தந்தையால் ஈர்க்கப்பட்டால் அன்றி, இயேசுவிடம் வர இயலாது

கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக, இறந்தோருக்காக, குறிப்பாக, எவ்விதப் பெயரும், முகவரியும் இன்றி இறந்தோருக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 30 இவ்வியாழன் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

பெயரின்றி இறந்தோருக்காக…

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், காலை ஏழு மணிக்கு திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், இந்தக் கொள்ளை நோயால் இறந்தோரை நினைவுகூருவோம் என்று கூறியபோது, இந்தக் கொள்ளைநோயின் காரணமாக இறந்த பலர், அடையாளம் ஏதுமின்றி, பொதுவான இடங்களில் அடக்கம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து, அவர்களுக்காக செபிப்போம் என்று அழைப்பு விடுத்தார்.

மேலும், இத்திருப்பலியில் மறையுரை வழங்கிய வேளையில், “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது” என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெறும் இயேசுவின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

தந்தையால் ஈர்க்கப்பட்டால் அன்றி…

ஒருவர், தன் சொந்த முயற்சியால் இயேசுவைக் குறித்த இறையியல் அறிவை வளர்த்துக்கொள்ளலாம், ஆனால், அவர், தந்தையால் ஈர்க்கப்பட்டால் அன்றி, இயேசுவையோ, அவரது மறையுண்மைகளையோ உண்மையிலேயே புரிந்துகொள்வது இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, இத்திருப்பலியில் வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் கூறப்படும் எத்தியோப்பிய அரச அலுவலரைப் பற்றிய நிகழ்வைச் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை.

எத்தியோப்பிய அரச அலுவலர்

இந்நிகழ்வின் துவக்கத்தில், தந்தையால் ஈர்க்கப்பட்ட பிலிப்பு, அரச அலுவலரை நெருங்கிச் சென்றார் என்றும், தேரில் அமர்ந்திருந்த அரச அலுவலர் ஏற்கனவே, ஒரு பக்திமானாக இருந்தபோதிலும், அவரை இறைவன் ஈர்த்ததன் விளைவாக, இறைவாக்கினர் எசாயா நூலை வாசித்தார், மற்றும், பிலிப்பை தன் தேரில் ஏற்றுக்கொண்டார் என்றும் திருத்தந்தை கூறினார்.

அரச அலுவலருக்கும், பிலிப்புக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் வழியே, அந்த அரச அலுவலர், தந்தையாம் இறைவனால் ஈர்க்கப்பட்டு, இயேசுவை முழுமையாக அறிந்துகொண்டார் என்றும், இதுவே, அவரை, திருமுழுக்கு பெறுவதற்குத் தூண்டியது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

மறைபரப்பும், கொள்கைப்பரப்பும்

கிறிஸ்தவர்களாகிய நாம் மேற்கொள்ளும் மறைப்பணிகள், தந்தையாம் இறைவனால் ஈர்க்கப்பட்டு நடைபெற்றால், நம் சாட்சிய வாழ்வால் மக்கள் இயேசுவிடம் கொண்டுவரப்படுவர் என்றும், ஈர்க்கப்படும் இவ்வருள் இல்லாத வேளையில், நம் மறைபரப்புப் பணிகள், வெறும் கொள்கைப்பரப்பு வேலையாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்றும், திருத்தந்தை எச்சரித்தார்.

நல்ல உள்ளம் கொண்ட ஒரு பெண்மணி, ஓர் இளைஞரையும், ஓர் இளம்பெண்ணையும் தன்னிடம் அழைத்து வந்த நிகழ்வை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

இவ்விளைஞரை மற்றொரு கிறிஸ்தவ மதத்திலிருந்து கத்தோலிக்க மதத்திற்கும், அப்பெண்ணை, ஆவிகளை வழிபடும் ஒரு மதத்திலிருந்து, கத்தோலிக்க மதத்திற்கும் தான் மாற்றியதாக அப்பெண்மணி கூறியபோது, தான் சற்று பொறுமையிழந்து, அப்பெண்மணியிடம், நீங்கள் அவர்களை மாற்றவில்லை, தந்தையாம் இறைவனே அவர்களை மாற்றினார் என்று கூறிய நிகழ்வை திருத்தந்தை குறிப்பிட்டார்.

Comments are closed.