நற்செய்தி வாசக மறையுரை (மே 20)

பாஸ்கா காலம் ஆறாம் வாரம் புதன்கிழமை
யோவான் 16: 12-15
“உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்”
நிகழ்வு
ஒரு நகரில் இறைநம்பிக்கை இல்லாத பெரியவர் ஒருவர் இருந்தார். அவரிடம் பலரும் கிறிஸ்துவைக் குறித்து அறிவித்தார்கள். யாருடைய போதனையாலும் அவர் ஈர்க்கப்படவில்லை; மனமும் மாறவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நகரில் இருந்த சாதாரண ஒரு கிறிஸ்தவர், அந்தப் பெரியவரிடம் கிறிஸ்துவைக் குறித்து அறிவித்தார். அந்தக் கிறிஸ்தவர் பெரியவரிடம் கிறிஸ்துவைக் குறித்து அறிவித்த ஒருசில மணிநேரங்களுக்குள், அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.
இச்செய்தியைக் கேள்விப்பட்டு, எல்லாரும் வியப்படைத்தார்கள். ஒருசிலர் அந்தப் பெரியவரிடம், “அது எப்படி திருவிவிலியத்தைக் கற்றுத் தேர்ந்தவர்களெல்லாம் கிறிஸ்துவைக் குறித்து உங்களிடம் அறிவித்தபொழுது மனம்மாறாத நீங்கள், ஒரு சாதாரண கிறிஸ்தவர், மற்றவர்களைப் போன்று மிகுதியாகப் படித்திராதவர் கிறிஸ்துவைக் குறித்து உங்களிடம் அறிவித்தவுடனே நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டீர்களே…! அது எப்படி?” என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தப் பெரியவர் மிகவும் பொறுமையாகப் பதில் சொன்னார்: “எல்லாரும் மூளையிலிருந்தே பேசினார்கள். அதனால் அவர்கள் தங்கள் தரப்பு நியாங்களை என்னிடம் எடுத்துச்சொல்லி, நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு முயற்சி செய்தார்களோ அன்றி, ஆத்மார்த்தமாகப் பேசவில்லை. ஆனால், கடைசியாக வந்த இந்த மனிதர் ஆத்மார்த்தமாக, உள்ளத்திலிருந்து பேசினார். மேலும் இவர் என்னிடம் இயேசுவைப் பற்றி அறிவித்தபொழுது, ஏதோவோர் ஆற்றல் என்னை ஆட்கொள்வது போன்று நான் உணர்ந்தேன். அதனால்தான் நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மிகுதியாகப் படித்திராத சாதாரண கிறிஸ்தவர், கிறிஸ்துவைப் பற்றி அறிவித்ததால், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பெரியவர் சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றன. அது என்னவெனில், மிகுதியாகப் படித்திராத கிறிஸ்தவர் அவரிடத்தில் பேசியபொழுது, ஏதாவோர் ஆற்றல் அவரை ஆட்கொண்டதாகச் சொன்னார் அல்லவா…! அந்த ஆற்றல்தான் தூய ஆவியார். ஆம், தூய ஆவியார்தான் அவருக்கு உண்மையை வெளிப்படுத்தி, அவரைக் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்தார்.
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் தூய ஆவியாரைக் குறித்துப் பேசும்பொழுது, ‘உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்’ என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
முழு உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியார்
இயேசு தன்னுடைய சீடர்களிடம், துணையாளராம் தூய ஆவியாரைக் குறித்துத் தொடர்ந்து பேசி வருகின்றார். இதற்கு முந்தைய பகுதியில் (நேற்றைய நற்செய்தியில்) இயேசு தூய ஆவியாரைக் குறித்துப் பேசும்பொழுது, உலகினர் நடுவில் அவர் எத்தகைய பணிகளை ஆற்றுவார் என்பதைக் குறித்துப் பேசியிருப்பார். இன்றைய நற்செய்தியிலோ, சீடர்கள் நடுவில் அவர் எத்தகைய பணிகளை ஆற்றுவார் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசு தூய ஆவியாரைக் குறித்துப் பேசுகின்றபொழுது, “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்திச் செல்வார்” என்கின்றார்.
முழு உண்மை எது எனத் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசு தன்னைக் குறித்துக் குறிப்பிடும்பொழுது, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவா 14: 6) என்பார். அப்படியானால், தூய ஆவியார் முழு உண்மையாம் இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்துவர என்றொரு பொருளில் எடுத்துக் கொள்ளலாம். இதைவிடவும், இயேசு ஏன் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றாம்நாள் உயிர்த்தெழவேண்டும் என்கின்ற உண்மை சீடர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. இந்த உண்மையைத் தூய ஆவியார் வரும்பொழுது அவர்களுக்கு வெளிப்படுத்துவார் என்கின்றார்.
வரப்போகிறவற்றை முன்னறிவிப்பார்
இயேசு தூய ஆவியாரைக் குறித்துச் சொல்லக்கூடிய இரண்டாவது செய்தி, வரப்போகிறவற்றை அறிவிப்பார் என்பதாகும். ஆமாம், தூய ஆவியார் எதிர்காலத்தில் நிகழப் போகிறவற்றைச் சீடர்களுக்கு அறிவித்து, அவர்களை அதற்கேற்றாற்போல் தயாரிப்பார்; இவ்வாறு அவர் தன்னை மாட்சிப்படுத்துவார் என்கின்றார் இயேசு.
ஆகையால், இயேசுவின் சீடர்களாகிய நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்தி, வரப்போகிறவற்றை அறிவிப்பவராக இருக்கும் தூய ஆவியாரால் அருள்பொழிவு பெற்றவர்களாய் (1யோவா 2:20) நாம் அவருடைய வழிகாட்டுதலின்படி நடந்து இறைவனுக்கு உகந்தவர்களாய் வாழ்வோம்.
சிந்தனை
‘ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு’ (1 கொரி 3:17) என்பார் புனித பவுல். ஆகையால், நமக்கு உண்மையை வெளிப்படுத்தி விடுதலை அளிக்கும் தூய ஆவியார் கட்டும் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.