பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
யோவான் 3: 7-15
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசு
நிகழ்வு
ஓர் ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் வாழ்ந்து வந்தார்கள. அவர்களோடு அவர்களுடைய பேத்தியும் வாழ்ந்து வந்தாள்.
ஒரு முழுநிலவு இரவில் (பெளர்ணமி இரவில்) தாத்தாவும் அவருடைய பேத்தியும் வீட்டுக்கு வெளியே நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது பேத்தி வானத்தில் பூத்துக் கிடந்த விண்மீன்களைப் பார்த்து மிகவும் பரவசமடைந்தாள். உடனே தாத்தா பேத்தியிடம், ஒவ்வொரு விண்மீனாகச் சுட்டிக்காட்டி, இந்த விண்மீனுக்குப் பெயர் இன்னது; அந்த விண்மீனுக்கு பெயர் அது என்று சொல்லிக்கொண்டே வந்தார்.
எல்லாவற்றையும் மிகக் கவனமாகக் கொண்டுக்கொண்டே வந்த பேத்தி தாத்தாவைப் பார்த்து, “தாத்தா! விண்ணகத்தின் அடிப்பகுதியே இவ்வளவு அழகாக இருக்கின்ற இருக்கின்றபொழுது, விண்ணகத்தின் மேற்பகுதி எவ்வளவு அழகாக இருக்கும்?” என்று வியப்போடு சொன்னாள். தாத்தா பேத்தி மறுமொழி கூற முடியாமல், அவளை ஆச்சரியத்தோடு பார்த்தார்.
விண்ணகம் மிக அழகானது. அதை நாம் வார்த்தைகளால் சொல்வதை விடவும், அங்கிருந்து மண்ணகத்திற்கு வந்த இயேசு சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் செல்வதில்லை” என்று கூறுகின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மறுபடியும் பிறப்பது குறித்த ஒருசில தெளிவுகள்
இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக வருகின்றது. நேற்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னிடம் வந்த நிக்கதேமிடம் தூய ஆவியாரால் வரும் மறுபிறப்பைக் குறித்துப் பேசுவார். அவரோ அதைப் புரிந்துகொள்ளாமலேயே இருக்கின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரைப் பார்த்து, “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே!” என்று சொல்லி வியப்படைகின்றார்.
இயேசு, நிக்கதேமைக் குறித்து இவ்வாறு வியப்படைவதற்குக் காரணம் இருக்கின்றது. ஏனென்றால், தூய ஆவியாரால் வரும் மறுபிறப்பு பற்றி பழைய ஏற்பாட்டில் நிறையக் குறிப்புகள் இருக்கின்றன (1 சாமு 10:6; எசா 32:15; எரே 31: 33; எசே 36: 25-27, 37, யோவே 2: 28-29). அப்படியிருந்தும் இயேசு தூய ஆவியாரால் வரும் பிறப்பைக் குறித்துப் பேசுவதைக் கண்டு நிக்கதேம் வியப்படைவதை முன்னிட்டு இயேசு ஆச்சரியப்படுகின்றார். இயேசு நிக்கதேமுடனான உரையாடலில் மீண்டும் மீண்டுமாக வலியுறுத்திக்கூறிய உண்மை ஒன்றே ஒன்றுதான். அதுதான், தூய ஆவியார் வழங்கும் மறுவாழ்வு அல்லது நிலைவாழ்வு, யூதர்களுக்கு மட்டும் இன்றி, எல்லாருக்கும் உண்டு (யோவா 3: 16), அத்தகைய மறுவாழ்வினை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த மானிட மகன்மீது நம்பிக்கை கொள்வதால் மட்டுமே பெறமுடியும் என்பதாகும். இது குறித்து நாம் இன்னும் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசு
நிக்கதேம், தூய ஆவியாரால் மறுபிறப்பு எப்படி நிகழும் என்று கேட்கின்றபொழுது, இயேசு தன்னை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தவர் என்று சுட்டிக்காட்டி விட்டு, அந்த விண்ணகத்திற்கு நாம் செல்வதற்கான அல்லது மறுபிறப்பு அடைவதற்கான வழியினைச் சுட்டிக்காட்டுகின்றார்.
ஆம், இயேசு மண்ணகத்திலிருந்து வரவில்லை. அவர் விண்ணகத்திலிருந்து வந்தார். இதை அவர் மீண்டும் மீண்டுமாக வலியுறுத்திக் கூறுவார் (யோவா 6:51). தான் விண்ணகத்திலிருந்து வந்ததாகச் சொல்லும் இயேசு, நாம் விண்ணகம் செல்வதற்கான ஒரு வழியினையும் சொல்கின்றார். அதற்காக அவர் மேற்கோள் காட்டும் நிகழ்வுதான், பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது.
எண்ணிக்கை நூலில் வரும் இந்த நிகழ்வில் (எண் 21: 6-9), இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகவும் அவருடைய அடியார் மோசேக்குக் எதிராகவும் கிளர்ந்தெழுந்ததால், கடவுள் அவர்களிடம் கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பித் தண்டிப்பார். பின்னர் மோசே கடவுளிடம் பரிந்துபேசியதால், கடவுள் அவரிடம் வெண்கலப் பாம்பைச் செய்யச் சொல்லி, அதை மக்கள் நடுவில் வை என்றும் அதைப் பார்ப்பவர் யாவரும் பிழைத்துக் கொள்வர் என்றும் கூறுவார். மோசேயும் அவ்வாறு செய்து வைக்க, அதைப் பார்த்த மக்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் இயேசு, சிலுவையில் உயர்த்தப்பட இருக்கும் தன்னிடம் நம்பிக்கை கொள்பவரும் மறுவாழ்வை, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர் என்று கூறுகின்றார். ஆம், நமக்கு நிலைவாழ்வினை இயேசுவால் மட்டுமே தரமுடியும். அப்படிப் பட்டவரிடம் நாம் நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
Comments are closed.