திருத்தந்தை துவக்கி வைத்த மருத்துவ உதவி வாகனப்பணி

வத்திக்கானின் மருத்துவ உதவி ஊர்தி ஒன்றை, உரோம் நகரில் தெருவில் வாழ்கின்ற ஏழைகளுக்கென அர்ப்பணித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெந்தகோஸ்து பெருவிழாவன்று, இந்த ஊர்தியை உரோம் தெருவாழ் ஏழைகளுக்கென அர்ப்பணித்த திருத்தந்தை, கர்தினால் Konrad Krajewski அவர்களின் கண்காணிப்பின்கீழ் செயல்படும் பாப்பிறை பிறரன்பு அலுவலகத்திடம் இதனை ஒப்படைத்தார்.

வத்திக்கான் பதிவு எண்ணுடன், வத்திக்கானிலுள்ள மருத்துவ உதவி வாகனங்களுடன் இயங்கவுள்ள இந்த ஊர்தி, உரோம் நகரில் தெருவில் வாழ்கின்ற ஏழைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெருவாழ் ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருத்தந்தையால் துவக்கப்பட்டுள்ள இந்த வாகன உதவி,  1983ம் ஆண்டு உரோமின் முக்கிய இரயில் நிலையமான, தெர்மினி அருகே வீடின்றி படுத்திருந்த Modesta Valenti என்ற வயது முதிர்ந்த பெண் ஒருவர் நோயுற்றபோது, மருத்துவ உதவி வாகனத்திற்கு அழைப்புவிடுத்தும், மறுக்கப்பட்டு, 4 மணி நேர காத்திருப்புக்குப்பின் உயிரிழந்ததை நினைவூட்டுவதாக உள்ளது. இந்த பெண்மணியின் பெயரால் உரோம் நகரின் ஒரு தெரு இன்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தையால் துவக்கிவைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ உதவி வாகனப்பணியுடன், உரோம் நகரின் ஏழ்மைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கென பணியாற்றும் நடமாடும் சிறு மருத்துவமனை, புனித பேதுரு வளாகத்திலிருந்து இயங்கும் இரக்கத்தின் அன்னை முதலுதவி சிறு மருத்துவமனை ஆகியவையும் தொடர்ந்து செயல்படும்.

Comments are closed.