நற்செய்தி வாசக மறையுரை (மே 15)

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
யோவான் 15: 12-17
“உங்களை நான் நண்பர்கள் என்றேன்”
நிகழ்வு
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த நேரம் அது. அப்பொழுது, இராணுவத்தில் பணியாற்றும்பொழுது, தவறுசெய்த இராணுவ வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையைக் குறைக்கவேண்டும் என்று பெரிய பெரிய மனிதர்களிடமிருந்து அவருக்குப் பரிந்துரைக் கடிதங்கள் வந்தன. ஆபிரகாம் லிங்கன் அவற்றைக் கண்டு கொள்ளாமல், எடுத்து ஓராமாக வைத்துவந்தார்.
இந்நிலையில், இராணுவத்தில் பணிசெய்யும்பொழுது, தவறுசெய்ததற்காக, தண்டனை விதிக்கப்பட்ட ஒரு இராணுவ வீரருக்கு எந்தவொரு பரிந்துரைக் கடிதமும் வராததைக் கண்டு, ஆபிரகாம் லிங்கம் மிகவும் வியந்தார். உடனே அவர் அந்தக் குறிப்பிட்ட இராணுவ வீரரைத் தன்னிடம் வரவழைத்து இது தொடர்பாகப் பேசினார்.
“வழக்கமாகத் தவறுசெய்யும் இராணுவ வீரர்களின் தண்டனையைக் குறைக்கவேண்டும் என்று அவர்களுக்கு அறிமுகமான பெரிய பெரிய ஆள்களிடமிருந்தெல்லாம் பரிந்துக் கடிதம் வரும்; ஆனால், உமக்கு அது தொடர்பாக எந்தவொரு பரிந்துக் கடிதமும் வரவில்லையே…! உனக்குக் நண்பர்கள் என்று யாருமே இல்லையா..?” என்றார் ஆபிரகாம் லிங்கன். “ஆமாம்! எனக்கு நண்பர்கள் என்று யாருமே கிடையாது” என்று அமைந்த குரலில் சொன்னார் அந்த இராணுவ வீரர். இதைக் கேட்டு இன்னும் வியப்படைந்த ஆபிரகாம் லிங்கன், “உனக்கு நண்பர் என்று யாருமே இல்லை என்றால், நான் உனக்கு நண்பராக இருந்து, உன்னுடைய தண்டனையைக் குறைக்கிறேன்” என்று சொல்லி, அந்த இராணுவ வீரரின் தண்டனையைக் குறைத்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஆபிரகாம் லிங்கன், ஒரு சாதாரண இராணுவ வீரரை எப்படித் தன்னுடைய நண்பர் என்று அழைத்தாரோ, அப்படி இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களை நண்பர் என்று அழைக்கின்றார். இயேசு இவ்வாறு அழைப்பதில் உள்ள சிறப்பு என்ன என்பதையும், நண்பர்களுக்காக இயேசு என்ன செய்தார் என்பதையும் இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பணியாளர்களை நண்பர்கள் என்று அழைத்த இயேசு
யூத இரபிகள் தங்களுடைய சீடர்களைப் பணியாளர்கள் (Servants) என்றே அழைப்பார்கள். அதுதான் வழக்கமாக இருந்தது; ஆனால் ஆண்டவர் இயேசு, அந்த வழக்கத்திற்கு முற்றிலும் மாறாகத் தன்னுடைய சீடர்களை நண்பர்கள் என்கின்றார். இவ்வாறு இயேசு மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு நின்றார். இயேசு தன்னுடைய சீடர்களை நண்பர்கள் என்று அழைத்ததில், வியப்பொன்றும் இல்லை. ஏனென்றால், ஓர் அடிமையைப் போன்று தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவினார். அப்படிப்பட்டவர் தன்னுடைய சீடர்களை நண்பர்கள் என்று அழைப்பதில் என்ன வியப்பிருக்கின்றது!
நண்பர்களுக்காக உயிரைத் தந்த இயேசு
இயேசு, தன்னுடைய சீடர்களைப் பெயருக்கு நண்பர்கள் என்று அழைத்துவிடவில்லை. இன்றைக்கு ஒருசில தலைவர்கள் தங்களுடைய தொண்டர்களை, மக்களை, ‘இரத்தத்தின் இரத்தமே!’ என்று அழைப்பது போல் அவர் தன் சீடர்களை நண்பர்கள் என்று அழைக்கவில்லை. மாறாக, உண்மையாகவே அழைத்தார். இதைவிடவும், அவர் தன் நண்பர்களாகிய நமக்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார். இயேசு தன்னுடைய உயிரைக் கொடுக்கின்ற அளவுக்கு நாம் தகுதியானவர்கள் கிடையாது; பாவிகள். அப்படியிருக்கும்பொழுதே அவர் தன்னுடைய உயிரை நமக்காகக் கொடுத்துத் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார் (உரோ 5: 7-8).
நண்பர் இயேசுவுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?
இயேசு தன்னுடைய சீடர்களை – நம்மை – நண்பர்கள் என்று அழைத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்காக – நமக்காகத் – தன் உயிரைக் கொடுத்தார் எனில், அதற்குக் கைம்மாறாக, நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்னவெனில், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருடைய அன்பில் நிலைத்திருப்பதுதான். நாம், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருக்கவேண்டும். அதுதான் அவருடைய விருப்பமாக இருக்கின்றது. ஆகையால், நாம் நமக்காகத் தன்னுயிர் தந்த நம் நண்பன் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருடைய அன்பில் நிலைத்திருந்து, அவருடைய நண்பர்களாக விளங்குவோம்.
சிந்தனை
‘நல்ல நண்பர் நம் இன்பத்தைப் பெருக்கி, துன்பத்தைக் குறைக்கின்றார். இவ்வாறு அவர் நம்முடைய இன்பத்தை இரட்டிப்பாக்குகின்றார்; துன்பத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்’ என்பார் அடிஸன் என்ற சிந்தனையாளர். நம் அனைவருக்கும் நண்பவராக இருக்கும் இயேசு நம்முடைய துன்பத்தைப் பகிர்ந்து கொண்டு, இன்பத்தை இரட்டிப்பாக்கியத்தோடு மட்டுமல்லாமல், நமக்காக உயிரையும் தந்திருக்கின்றார். அப்படிப்பட்ட நல்ல நண்பன் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருடைய அன்பில் நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.