நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 16)

பாஸ்கா காலம் முதல் வாரம் வியாழக்கிழமை
லூக்கா 24: 35-48
“உங்களுக்கு அமைதி உரித்தாகுக”
நிகழ்வு
அமரிக்காவில் ஹார்மனி (Harmony) என்றொரு நகர் உள்ளது. இந்த நகருக்கு இப்பெயர் எப்படி வந்தது என்பதற்காகச் சொல்லப்படுகின்றன நிகழ்வு இது.
நகரைக் கட்டியெழுப்பிய பின்பு, அந்த நகரில் இருந்த பெரியவர்கள், முக்கியமானவர்கள் எல்லாரும், நகருக்கு என்ன பெயரிடலாம் என்பது பற்றிக் கலந்தாலோசித்தர்கள். வந்திருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரைச் சொன்னார்கள். ஒருசிலர், “நாங்கள் சொன்ன பெயர்தன நன்றாக இருக்கும்” என்றும் மற்றும் சிலர், “நாங்கள் சொன்ன பெயர்தான் நன்றாக இருக்கும். அதையே வைப்போம்” என்றும் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
அப்பொழுது அந்தக் கூட்டத்தை வழிநடத்திக்கொண்டிருந்த பெரியவர் வேகமாக எழுந்து, “தயவு செய்து எல்லாரும் நல்லிணக்கமாக/ அமைதியாக இருப்போம்” (Please Let us have harmony) என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். அவர் சொன்னதில் இருந்த “ஹார்மனி” என்ற என்ற வார்த்தை எல்லாருக்கும் பிடித்துவிட, அப்பெயரையே நகரத்தின் பெயராகச் சூட்டினார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர், நல்லிணக்கமாக, அமைதியாக இருப்போம் என்று சொன்னதுபோன்று, நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று சொல்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள் நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சீடர்கள் நடுவில் தோன்றிய உயிர்த்த ஆண்டவர் இயேசு
நற்செய்தியில், எம்மாவுவிலிருந்து திரும்பிவரும் இரண்டு சீடர்கள், வழியில் நிகழ்ந்தவற்றையும் அப்பத்தைப் பிட்கையில் இயேசுவைக் கண்டுகொண்டதையும் மற்ற சீடர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். மற்ற சீடர்களும் கூட, குறிப்பாக பேதுருவும் உயிர்த்த ஆண்டவர் இயேசு தனக்குத் தனியாகத் தோன்றியதை (1கொரி 15:5) மற்ற சீடர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கவேண்டும். இதனால் சீடர்கள், இவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? என்று அச்சம் கலந்த மகிழ்ச்சி இருந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உயிர்த்த ஆண்டவர் இயேசு, அவர்கள் நடுவில் தோன்றுகின்றார்.
நம்பிக்கையூட்டிய இயேசு
இயேசு, சீடர்கள் நடுவில் தோன்றியதும் உதிர்க்கக் கூடிய முதல் வாழ்த்து, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்பதுதான். இயேசு இத்தகைய வாழ்த்தைச் சீடர்களிடத்தில் சொன்னதற்கு முக்கியமான காரணம், அவர்கள் அச்சம் நிறைந்தவர்களாக, நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள் என்பதால்தான். இதனை இயேசு “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று சொன்னதும், சீடர்களிடமிருந்து வெளிப்படுகின்றன திகில் மற்றும் அச்ச உணர்வுகளிளிருந்தே நாம் கண்டுகொள்ளலாம்.
இயேசு இத்தகைய வாழ்த்தைச் சொன்னபிறகும்கூட, சீடர்கள் திகில் நிறைந்தவர்களாய், அச்சம் நிறைந்தவர்களாய் இருக்கின்றார்கள். இதனால் இயேசு அவர்களுடைய நம்பிக்கையை இன்னும் மிகுதிப்படுத்த, தன்னுடைய கைகளையும் கால்களையும் அவர்களிடம் காண்பிக்கின்றார். மட்டுமல்லாமல், அவர்கள் கொடுத்த வேகவைத்த மீனை வாங்கி உண்டு, அவர்களுடைய அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் போக்குகின்றார்.
இயேசு உயிர்த்த பின்பு, தன்னைச் சிலுவையில் அறைந்து கொன்ற யூதர்களுக்கு முன்போ அல்லது ஆட்சியாளர்களுக்கு முன்போ தோன்றி, நான் உயிர்த்தெழுந்துவிட்டேன்; பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, தன்னுடைய சீடர்களிடம் தோன்றி, அவர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகத்தையும் ஊட்டுகின்றார்.
சாட்சிகளாக வாழவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இறுதியாக அவர்களிடம், “இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்கின்றார். இவ்வார்த்தைகள் நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியவை.
இயேசு மக்கள் நடுவில் பணிசெய்ததையும் பாடுகள் பட்டதையும் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதையும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததையும், அவருடைய சீடர்கள் கண்கூடாகக் கண்டார்கள். அதனால் தான் இயேசு அவர்களைப் பார்த்து, “இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று கூறுகின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளில் இரண்டு விதமான உண்மைகள் இருக்கின்றன. ஒன்று, சீடர்கள் இயேசுவோடு இருந்து, அவர் செய்த அனைத்தையும் கண்ணால் கண்டதால் அவருக்குச் சாட்சிகளாக இருக்கின்றார்கள் என்பதாகும். இது ஒருவகையில் சாட்சியாக இருப்பது. இரண்டு, இயேசுவின் விழுமியங்களையும் அவருடைய மதிப்பீடுகளையும் வாழ்ந்து காட்டுவதன் மூலம் அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாக இருத்தல். இந்த வகையான சாட்சிதான், இயேசு நம்மிடத்தில் எதிர்பார்ப்பதாகும்.
ஆம், நாம் இயேசுவைக் கண்ணால் கண்டு, அவருக்குச் சாட்சியாக இருக்க முடியாவிட்டாலும், அவருடைய நற்செய்தி மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, அவருடைய உயிர்ப்புச் சாட்சியாகத் திகழலாம். நாம் இயேசுவின் உயிர்ப்புகுச் சாட்சிகளாகத் திகழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நீங்கள் ஒருவர் மற்றவரிடம் காட்டும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’ (யோவா 13:35) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் நற்செய்தியின் விழுமியங்களின்படி வாழ்ந்து, அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையமைதியையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.