒழுங்கை நன்றாய் கடைப்பிடிக்கச் செய்யவும், ஏற்கெனவே சபை ஒழுங்கைச் சரியாய் அனுசரிப்பவர்களை மோட்சத்தின் முடியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இப்பக்தி ஒன்றே போதுமானது.
குருக்கள்:
அர்ச். மார்கரீத் மரியா சொல்லுகிறதாவது : “கல்லான இதயத்தை இளகச் செய்யும் வரத்தை ஆத்ம மீட்புக்காக உழைக்கிற வேத போதகர்களுக்கு அளித்தருளுவோமென்று மீட்பர் எனக்குத் தெரிவித்திருக்கிறார். திரு இருதயத்தின் பேரில் அவர்களுக்கு உருக்கமான பற்று இருந்தால் ஆச்சரியப்படத்தக்க வகையில் உழைப்பார்கள். அவர்கள் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளுக்கு திரு இருதயமானது தமது அன்புச்சுடரால் மிகவும் கடினமான இருதயங்களை இளக்கி, ஊடுருவி, தேவ அன்பினால் பற்றி எரியச் செய்யும் சக்தி அவ்வார்த்தைகளுக்கு உண்டாகும். இவ்வகையாய் மிகவும் அக்கிரமம் நிறைந்த ஆத்துமங்கள் மீட்பு விளைவிக்கும் ஒப்புரவு வழிக்கு வந்து சேருவார்கள்.”
பொதுநிலையினர் :
அர்ச். மார்கரீத் மரியா பொதுநிலையின்ரைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார் :
அவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப அவசியமான எல்லா உதவிகளையும் இந்த இன்பந்தரும் சேசுவின் திரு இருதயப் பக்தியால் கண்டடைவார்கள். தங்கள் குடும்பத்தில் சமாதானமும், தங்கள் அலுவல்களில் ஆசீர்வாதமும் இப்பக்தியால் உண்டாகும். தங்கள் வாழ்நாளிலும் முக்கியமாய் மரண வேளையிலும் இத் திருஇருதயம் அடைக்கலமாயிருக்கும்.
சேசுவின் திரு இருதயத்தை மற்றவர்களும் அறிந்து ஆராதிக்க வேண்டுமென்று ஆசை கொண்டிருந்த பலருடைய பெயரைத் தமது இருதயத்தில் என்றும் அழியாத விதமாய் எழுதியிருந்ததை நான் பார்க்கும்படிச் செய்தார்.
ஆதலால் சேசுவின் திரு இருதயப் பக்தியானது இவ்வுலக வாழ்க்கையில் ஆசீர் பொழியும் ஊற்றாகவும், மறுமையில் நித்திய மகிமைக்கு தொடக்கமாகவும் இருக்கிறதாக மேற்சொன்ன வாக்குத்தத்தங்களால் அறிந்து கொள்ளலாம். மற்றெந்த பக்தியையும் விட இந்தப் பக்தியானது சேசுவின் அன்பிற்காக நமது தீயகுணங்களில் வெற்றி கொள்ளவும், புனித தன்மைக்கு அவசியமானப் புண்ணியங்களைத் தேட தாராள குணத்தோடு நாம் உழைக்கவும் நம்மைத் தூண்டி ஏவுகிறது. சேசுவின் திரு இருதயத்திற்கு ஏற்றப் புண்ணியங்களை நாம் பின்பற்றும்படி நமது இருதயத்தைத் தூண்டி ஏவும்போது படைக்கப்பட்ட பொருட்களிலிருந்து நமது இருதயப் பற்றுதல்களை ஒறுக்கவும், கடவுளுடைய அளவற்ற அன்பையும், பரிசுத்தத்தனத்தையும் மாசுபடுத்தக்கூடிய எந்தத் துர்க்குணத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றவும் உதவியாயிருக்கிறது. வருகிற சகல துன்பங்களையும் தாராள குணத்தோடு ஏற்றுக் கொண்டு, ஒறுத்தல் முயற்சி செய்து, நமது இருதயத்தை சேசுவின் திரு இருதயத்துக்கு ஒத்தாகக்கூடிய சகல புண்ணியங்களையும் செய்ய இந்த பக்தி மிகவும் ஏதுவாயிருக்கிறது.
செபம் :
சேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையெல்லாம் உமது பெயரில் வைக்கிறேன்.
சேசுவின் திரு இருதய நவநாள்.
கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய சேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்…
(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)
சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப்போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஒடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவிரென்று நம்பியிருக்கிறேன்

Comments are closed.