நற்செய்தி வாசக மறையுரை ஜூன் 01

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம்
திங்கட்கிழமை
மாற்கு 12: 1-12
மிகுந்த பலனை எதிர்பார்க்கும் கடவுள்
நிகழ்வு
ஊருக்கு வெளியே வீடுகட்டி, பல ஆண்டுகளாக அதில் தன்னுடைய குடும்பத்தோடு வாழ்ந்து வந்த மாணிக்கத்தின் வீட்டிற்கு முன்பாக ஒரு மாமரம் இருந்தது. பருவ காலத்தில் நன்றாகக் கனிதந்து வந்த அந்த மாமரம், ஏனோ சில ஆண்டுகளாகக் கனிகொடுக்காமல், பட்டுப் போகத் தொடங்கியது.
மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்துபோன அவருடைய நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் யாவரும் அவரிடம், “மரம்தான் பட்டுப்போய்விட்டதே! இன்னும் எதற்கு இந்த மரத்தை இப்படியே வைத்திருக்கின்றீர்கள்; பேசாமல் வெட்டிவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள். மாணிக்கத்திற்கு அந்த மரத்தை வெட்ட விருப்பமில்லை. காரணம், அவர் தன்னுடைய வீட்டைக் கட்டத் தொடங்கியபொழுது, அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர், ஒரு மாங்கன்றைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்து, ‘இதை நீ கட்டிக்கொண்டிருக்கின்ற உன் வீட்டிற்கு முன்பாக நட்டு வை. பின்னால் இது வளர்ந்து நிழலும் கனியும் தரும்’ என்று சொல்லிவிட்டுப் போனார். அதைத்தான் அவர் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக நட்டு வைத்து, ஒருசில ஆண்டுகளில் அதிலிருந்து நிழலும் கனிகளையும் பெற்றுவந்தார்.
இப்படி நன்றாகக் கனியும் நிழலும் தந்த மரம், திடீரென பட்டுப்போனதும், அதை எப்படி வெட்டுவது என்பதுதான் மாணிக்கத்திற்குப் பெரிய யோசனையாக இருந்தது. இது குறித்து அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஒருநாள் அந்த மாமரத்தின் அடியில் சென்று, அதனைக் கட்டியணைத்துக் கொண்டு, அதனோடு அவர் பேசினார்; பட்டுப்போயிருந்த அதன் கிளைகளைப் பிடித்துத் தடவிக்கொடுத்தார். இது ஓரிரு நாள்கள் தொடர்ந்தன. இடையிடையே அவர் அதற்குத் தண்ணீர் ஊற்றி, உரமும் போட்டார். ஒருவாரம் கழித்து, அவர் அந்த மாமரத்தைப் பார்த்தபொழுது, அதில் இலைகள் மெல்ல அரும்பத் தொடங்கின. அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஆம், அந்த ஆண்டில் அம்மாமரத்திலிருந்து அவருக்கு மிகுதியான பலன் கிடைத்தது.
இந்த நிகழ்வில் வருகின்ற மாணிக்கம் எப்படி, தன்னுடைய வீட்டிற்கு முன்பாக இருந்த மாமரம் நல்ல கனிகளையும் நிழலையும் தரவேண்டும் என்று எதிர்பார்த்தாரோ, அப்படி இறைவனும் நம்மிடமிருந்து நல்ல பலனை எதிர்பார்க்கின்றார். இத்தகைய செய்தியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
எல்லாவற்றையும் செய்துதரும் இறைவன்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, கொடிய குத்தகைக்காரர் உவமையைச் சொல்கின்றார். இயேசு இந்த உவமையைச் சொல்லக் காரணம், அதிகாரத்தில் இருந்த தலைமைக் குரு, மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் (மாற் 11:27) ஆகியோரின் வெளிவேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டத்தான். இவர்கள் தங்களிடம் இருந்த அதிகாரத்தைக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்தார்கள்; ஆனால், உண்மையில் இவர்களுடைய வாழ்க்கை போலித்தனம் மிகுந்ததாக இருந்து. அதனால்தான் இயேசு இந்த உவமைச் சொல்கின்றார்.
யூதர்களுக்குத் திராட்சைத் தோட்டம் என்பது நன்கு அறிமுகமான ஒன்று (திபா 80: 8-16; எசா 5: 1-7; எரே 2: 21). இன்னும் சொல்லப்போனால், திராட்சைத் தோட்டத்திலிருந்து கிடைத்த திராட்சை இரசத்தால்தான் அவர்களுடைய பொருளாதாரம் செழித்தது. இதைப் பின்புலமாக வைத்து, இயேசு உவமையைச் சொல்லத் தொடங்குகின்றார். இயேசு சொல்லும் இந்த உவமையின் முதல்பகுதியில், திராட்சைத் தோட்ட உரிமையாளர் அதற்கு ‘நன்றாக வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டியதாகச் சொல்கின்றார். இவையெல்லாம் திராட்சைத் தோட்ட உரிமையாளர், திராட்சைத் தோட்டம் நன்றாக வளர்வதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்தார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. கடவுளும்கூட, நாம் நன்றாய் இருப்பதற்கு எல்லாவற்றையும் செய்துதருகின்றார் என்பதை இங்கு நாம் இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.
பலனை எதிர்பார்க்கும் கடவுள்
திராட்சைத் தோட்ட உரிமையாளர் தன்னுடைய திராட்சைத் தோட்டத்திற்கு எல்லாவற்றையும் செய்துகொடுத்து, அதைக் குத்தகைக்கு விடுகின்றார். திராடசைத் தோட்டத்தைக் குத்தகைக்கு வாங்கியவர் உரிய காலத்தில் குத்தகைப் பணத்தைத் தருவதுதான் முறை; ஆனால், இந்தக் கொடிய குத்தகைக்காரர், குத்தகையை வாங்கிப் போன பணியாளர்களையும், கடைசியில் திராட்சைத் தோட்ட உரிமையாளரின் மகனையும் கொன்றுபோட்டுவிட்டு, சொத்தைத் தங்களுக்கு உரியதாக்க நினைக்கின்றார்கள். இப்படிப்பட்ட வேளையில்தான் திராட்சைத் தோட்ட உரிமையாளர், அந்தக் கொடிய குத்தகைக்காரர்களை அப்புறப்படுத்திவிட்டு, உரிய காலத்தில் பலன்தரும் புதிய குத்தகைக்காரர்களிடம் திராட்சைத் தோட்டத்தைக் கொடுக்கின்றார்.
யூதர்கள், அதிலும் குறிப்பாகத் தலைமைக் குரு, மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் உரிய பலனைக் கொடுக்கவில்லை. அதனால்தான் அவர்களிடமிருந்து இறையாட்சி அப்புறப்படுத்தப்பட்டு, அதற்கு உரிய பலனைத் தரும் பிற இனத்து மக்களிடம் கொடுக்கப்பட்டது. கடவுள் நமக்கு எல்லா வாய்ப்பு வசதிகளையும் கொடுத்திருக்கின்றார் எனில், அவற்றைக் கொண்டு, நாம் உரிய பலனைத் தரவேண்டும். ஏனெனில், நாம் மிகுந்த கனிந்து இயேசுவின் சீடராய் இருப்பதே தந்தைக் கடவுளுக்கு மாட்சியளிக்கும் செயலாக இருக்கின்றது (யோவா 15: 8).
நாம் உரிய பலனைத் தருகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நீங்கள் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது’ (யோவா 15: 4) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவோடு இணைந்திருப்போம். அதன்மூலம் மிகுந்த கனிதந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.