ஜூன் 08, உலகப் பெருங்கடல் நாள்

இவ்வுலகின் வருங்காலத்திற்கு, கடல்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளார், ஐ.நா. அதிகாரி பீட்டர் தாம்சன்.

பெருங்கடல்கள் பாதுகாப்பு அவைக்குரிய ஐ,நா, பொதுசெயலரின் சிறப்புப் பிரதிநிதி தாம்சன் அவர்கள், இம்மாதம் 8ம் தேதி சிறப்பிக்கப்படும் உலகப் பெருங்கடல் நாளையொட்டி வெளியிட்டுள்ள செய்தியில், இவ்வழைப்பை விடுத்துள்ளார்.

கடல் வளங்களில் 60 விழுக்காடு, தரம் குறைந்துள்ளது, அல்லது, தவறாக பயன்படுத்தப்படுகின்றது என உரைத்த தாம்சன் அவர்கள், பெருங்கடல்கள் மேலும் வெப்பமாகி வருவதுடன், அவை ஆக்சிஜனை இழந்து, அமிலமாகி வருகின்றன என்று கூறினார்

மனித சமுதாயத்தின் தவறுகள் வழியாக, நீருக்கடியில் வாழும் உயிரினங்களுக்கும், நிலத்தில் வாழ்கின்ற உயிரினங்களின் வருங்காலத்திற்கும் அச்சுறுத்தலைக் கொணர்கிறோம் என்ற கவலையையும் வெளியிட்டார், ஐ.நா. அதிகாரி தாம்சன்.

பெருங்கடல்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டுமெனில், முதலில் தொழிற்சாலைகள் வெளியிடும் வாயுக்களின் அளவு குறைக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல், மற்றும், தட்பவெப்ப நிலைகள் குறித்த நல்ல திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் தாம்சன்.

உலகின் நிலப்பகுதிகளில், 70 விழுக்காட்டைக் கொண்டுள்ள கடல் பகுதியின் மீன்வளத்துறையில் 5 கோடியே 70 இலட்சம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்று ஐ.நா. அவை கூறியுள்ளது

Comments are closed.