தேவமாதாவின் வணக்கமாதம் – மே 14

தேவமாதாவும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் நசரேத்திலிருந்து பெத்லகேமுக்குச் செய்த பயணம்!
தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் அரசன் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிதல்.
சர்வேசுரனுடைய ஆலோசனை வேறு, மனிதனுடைய ஆலோசனை வேறு! பரம கர்த்தர் செய்து காட்டுகிற முயற்சிகளுக்கும் உலகத்திலுள்ள பெரியவர்கள் நடத்துகிற நியாயங்களுக்கும் வேற்றுமை இருக்கின்றது. அகுஸ்துஸ் அரசன் தன்னுடைய மகிமையையும் பெருமையையும் பாராட்டுவதற்கு தனது இராச்சியத்திலிருந்த சகல பிரஜைகளுடைய கணக்கை எழுத வேண்டுமெனக் கட்டளையிட்டான். ஆனால் சர்வேசுரன் இந்த அரசன் கட்டளை மூலமாக உலக மீட்பர் பெத்லகேம் என்னும் ஊரில் பிறப்பாரென்று தீர்க்கதரிசிகள் சொன்னவைகள் அனைத்தும் நிறைவேறும்படி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துகிறார். தேவமாதாவும் அர்ச். சூசையப்பரும் இந்த அரசன் கொடுத்த கட்டளை சர்வேசுரனின் சித்தம் என்று எண்ணி அவருடைய இரகசியமான திருவுளத்தை வணங்கி, அவர் தங்களைக் காப்பாற்றுவாரென்று நம்பி, தூரப் பயணத்தின் வருத்தங்களுக்கு அஞ்சாமல் தாமதமின்றி உடனே பெத்லகேம் ஊருக்குப் போகப் புறப்படுகிறார்கள். உங்கள் பெரியோர்கள் கற்பிக்கும் யாவற்றிலும் சர்வேசுரனின் சித்தத்தை தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் கண்ட வண்ணமே நீங்களும் கண்டுகொள்வீர்களாகில் மனக் கீழ்ப்படிதலானது மிகவும் இன்பகரமாயிருக்கும்.
தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் இப்பயணத்தில் அனுசரித்த புண்ணியங்கள்.
தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் செய்த பயணத்தை நாமும் பின்பற்றி அவர்கள் இப்பயணத்தில் காண்பித்த சுகிர்த புண்ணியங்களை சிந்திப்போம். அவர்கள் ஆண்டவருடைய திருவுளத்தை நிறைவேற்ற சுறுசுறுப்புடன் நடக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்ட தூரப் பயணத்தினாலும், தங்களுடைய எளிமையினாலும் கரடு முரடான வழிகளிலும், கால மாறுதலினாலும் வந்த வருத்தம் எல்லாவற்றையும் பொறுமையுடனும் மகிழ்ச்சியுடனும் சகித்துக் கொண்டார்கள். கெட்டுப்போன உலகத்தை மீட்க வரப்போகும் இரட்சகர் கொஞ்ச நேரத்துக்குள்ளே பிறப்பாரென்று தேவ சிநேகத்தினால் எரிகிற மனதோடு நினைத்துத் தியானித்துக் கொண்டிருந்தார்கள். நாம் தகுந்த சமயங்களில் தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் காண்பித்த நல்ல மாதிரிகைகளை பின்பற்றி நாம் செய்கிறதையும், நடக்கிறதையும், பேசுகிறதையும், செபத்தினாலும், பொறுமையினாலும், தேவசித்தத்துக்கு அமைதலினாலும் சீர்படுத்தக் கடவோம்.
பெத்லகேம் ஊரில் தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் அடைந்த நிந்தை அவமானம்.
இந்த வருத்தமுள்ள பயணத்துக்குப் பின்பு இவர்கள் பெத்லகேம் என்னும் ஊரை அடைந்து அதில் யாவராலும் புறக்கணிக்கப்பட்டு தங்குவதற்கு இடமின்றி தனிமையில் மிருகங்களுக்குக் கொட்டிலாயிருக்கும் ஓர் கற்பாறையின் குகையில் இறங்கினார்கள். இதோ சகல உலகங்களுக்கும் இராக்கினியினுடைய அரண்மனை! பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தவரும், வான மண்டலங்களில் சூரியனை மங்கச் செய்யும் ஒளியோடு வாழுகிற கர்த்தாவுமாய் இருக்கிற சேசுக்கிறிஸ்துநாதர் இதில் பிறக்க திருவுளங் கொண்டார். அவதரித்த தேவனே, நீர் பிறக்கிற வேளையிலேயே கஷ்டப்பட்ட மனிதானீர். நீர் உம்முடைய திருத்தாயுடனும், வளர்ப்புத் தந்தையுடனும் பட்ட புறக்கணிப்பையும் அவமானத்தையும் தரித்திரத்தையும், கஸ்திகளையும் நான் கண்டு எனக்கு வரும் நிர்ப்பாக்கியத்திலும் துயரத்திலும் பொறுமையின்றி முறைப்படுவானேன்? ஓ! அரச்.மரியாயே ஓ! அரச்.சூசையப்பரே, எனக்கு இப்பூவுலகில் ஏற்படும் தீமைகளில் நான் பொறுமையாயிருக்கும்படி எனக்குக் கிருபை செய்தருள வேண்டுமென்று உங்களை மன்றாடுகிறேன்.
செபம்.
ஓ! பரிசுத்த மரியாயே, பரிசுத்த தாயாரே, உம்முடைய பிதாவிடத்தில் சேசுக்கிறிஸ்துநாதர் மத்தியஸ்தராய் எனக்காக மனுப்பேசுகிறாரென்றும், நீரே உம்முடைய திருக்குமாரனிடத்தில் நல்ல உபகாரியாய் எனக்காக மன்றாடுகிறீரென்றும் நினைத்து உறுதியான நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். இன்று முதல் நான் சாகுமளவும் உம்மையும், உம்முடைய திருக்குமாரனையும் இடைவிடாமல் வேண்டிக்கொள்ளுவேன். நான் இந்நாள் மட்டும் செபம் செய்வதில் மிகவும் அசட்டையுள்ளவனாக இருந்தேன். இதனால் என் ஆத்துமமானது மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது. என்னுடைய ஆதரவே, எனக்கு மிகவும் அவசியமாயிருக்கிற தேவ வரமாகிய செபத் தியான சுகிர்த வரத்தை எனக்குப் பெறுவித்தருளும். நான் இடைவிடாமல் பக்தியுடனும் வணக்கத்துடனும் விசுவாச நம்பிக்கையுடனும் செபம் செய்ய எனக்கு கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறேன். நான் உம்மை இடைவிடாமல் பக்தியோடு வேண்டிக்கொள்வேனாகில் ஒருக்காலும் கெட்டுப்போக மாட்டேன்.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.

Comments are closed.