நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 03)

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம்
புதன்கிழமை
மாற்கு 12: 18-27
சதுசேயர்கள் என்னும் குழப்பவாதிகள்
நிகழ்வு
அது ஓர் அழகான கடற்கரை. அந்தக் கடற்கரையில் ஆயிரங்கால் பூச்சி ஒன்று தன்னுடைய இணையோடு மெல்ல நடந்து சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது வேகமாகப் பறந்து வந்த காகம் ஒன்று, அவற்றின் அருகே வந்து நின்றுகொண்டு, ஆண் ஆயிரங்கால் பூச்சியோடு பேச்சுக் கொடுக்கத் தொடங்கியது.
“ஆயிரங்கால் பூச்சியே! உன்னை நினைக்கையில் எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது! உன்னிடத்தில் நான் நீண்டநாள்களாக ஒருசில கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் அதற்கு நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. என்னுடைய கேள்விகள் இதோ: நீ நடந்து செல்கையில் எந்தத் காலை முன் வைப்பாய்? எந்தக் காலைப் பின்வைப்பாய்? அடுத்ததாக, இரண்டு கால்களை வைத்துக்கொண்டு சமாளிப்பதே எனக்குக் கடினமாக இருக்கின்றபொழுது, ஆயிரங்கால்களை வைத்துக்கொண்டு நீ எப்படிச் சமாளிக்கின்றாய்? கொஞ்சம் விளக்கமாகச் சொல்வாயா?”
காகம் இப்படியெல்லாம் கேள்வி கேட்டதும், ஆயிரங்கால் பூச்சி சிந்திக்கத் தொடங்கியது. அது சிந்திக்க சிந்திக்க அதற்குத் தலைசுற்றத் தொடங்கியது. எப்படியோ நிலைமையைச் சமாளித்துக்கொண்ட ஆயிரங்கால் பூச்சி காகத்திடம், “காகமே! இதுவரை யாரும் என்னிடம் இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்டதில்லை. நீ இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்டபின்பு, எனக்கு எந்தக் காலை முன் வைப்பது, எந்தக் காலைப் பின் வைப்பது என்று குழப்பமாக இருக்கின்றது” என்றது.
ஆயிரங்கால் பூச்சி சொன்னதைக் கேட்டு சத்தமாகச் சிரித்த காகம், “உன்னைக் குழப்புவதற்குத்தான் இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்டேன்” என்று சொல்லிவிட்டு வானில் பறந்துசென்றது.
வேடிக்கையான நிகழ்வாக இருந்தாலும், இது உணர்த்துகின்ற செய்தி மிகவும் ஆழமானது. பலர் இந்த நிகழ்வில் வருகின்ற காகத்தைப் போன்றுதான், ஒன்றைக் குறித்துத் தெளிவு பெறவேண்டும் என்பதற்கு கேள்வி கேட்பதை விடவும், மற்றவர்களைக் குழப்பமே கேள்வி கேட்பார்கள். நற்செய்தியிலும், இயேசுவிடம் வருகின்ற சதுசேயர்கள் தங்களுடைய கேள்வியால் இயேசுவைக் குழப்பவும், அவரைச் சிக்கலில் மாட்டிவிடவும் நினைக்கின்றார்கள். அவர்களுக்கு இயேசு என்ன பதில் கூறினார்… அவர் கூறிய பதிலிலிருந்து நாம் என்னென்ன உண்மைகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்து பார்ப்போம்.
உயிர்ப்பு இல்லையென்று மறுத்த சதுசேயர்கள்
யூத சமூகத்தில் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்கள் இந்தச் சதுசேயர்கள். இவர்கள் நம்பியதெல்லாம் பழைய ஏற்பாட்டில் உள்ள முதல் ஐந்நூல்களைதான். இந்த ஐந்து நூல்களில் உயிர்ப்பு பற்றி எதுவும் சொல்லப்படவில்லை; அதனால் உயிர்ப்பு என்ற ஒன்று கிடையவே கிடையாது; வானதூதர்களும் கிடையாது என்று சொல்லிவந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்பதற்காக உயிர்ப்பு தொடர்பான ஒரு கேள்வியோடு வருகின்றார். ஒரு பெண்ணை மணக்கின்ற ஒருவர் மகப்பேறின்றி இறந்தால், அவனுடைய சகோதரனே, அந்தப் பெண்ணை மணந்துகொண்டு, அவருக்கு மகப்பேற்றினைத் தரவேண்டும் என்பது மோசேயின் சட்டம் (இச 25: 5-6). இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, உயிர்ப்பு தொடர்பான கேள்வியோடு இயேசுவிடம் வருகின்ற சதுசேயர்களின் எண்ணமெல்லாம், தங்களுடைய கேள்விக்கு இயேசுவால் பதில் சொல்லவே முடியாது என்பதாகத்தான் இருந்திருக்கும்; ஆனால், இயேசு அவர்களுக்கு மிகத் தெளிவான பதிலைச் சொல்லி, அவர்களுடைய வாயை அடைக்கின்றார்.
உயிர்ப்பை மறுத்ததன் மூலம் கடவுளின் வல்லமையை மறுத்த சதுசேயர்கள்
இயேசு, சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு, அவர்கள் ஏற்றுக்கொண்ட ஐந்நூலிருந்தே பதிலளிகின்றார். விடுதலைப் பயண நூல் 3:6 ஐ மையமாக வைத்துப் பதில் சொல்லும் இயேசு, சதுசேயர்களிடம், உங்களுக்கு மறைநூலைப் பற்றிய அறிவில்லை; கடவுளின் வல்லமையைப் பற்றியும் அறிவில்லை என்று தெளிவான விளக்கம் தருகின்றார். ஒருவேளை இந்தச் சதுசேயர்கள் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை (லூக் 1: 37) என்பதை ஏற்றுக்கொண்டிருந்தால், உயிர்ப்பையும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கடவுளைக் குறித்த போதிய தெளிவில்லாம் இருந்ததால்தான், இயேசுவிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். இயேசு சதுசேயர்களுக்கு இப்படிப் பதில் சொன்னதால் அவர்கள் வாயடைத்துப் போகின்றார்கள்.
ஆம், கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள். அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும். ஆகையால், நாம் கடவுளின் வல்லமையை உணர்ந்தவர்களாய், அவருடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் நடப்போம்.
சிந்தனை
‘உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத் தருவார்’ (எசா 54: 13) என்பார் எசாயா இறைவாக்கினர். ஆகையால், நாம் கடவுள் கற்றுத் தருவதைத் தெளிவுறக் கற்று, அதை மற்றவர்களுக்கும் கற்பிப்போம். இறைவல்லமையை உணர்ந்தவர்களாய் இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.