உண்மைக்கும், பொய்மைக்கும் இடையே வாழத் தூண்டுதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் உடன்பிறந்த உணர்வுடன் வாழ வேண்டிக்கொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலையில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில் அழைப்பு விடுத்தார்.

ஏப்ரல் 29, இப்புதனன்று, ஐரோப்பாவின் பாதுகாவலர்களில் ஒருவரான சியென்னா நகர் புனித காத்தரீன் திருநாளையொட்டி, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, ஐரோப்பிய ஒன்றியம் உடன்பிறந்த உணர்வுடன், முன்னோக்கிச் செல்ல வேண்டிக்கொள்வோம் என்று கூறினார்.

ஒளி-இருள், பொய்மை-உண்மை, ஆகிய முரண்பாடுகள்

இத்திருநாளன்று வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தை (1 யோவான் 1:5 – 2:2) மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாசகத்தில் கூறப்பட்டுள்ள, ஒளி-இருள், பொய்மை-உண்மை, ஆகிய முரண்பாடுகளை சுட்டிக்காட்டினார்.

ஒருவர் இருளிலோ, ஒளியிலோ நடக்காமல், இடைப்பட்ட நிலையில் நடப்பது, ஆபத்தானது என்று கூறிய திருத்தந்தை, உண்மைக்கும், பொய்மைக்கும் இடையே உள்ள தெளிவற்ற நிலையில் வாழ்வதற்கு நாம் தூண்டப்படுகிறோம் என்பதையும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

பொய்யர்களாக மாறிவிடும் ஆபத்து

பாவிகள் என்று பொதுப்படையாகக் கூறிக்கொண்டு, அதேவேளையில், “பாவம் நம்மிடம் இல்லை” என்றும், “நாம் பாவம் செய்யவில்லை” என்றும் கூறுவது நம்மை பொய்யர்களாக மாற்றிவிடும், நம் பாவங்களை நுணுக்கமாக உணர்வது முக்கியம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு தன்னிடம் வந்த ஒரு குழந்தை, தன்னை விளையாடுவதற்கு அனுமதிக்காத உறவினர் ஒருவருக்கு எதிராகக் கூறிய சொற்களை நுணுக்கமாக தன்னிடம் கூறியதை ஓர் எடுத்துக்காட்டாக கூறிய திருத்தந்தை, குழந்தைகளின் உள்ளத்தோடு, நம் பாவங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனதிற்காக செபிப்போம் என்று அழைப்பு விடுத்தார்.

குழந்தைகளை நாம் பின்பற்றவேண்டும்

தாங்கள் சொல்லவந்ததை தயங்காமல் கூறுவதில் குழந்தைகளை நாம் பின்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அண்மையில் தனக்கு மடல் ஒன்றை அனுப்பிய அந்திரேயா என்ற சிறுவனைக் குறித்துப் பேசினார்.

தனது திருப்பலிகளை கண்டுவரும் அந்திரேயா, சமாதானத்தைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லி, தான் கூறுவதைக் கண்டித்து, இந்த தொற்றுநோய் கட்டுப்பாடுகள் இருக்கும் நேரத்தில் சமாதானத்தைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லி அழைப்பு விடுப்பது தவறு என்று தன்னிடம் கூறியதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

ஒருவர் குழந்தை உள்ளத்தோடு, பணிவோடு வாழ்ந்தால், அவர் தான் ஒரு பாவி என்பதை மேலோட்டமாக, பொதுப்படையாகக் கூறாமல், தன் பாவத்தின் அனைத்து நுணுக்கங்களோடு தன்னை ஒரு பாவி என்று ஏற்றுக்கொள்வார் என்பதை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வதையே இயேசு விரும்புகிறார் என்பதைக் தன் மறையுரையில் இறுதியில் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்று இயேசு கூறிய சொற்களை மீண்டும் ஒருமுறை வாசித்து, அத்தகைய குழந்தை உள்ளம் பெறுவதற்கு செபிப்போம் என்று தன் மறையுரையை நிறைவு செய்தார்

Comments are closed.