உலகநாள்50, ஐரோப்பாவின் ஒற்றுமை – திருத்தந்தை
உலக நாளின் 50ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் பொது மறைக்கல்வி உரையை, இந்நாளை மையப்படுத்தி வழங்கியதோடு, #உலகநாள்50 (#EarthDay50) என்ற ‘ஹாஷ்டாக்’குடன் ஒரு சிறப்பு டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.
“நம் பொதுவான இல்லமான பூமியை அன்புகூர்வதற்குத் தேவையான அர்ப்பணத்தை புதுப்பிக்க, உலக நாள் ஒரு நல்ல தருணம். இந்த உலகம், நாம் தாறுமாறாக சீரழிப்பதற்கென வழங்கப்பட்டுள்ள விற்பனைப்பொருள்களின் கிடங்கு அல்ல. இந்த பூமியையும், அங்கு வாழும் நலிவுற்றோரையும் பேணிக்காப்போமாக” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.
இதற்கு முன்னதாக, இப்புதனன்று ஆற்றிய திருப்பலியில் கூறிய கருத்தையும், மறையுரையில் வழங்கிய சிந்தனைகளையும் மையப்படுத்தி, வேறு மூன்று டுவிட்டர் செய்திகளையும் திருத்தந்தை வெளியிட்டிருந்தார்.
இன்றையத் திருப்பலியில் வெளியிட்ட கருத்தை, “ஐரோப்பா என்ற எண்ணத்திற்கு வித்திட்ட மூதாதையர் கொண்டிருந்த உடன்பிறந்த உணர்வு என்ற கனவு, தற்போதைய ஐரோப்பாவில் நிலவ செபிப்போம்” என்ற சொற்களில், தன் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.
அத்துடன், சிலுவையின் வழியாக கடவுளின் அன்பை அதிகமதிகமாக உணரும் வரத்தையும், வௌவால்களைப் போல் இருளில் செயலாற்றும் பழக்கத்தை விட்டொழித்து, ஒளியின் மக்களாக வாழும் வரத்தையும் வேண்டுவோம் என்ற கருத்துக்களை வலியுறுத்தி, திருத்தந்தையின் 2 மற்றும் 3வது டுவிட்டர் செய்திகள் அமைந்திருந்தன.
Comments are closed.