ஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51
அக்காலத்தில்
இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது.
தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.
வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
யோவான் 6: 44-51
கற்றுத்தரும் கடவுள்
நிகழ்வு
வங்கக் கவி, இரவிந்தரநாத் தாகூர் எழுதிய கிளிக்கதை உங்களுக்குத் தெரியுமா…? சொல்கின்றேன் கேளுங்கள்.
மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒருவர் ஒரு கிளியைப் பரிசாக அளித்தார். அது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. அதற்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று மன்னருக்குத் தோன்றியது. எனவே, அவர் தன்னுடைய அமைச்சரை அழைத்து, தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அமைச்சரோ, “மன்னா! இது தொடர்பான எல்லாப் பணிகளையும் நானே பார்த்துக்கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.
பின்னர் அமைச்சர் ஒரு பொற்கொல்லரை அழைத்து, “கிளி நாகரிகமாக இருக்க என்ன செய்யவேண்டும்?” என்று ஆலோசனை கேட்டார். அவரோ, “கிளியைப் பொற்கூண்டில் வைத்தால், நன்றாக இருக்கும்” என்றார். “அவ்வாறே செய்யும்” என்று அமைச்சர் அந்தப் பொற்கொல்லரிடம் சொல்ல, அவர் பொன்னாலான ஒரு கிளிக்கூண்டைச் செய்துகொடுத்துவிட்டு, அமைச்சரிடமிருந்து ஒரு பெருந்தொகையைப் பரிசாக வாங்கிச் சென்றார்.
இதற்குப் பின்பு அமைச்சருக்கு, ‘அரண்மனைக்கு வருவோரிடம் கிளி நான்கு வார்த்தை நல்ல வார்த்தை பேசினால் நன்றாக இருக்கும்’ என்ற எண்ணம் தோன்றியது. ஆகையால், அவர் நாட்டில் இருந்த பண்டிதர்களை அழைத்து, கிளிக்குப் பாடம் கற்றுத்தருமாறு சொன்னார். அவர்களும் அமைச்சர் இட்ட உத்தரவு, மன்னரிடமிருந்துதான் வந்திருக்கும் என்று கிளிக்குப் பாடம் கற்றுத்தரத் தொடங்கினார்கள்.
இப்படியிருக்கையில் ஒருநாள் மன்னருக்கு, ‘இவர்கள் கிளிக்கு எப்படி நாகரிகத்தைக் கற்றுத்தருகின்றார்கள் என்பதை பார்க்கவேண்டும்’ என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே, அவர் கிளிக்கு நாகரிகம் சொல்லிக் கொடுக்கப்படும் இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கே ஐந்தாறு பண்டிதர்கள் கிளிக்கு முன்பாக அமர்ந்துகொண்டு, அதற்குப் நாகரிகப் பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அக்காட்சியைக் கண்ட மன்னருக்கு மட்டில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அதனால் பண்டிதர்களையும் அமைச்சரையும் வாழ்த்திவிட்டு அவர் திரும்பிச் சென்றார். .
இதற்குப் பின் ஓரிரு நாள்கள் கழித்து, பண்டிதர்கள் அமைச்சரிடம் வந்து, கிளிக்கு வேண்டிய மட்டும் கற்றுக்கொடுத்துவிட்டோம் என்று சொல்லி, பெருந்தொகையைப் பரிசாக வாங்கிச் சென்றார்கள். கிளிக்குப் நாகரிகப் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்ட பிறகு, அமைச்சர் அந்தக் கிளியைப் பொன்னால் செய்யப்பட்ட கிளிக்கூண்டில் வைத்தார். கிளியோ ஓரிடத்தில் நிற்காமல் அங்கு இங்கும் தாவிக்கொண்டிருந்தது. உடனே அமைச்சர் ஒரு கொல்லரை அழைத்து, கிளி அங்கும் இங்கும் பறக்காத வண்ணம் இருக்க, அதன் கால்களைச் கம்பிகளால் கட்டச் சொன்னார். அவரும் அவ்வாறே செய்து, பெருந்தொகையைப் பரிசாக வாங்கிச் சென்றார்.
எல்லா வேலைகளும் முடிந்தபிறகு அமைச்சர் மன்னரிடம் சென்று, “கிளிக்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டோம்; வந்து பாருங்கள்” என்றார். மன்னர் ஆசையோடு வந்து பார்த்தார். அங்கோ கிளியானது கூண்டில் செத்துக் கிடந்தது. “கிளிக்கு என்ன ஆயிற்று?” என்று மந்திரியிடம் கேட்டபொழுது, அவர் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார். அப்பொழுது மன்னர் கிளியின் வாயில் விரலை விட்டுப் பார்த்தார். அதன் வாயிலிருந்து காகிதங்கள் மொத்தமாக வந்து விழுந்தன, அதைப் பார்த்துவிட்டு மன்னர் அமைச்சரிடம், “கிளிக்குப் பாடம் கற்றுத் தரும் இலட்சணமா இது?” என்று அவர்மீது பாய்ந்தார்.
இன்றைய கல்விமுறை அல்லது இன்றைக்குப் பாடம் கற்பிக்கின்றவர்கள் எப்படிப் பாடம் கற்பிக்கவேண்டும் என்பது தெரியாமல் கற்பிப்பதை வேதனையோடு இந்தக் கதை பதிவுசெய்கின்றார். மக்களுக்கு கற்பிக்கத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், கடவுள் நமக்குக் நல்ல முறையில் கற்றுத்தரும் ஆசானாக இருக்கின்றார். அதைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம்.
அனைவருக்கும் கற்றுத் தரும் கடவுள்
இயேசு தம்மிடம் வந்த மக்களிடம், “கடவுள்தாமே கற்றுத் தருவார்” என்ற இறைவாக்கை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார். இயேசு மேற்கோள் காட்டிப் பேசும் இறைவாக்கு எசா 54: 13; எரே 31: 31-34 ஆகிய இரண்டு இடங்களில் வருகின்றன.
இயேசு மேற்கோள் காட்டிப் பேசும் இறைவாக்கில் இரண்டு உண்மை அடங்கியுள்ளன. ஒன்று, கடவுள் கற்றுத் தருபவராக இருப்பதால், அவருக்குச் செவிசாய்க்கவேண்டும் என்பதாகும். இரண்டு, கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் அல்லது இறைவார்த்தையை வாசிக்கின்ற ஒருவர் இயேசுவிடம் வரவேண்டும். அப்படி கடவுள் கற்றுக்கொடுத்ததற்குச் செவிசாய்த்து, வாழ்வின் ஊற்றாக இருக்கும் இயேசுவிடம் வருகின்றவர், அவர்மீது நம்பிக்கை கொள்கின்றவர், நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார்.
இதை இன்னொரு விதத்தில் சொல்லவேண்டும் என்றால், தந்தைக் கடவுளும் இயேசுவும் ஒன்றாய் இருப்பதால் (யோவா 14: 9) இயேசு சொல்வதற்குச் செவி சாய்த்து, அவர்மீது நம்பிக்கை கொண்டால், நிலைவாழ்வைப் பெறுவோம். இல்லையென்றால் வாழ்வினை அல்ல, தண்டனையைத்தான் பெற்றுக்கொள்வோம்.
நாம் இயேசு கற்றுக்கொடுப்பதற்குச் செவிசாய்த்து, அவர்மீது நம்பிக்கை கொண்டு, அதன்வழியாக வாழ்வினைப் பெற்றுக்கொள்கின்றோமா? இல்லை, அவர் கற்றுத் தருவதற்குச் செவிசாய்க்காமலும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் இருந்து வாழ்வினை இழக்கப் போகிறோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள் 391) என்பார் ஐயன் திருவள்ளுவர். நாம் இறைவார்த்தையைப் பிழையறக் கற்று, அதன்படி வாழ முற்படுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.