ஜுன் 3 : நற்செய்தி வாசகம்

அவர் வாழ்வோரின் கடவுள்; இறந்தோரின் கடவுள் அல்லர்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27
அக்காலத்தில்
உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, ஒருவர் மகப்பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்தார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும்போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக, அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்தது இல்லையா? ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே’ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மறையுரைச் சிந்தனை (ஜூன் 03)
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள்
இப்போது லண்டனில் உள்ள தூய பவுல் பேராலயம் இருக்கின்ற இடத்தில் ஒரு பேராலயம் இருந்தது. அந்தப் பேராலயமானது 1666 ஆம் ஆண்டு இலண்டனில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் அழிந்துபோனது.
எல்லாம் முடிந்துபோனது என்று ஏனையோர் இருந்த வேளையில் கிறிஸ்டோபர் வரேன் (Christoper Wren) என்ற கட்டடக் கலைஞர், பேராலயம் இருந்த அதே இடத்தில் புதிதாக ஓர் ஆலயம் கட்டத் தொடங்கினார். அந்த ஆலயம் கட்டத் தொடங்குவதற்கு முன்பாக எரிந்துபோன பழைய ஆலயத்தை ஒரு பார்வையிட்டார். அப்போது அவருடைய கண்ணில் ஒரு கல்வெட்டுப் பட்டது. அந்தக் கல்வெட்டு லத்தின் மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இதுதான் “I Shall rise again”. அதாவது நான் மீண்டுமாக (உயிர்த்)தெழுவேன் என்று பொறிக்கப்பட்ட அந்த வசனத்தைப் படித்ததும் கிறிஸ்டோபர் வரேன் மிகுந்த உற்சாகமடைந்தார். அந்த உற்சாகத்திலே 35 ஆண்டுகளில் இப்போது இருக்கின்ற தூய பவுல் பேராலயத்தைக் கட்டி எழுப்பினார்.
இயேசு உயிர்த்தெழுந்தார் இது நம்முடைய நம்பிக்கை. அவர் உயிர்தெழுந்தது போன்று நாமும் உயிர்த்தெழுவோம் இதுவும் நம்முடைய நம்பிக்கையாக இருக்கின்றது ( 1 கொரி 15:20). இதில் நம்பிக்கை கொள்ளாத எவரும் கிறிஸ்தவரே இல்லை என்பதுதான் உண்மை.
நற்செய்தி வாசகத்தில் சதுசேயர்கள் சிலர் இயேசுவிடம் வந்து, அவரைத் தங்களுடைய பேச்சில் சிக்க வைக்க நினைக்கிறார்கள். இந்த சதுசேயர்கள் யாரென்றால், யூத சமூகத்தில் இருந்த பணக்காரர்களும் மேட்டுக்குடியினரும் ஆவர். இவர்களுக்கு திருநூலின் முதன் ஐந்து நூல்களைத் (Pentatuch) தவிர ஏனையவற்றில் நம்பிக்கை கிடையாது. அதுபோன்று வானதூதர்களின் மீதும் உயிர்த்தெழுதலின் மீதும் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்படிப்பட்டவர்கள்தான் இயேசுவிடம் வந்து ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்கள் எழுப்பும் கேள்வி இதுதான்: சகோதரர்கள் எழுவர் இருக்கின்றார், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்து போய்விடுகின்றான், அதற்கு அடுத்தவனும் அப்பெண்ணை மணந்து இறந்து போய்விடுகின்றான். இப்படியாக எழுவரும் அப்பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்து போய்விடுகிறார்கள். இறுதியாக அப்பெண்ணும் இறந்து போய்விடுகிறார். அப்படியாயின், உயிர்த்தெழுதலின் போது அப்பெண் யாருக்கு மனைவியாக இருப்பார். ஏனென்றால், அந்தப் பெண் ஏழு பேரையும் தன்னுடைய கணவராக ஏற்றுக்கொண்டாரே”.
சதுசேயர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி மிகவும் தந்திரமானது என்றாலும், இயேசு அவர்களுக்கு அவர்கள் நம்பிய திருநூலின் முதல் ஐந்து நூல்களில் ஒன்றான விடுதலைப் பயண நூலிலிருந்து விளக்கம் தருகின்றார். ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு முட்புதரில் தோன்றியபோது தன்னை, “ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோப்பின் கடவுள் என்று சொல்லிவிட்டு, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றுரைப்பார் (விப 3: 6,14). இந்த நிகழ்ச்சியை இயேசு அவர்களுக்குச் சுட்டிக்காட்டிவிட்டுச் சொல்வார், கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக வாழ்வோரின் கடவுள் என்று. இதன்வழியாக சதுசேயர்கள் நம்பிய முதல் ஐந்து நூற்களிலேயே உயிர்த்தெழுதலுக்கான சான்று இருக்கின்றது என்று இயேசு அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். மேலும் ‘ஒருவர் இறந்து உயிர்த்தெழும்போது அவர் மண்ணகத்தில் இருப்பது போன்று அல்லாமல், வானதூதர்களைப் போன்று இருப்பார்’ என்றும் இயேசு அவர்களுக்கு விளக்கம் தருகின்றார்.
இயேசு சதுசேயர்களுக்கு அளித்த பதிலிலிருந்து நாம் ஒருசில உண்மைகளைக் கண்டுகொள்ளலாம். அதில் முதலாவது, இறந்து உயிருடன் நாம் எழுப்பப்படும் போது இவ்வுலகத்தில் இருப்பது போன்று இருக்க மாட்டோம், மாறாக வானதூதர்களைப் போன்றும் கடவுளின் மக்களாக இருப்போம் என்பதாகும். இப்படி நாம் வானதூதர்களாகவும் கடவுளின் மக்களாகவும் இருக்கின்றபோது நிலையான மகிழ்ச்சியைப் பெறுவோம் என்பது உறுதி.
அடுத்ததாக இயேசுவின் பதிலிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் செய்தி, நம் கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக வாழ்வோரின் கடவுள் என்பதாகும். அப்படியானால் அவர் இன்றைக்கும் நம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆழமான உண்மையாக இருக்கின்றது. கடவுள் நம்மோடு வாழும்போது நமக்கென்ன கவலை (திபா 23:1).
ஆகையால், கடவுள் இன்றைக்கும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்களாய், எல்லாவித கவலைகளிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்; இந்த மண்ணகத்தில் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

Comments are closed.