மே 1ம் தேதி, மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்படும்

கொரோனா தொற்றுக்கிருமியின் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், இத்தாலி நாட்டை, மீண்டும் ஒருமுறை இறைவனின் தாயான மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைக்க இத்தாலிய ஆயர் பேரவை தீர்மானித்துள்ளதென்று, இப்பேரவையின் தலைவர், கர்தினால் Gualtiero Bassetti அவர்கள் கூறியுள்ளார்.

மே மாதம் முதல் நாள், தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பு திருநாளன்று, இந்த அர்ப்பணம் நடைபெறும் என்றும், உலகெங்கும் தொழில்கள் பலவகையில் முடங்கிப் போயிருப்பதால், தொழிலாளர்களின் பாதுகாவலர் மீண்டும் இவ்வுலகில் தொழில்கள் தழைத்தோங்க செய்வார் என்ற நம்பிக்கையில் இந்நாளில் இந்த அர்ப்பணம் நடைபெறுகிறது என்றும் கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள் கூறினார்.

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான லொம்பார்தியா பகுதியில் அமைந்துள்ள Santa Maria del Fonte பெருங்கோவிலில், மே மாதம் முதல் நாள், காலை 9 மணிக்கு இந்த சிறப்பு அர்ப்பணம் நடைபெறும் என்பதை, கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள் அறிவித்தார்.

மக்களிடமிருந்து ஆயர்களுக்கு வந்து சேர்ந்த பல்வேறு மடல்கள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் ஆகியவையே, இந்த அர்ப்பண எண்ணத்திற்கு வித்திட்டன என்பதையும், கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பு திருநாளன்று நடைபெறும் இந்த அர்ப்பண நிகழ்வில், இந்தத் தொற்றுக்கிருமியின் தாக்கத்தை அழிக்க உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், இன்னும் பிற தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரை நினைவுகூர்வோம் என்று கூறிய கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள், இந்த மருத்துவப் பணியாளர்களில் பலர், இந்தப் போராட்டத்தில் உயிர் துறந்ததோடு, அவர்களுக்கு தகுதியான இறுதி சடங்குகளும் நிறைவேற்ற இயலாமல் போனதைக் குறித்து, தன் ஆழ்ந்த அனுதாபத்தையும் வெளியிட்டார்

Comments are closed.