நற்செய்தி வாசக மறையுரை (மே 14)

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை
யோவான் 15: 9-11
நம்முடைய மகிழ்ச்சியை நிறைவுபெறச் செய்யும் இயேசுவின் வார்த்தைகள்
நிகழ்வு
ஒரு சிற்றூரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். கிறிஸ்தவரான இவரிடம் பலர் பணிசெய்து வந்தார்கள். ஒருநாள் இவருக்குப் பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் பரிசாக அவர்களுக்கு முன்பாகப் பணத்தையும் திருவிவிலியத்தையும் வைத்துவிட்டு, “இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்
முதலில் இவரிடம் வேலைபார்த்து வந்த காவலாளி வந்தார். அவர் பணக்காரரிடம், “ஐயா! எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் எனக்குத் திருவிவிலியம் வேண்டாம்; பணம் போதும்” என்று சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்துச் சென்றார். அவரைப் தொடர்ந்து, பணக்காரரிடம் வேலைபார்த்து வந்த தோட்டக்காரர் வந்தார். அவர் பணக்காரரிடம், “ஐயா! எனக்கு திருவிவிலியம் வேண்டும்தான்; ஆனால், என்னுடைய மனைவி நோய்வாய்ப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் பணம் மிகுதியாகத் தேவைப்படுகின்றது. அதனால் நானும் பணத்தை எடுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்துச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து பணக்காரரிடம் வேலை பார்த்து வந்த சமையல்காரர் வந்தார். அவர் பணக்காரரிடம், “ஐயா! எனக்கிருக்கின்ற வேலைக்குச் செய்தித்தாள் படிக்கவே நேரமில்லை; இதில் நான் எங்கு திருவிவிலியத்தை வாசிப்பது…? அதனால் நானும் பணத்தை எடுத்துக்கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்துச் சென்றார். இப்படி ஒருவர் பின் ஒருவராக வந்த எல்லாரும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்துச் சென்றனர்.
கடைசியாக அந்தப் பணக்காரரிடம் இருந்த ஆடு, மாடுகளைப் பாரமரித்து வந்த இளைஞன் வந்தான். அவனைப் பார்த்ததும் பணக்காரர், “தம்பி! உன்னிடம் நல்ல துணிமணி இல்லை; காலில் செருப்புகூட இல்லை. அதனால் உனக்குப் பணம் தேவைப்படும் என்று நினைக்கின்றேன். இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு நல்ல துணிமணிகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்” என்றார். அதற்கு அந்த இளைஞன், “ஐயா! எனக்கு நல்ல துணிகளையும் காலணிகளையும் வாங்குவதைவிட திருவிவிலியத்தை வாங்கவேண்டும் என்றுதான் ஆசை. ஏனெனில், திருவிவிலியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி என்னுடைய அம்மா என்னிடத்தில் சொல்லியிருகின்றார். அப்பொழுது என்னிடத்தில் திருவிவிலியம் வாங்குவதற்குப் பணம் இல்லை. இப்பொழுது நீங்களே திருவிவிலியத்தைப் பிறந்த நாள் பரிசாகத் தருவதால், அதை நான் பெற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் பணகாரரிடமிருந்து திருவிவிலியத்தைப் பரிசாக வாங்கிச் சென்றான்.
பணக்காரர் கொடுத்த திருவிவிலியத்தைப் பரிசாக வாங்கிச் சென்ற அந்த இளைஞன், அதைக் கருத்தூன்றி வாசித்து, அதன்படி நடக்கத் தொடங்கினான். இதனால் அவனுடைய உள்ளத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. இதற்கு முற்றிலும் மாறாக, பணத்தைப் பரிசாக பெற்றுச் சென்ற காவலாளியும் தோட்டக்காரரரும் சமையல்காரரரும் அது தீர்ந்ததும் நிம்மதி இழக்கத் தொடங்கினார்கள்.
ஆம், கடவுளின் வார்த்தை இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது. அப்படிப்பட்ட கடவுளின் வார்த்தையை நாம் வாசித்து, வாழ்வாக்கினோம் எனில், அதைவிட மகிழ்ச்சியளிக்கும் செயல் வேறெதுவும் இல்லை. நற்செய்தியில் இயேசு நாம் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் கற்பித்ததாகக் கூறுகின்றார். இயேசு கூறும் இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் மகிழ்ந்திருக்கவேண்டும் என்று விரும்பும் இயேசு
கடவுள், நாம் எப்பொழுதும் கவலைதோய்ந்த முகத்தோடு இருக்கவேண்டும் என்றோ அல்லது துக்கத்தோடு இருக்கவேண்டும் என்றோ விரும்புவதில்லை. மாறாக, நாம் அனைவரும் மகிழ்ந்திருக்கவேண்டும் என்றே விரும்புகிறார். அதனால்தான் இயேசு தான் சென்ற இடங்களிளெல்லாம் நன்மையே செய்து கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்து வந்தார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு, “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்“ என்று சொன்னது நாம் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதே இறைவனின் திருவுளமாக இருக்கின்றது என்பது நமக்குப் புரிகின்றது. நாம் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவேண்டும் வேண்டும் எனில், அதற்கு நாம், இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருக்கவேண்டும். அப்படிச் செய்தால், நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைந்திருந்து, அதன்மூலம் அவர் தருகின்ற மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நிரந்தரமில்லா வாழ்க்கையில் மக்களுக்கு மகிழ்ச்சியை விட வேறு என்ன வேண்டும்? மகிழ்ச்சியான மனிதனே மன்னன்’ என்பார் ஐ.பிக்கர்ஸ்டாஃப் என்ற அறிஞர். ஆகவே, நாம் உள்ளத்தளவில் மன்னர்களைப் போன்று வாழ்வதற்கு வழிவகை செய்யும் இயேசுவின் வார்த்தைளைக் கேட்டு நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.