இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். ஜூன்-2-ம் தேதி.

திருஇருதயப் பக்தி எதில் அடங்கியிருக்கிறது.
சேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்து பக்தி செய்ய அனைவருக்கும் விருப்பம். ஆனால் பக்தியில் தவறான எண்ணங்கள் உண்டு. “சேசுசுவின் திரு இருதயமே! உம்மை அன்பு செய்கிறேன்” என்று அடிக்கடி சொல்லுவதிலும், நீண்ட செபங்கள் சொல்வதிலும், பாடல்கள் பாடுவதிலும், திரு இருதயப் பீடங்களில் மலர்களை வைத்து தீபங்களை ஏற்றுவதிலும் அடங்கியுள்ளது என சிலர் நினைக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல காரியங்கள் எனினும் இவை திரு இருதய பக்தியின் வெளி அடையாளங்கள் மட்டுமே ஆகும்.
“நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள்.” (யோ 14:15) ‘என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என் மீது அன்பு கொள்பவர் மீது பிதாவும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.” (யோ 14 :21 என்றும் கூறுகிறார் சேசு.
உண்மையான அன்பு வார்த்தையில் மட்டுமல்ல, செயல்களிலும்தான் முக்கியமானதாய் விளங்குகிறது என்று அனைவரும் அறிந்து கொள்வர்.
என் தந்தையை வெகுவாய் அன்பு செய்கிறேனென்று சொல்லுகிற மகன், தந்தையின் கட்டளைகளைப் பரிகசித்து, அவருக்குக் கீழ்ப்படியாமல் தன் நடத்தையால் அவருடைய இருதயத்தை வேதனைப்பட செய்வானேயாகில், அவன் தன் தந்தையை உண்மையாகவே அன்புசெய்கிறானென்று சொல்லலாமா?
சேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்கிறாயா இல்லையா என அறியவேண்டுமா? இதோ, மனது பொருந்தி எந்தப் பாவத்தையும் கட்டிக்கொள்ளாதபடி எச்சரிக்கையாயிருக்கிறாயா? தேவனுடையக் கட்டளைகளையும் திருச்சபைக் கட்டளைகளையும் கடைப்பிடிக்கிறாயா? குருக்களுக்கு மரியாதை செய்து கீழ்ப்படிகிறாயா? திரு இருதயத்துக்கு வணக்கமாக தனியாக முயற்சி செய்து உன் தீய விருப்பங்களின் மேல் வெற்றி கொண்டு, சில குறைந்த நிந்தைகளையாகிலும் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு சகலருக்கும் பிறரன்பைக் காட்டுகிறாயா? செபம், புத்திமதி மற்றும் உன் நன்மாதிரிகையால் ஆத்துமாக்களை மீட்க முயற்சி செய்கிறாயா? இவை போன்ற முயற்சிகள்தான் சேசுவின் திரு இருதயத்தை நாம் அன்பு செய்கிறோம் என்பதற்கு அடையாளம். வார்த்தைகளால் மட்டுமல்ல; செயல்களாலும், ஒறுத்தல் முயற்சிகளாலும் விளங்குகிற அன்புதான் சேசுவின் திருஇருதயத்தின் உண்மையான அன்பு ஆகும்.
சேசுக்கிறிஸ்து நமக்காக இவ்வுலகத்தில் வந்து பாடுபட்டு நமது அன்பிற்காக தமது 33 வருடங்களும் நிந்தை அவமானங்கள் அனுபவித்து சிலுவையில் வருந்தி பாடுபட்டு தமது இரத்தமெல்லாம் சிந்தி உயிரைக் கொடுத்தார். உலகம் முடியும் மட்டும் நம்மோடுகூட இருக்கவும், நமது ஆன்மாவிற்கு உணவாகவும் நற்கருணையை உண்டாக்கினார்.
சேசு நமது மட்டில் காண்பித்த இந்த அன்பை உணர்ந்துதான் புனிதர்கள் நமது ஆண்டவரைப் பின்பற்றினார்கள். ஸ்மர்னா நகரத்து ஆயராகிய அர்ச். இஞ்ஞாசியாரை மதத்திற்காக உயிரைவிட உரோமா புரிக்குக் கூட்டிக் கொண்டுபோகும் போது அவர் தமது கிறிஸ்தவர்களுக்கு எழுதியது: “நான் கிறிஸ்துவுக்காக என் உயிரை விடப் போவதை உங்களுக்கு அறிவிக்க நான் மிகுந்த பாக்கியம் பெற்றவன், என்னை சுட்டெரிக்கலாம், சிலுவையில் அறையலாம் அல்லது விலங்குகளுக்கு இரையாக்கலாம் பரவாயில்லை. இவைகளையெல்லாம் ஆண்டவருக்காக மிக சந்தோஷமாய் அனுபவிப்பேன். இவை என்னை, என் உயிரும் அன்புமாகிய கிறிஸ்துவிடம்” கொண்டு சேர்க்கும்.
இதுவே அப்போஸ்தலர்களிடத்திலும், வேதசாட்சிகளிடத்திலும், புனிதர்களிடத்திலும் விளங்கிய உன்னதமான பற்றுதல். இப்போதுகூட எத்தனையோ மத போதகர்கள், தங்கள் தாய் தந்தையர், சுற்றத்தார், நண்பர்கள், சொந்த நாடு முதலானவைகளை விட்டு மிகத் தொலைவான வேறு நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவர்களை மீட்கவும், பிற மதத்தினருக்குப் போதிக்கவும் வருந்தி உழைத்து, தங்கள் வாழ்நாட்களை செலவழிக்கிறார்கள். இதற்குக் காரணம், சேசுவின் அன்புக்கும் அவருடைய திரு இரத்தத்தால் மீட்டு இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களின் அன்புக்குமேயன்றி வேறல்ல.
கிறிஸ்தவ நாடுகளிலுள்ள மருத்துவமனைகளைப் பாருங்கள். அங்கே தங்கள் சொத்து, சுகம், விருப்பங்கள் அனைத்தையும் கடவுளுக்காக வெறுத்து ஒதுக்கிவிட்ட கன்னியர்கள், துறவியர்கள் தாங்கள் ஒருபோதும் கண்டிராத நோயாளிகளுக்கு அக்கரையுடன் பணிவிடை செய்து வருவதைக் காண்பீர்கள். இச்செயலைச் செய்ய தூண்டுவது சேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே. இன்னும் புண்ணியவான்களாகிய சில கிறிஸ்தவர்கள், தங்கள் நன்மாதிரிகை யாலும், தாராள குணத்தினாலும், மற்ற கிறிஸ்தவர்களுக்கு முன்னுதாரணமாக நடக்கவும், தங்கள் சகோதரருடைய முன்னேற்றத்துக்காக உழைத்து துன்பப்பட வேண்டிய பிரமாணிக்கத்தையும், தளராத ஊக்கத்தையும் அவர்கள் இதயத்தில் தூண்டி வளர்ப்பது சேசுவின் பேரில் அவர்கள் வைத்த அன்பே. எடுத்துக்காட்டாக அன்னைத் தெரசாவின் தீவிர செயல்கள்.
நமது ஆண்டவரை உண்மையாகவே அன்பு செய்கிறோமென்று காட்ட நாம் இப்போது என்ன செய்கிறோம்? இனி என்ன செய்யப்போகிறோம்? இரண்டாம் முறையாக சேசு அர்ச். இராயப்பரிடம் “யோவானின் மகன் சீமோனே நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா? என்று கேட்டார். அவர் சேசுவிடம், ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! என்றார். சேசு அவரிடம், என் ஆடுகளை மேய் என்றார்” (யோ 21:16. அர்ச்.இராயப்பரிடம், “சீமோனே நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டது போல் நம்மிடமும் கேட்டால் நாமும் சீமோன் இராயப்பரைப்போல ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா ” (யோ 21:17) என்று பதில் சொல்லுவோமா? அர்ச். இராயப்பரைப் போன்று நாமும் சேசுவின் திரு இருதயத்திற்கு நமது அன்பைக் காண்பிக்க வேண்டுமானால் நம்முடைய வாழ்வு உண்மையான கிறிஸ்தவனுக்குரிய உத்தம வாழ்வாகவும், சேசுவின் திரு இருதயத்திற்கு விருப்பமான வாழ்வாகவும் இருக்கவேண்டும். இவ்வுலக தீய நாட்டங்களை விலக்கித்தள்ள வேண்டும். கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதிலும், சேசுவின் திரு இருதயத்திற்கு உகந்த புண்ணியங்களாகிய தாழ்ச்சி, பிறரன்பை கடைப்பிடிப்பதிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
நமது இருதயத்தில் திருஇருதய அன்பும், பாவ நாட்டமும் ஒன்றாகக் குடியிருக்க முடியாதென்பதை மறந்துப் போகக் கூடாது. நமது விருப்பு வெறுப்புகளை சேசுவின் திரு இருதய அன்பிற்காக வெறுத்து வெற்றி கொண்டு புனிதர்களைப் போல் திருஇருதயத்தோடு என்றும் நிலைத்திருக்க தீர்மானிப்போம்.
அர்ச்.மார்கரீத் மரியா சொல்வதைக் கேளுங்கள்: நமது இதயம் எவ்வளவு சிறிதாக இருக்கிறதென்றால் அதில் இரண்டு அன்பு இருக்க இடமில்லை. தேவனுடைய அன்புக்காக மட்டும் நமது இதயம் படைக்கப்பட்டிருப்பதால் அந்த இதயத்தில் வேறு அன்பும் நுழைவதால் அதற்கு சமாதானமே கிடையாது.
செபம் :
சேசுவின் மதுரமான திரு இருதயமே, என் சிநேகமாயிரும்.
சேசுவின் திருஇருதய நவநாள்.
கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய சேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்…

Comments are closed.