80வது அகவையை எட்டுகின்ற ஓய்வு நிலை மேதகு ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு வாழ்த்துகள்

80வது அகவையை எட்டுகின்ற, மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க திரு அவையின் ஓய்வு நிலை மேதகு ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு மொன்றியலிலிருந்து (கனடா) நல் வாழ்த்துக்கள்.)
இவ்வுலகில் இறைவன் வழங்கிய அரும்பெரும் கொடையான மனித வாழ்வில் கடந்த 1940 ஏப்ரல் 16ல் பிறந்து அகவைகள் 80ஐ எட்டுகின்ற மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை மேதகு ஆயர் – இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் கடந்த 1967ல் குருத்துவப் பணிக்காகவும் – தொடர்ந்து 1992ல் ஆயராகவும் அருட்பொழிவு செய்யப்பட்டது எல்லாம் வல்ல ஆண்டவனின் அளப்பரிய திட்ட மென்றே கருதப்பட வேண்டும்.
மன்னார் மறை மாவட்டக் கத்தோலிக்க திரு அவையின் ஓய்வு நிலை ஆயர் – மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள், ஆண்டவர் இயேசுவின் சீடனாக, கத்தோலிக்க ஆன்மீக நெறியுடன் பந்த பாசங்களிலிருந்து விடுபட்டு – பல்வேறு சிரமங்கள் – சவால்கள் மத்தியில் எதிர் நீச்சலடித்து மக்கள் தொண்டனாக உண்மைக்குச் சாட்சியாக நற்பணியவர் என்பது பல்வேறு விவாதங்களுக்கு அப்பாற்ப்பட்ட பேசு பொருளாகும்.
2015 ஜனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது மடுத் திருப்பதிக்கான வருகை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களது மாபெரும் அயராத முயற்சியென இலங்கைத் தமிழ்த் திரு அவையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிவு செய்யப்பட வேண்டிய தென்பது எனது பணிவான அபிப்பிராயம்.
மேதகு ஆயர் அவர்களது மக்கள் பணிக்கு எல்லைகள் வரம்புகள் இல்லையென வாய்கூசாது கூறலாம் – கத்தோலிக்க மக்களுக்காக மட்டுமல்ல, அனைத்துத் தமிழ் மக்களுக்காகவும் இன – மத – ஜாதி எனப்படும் வேறுபாடுகள் எதுவுமின்றி கலங்கரை விளக்கமாக – வழிகாட்டும் மனித நேயமுள்ள நல்லதொரு பண்பான மனிதராக வாழ்ந்தவர் என்றால் அது மிகையாகாது.
தாயகத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்த் தமிழ் மக்களுக்கும் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு அவர்களது பணி ஆன்மீக ரீதியிலும் – மற்றும் பலவழிகளிலும் தொடர்ந்தும் கிடைத்ததனை எவரும் மறுக்க முடியாது.
பல்வேறு இக்கட்டுக்களின் மத்தியிலும் கத்தோலிக்க திரு அவைக்கும் குறிப்பாக இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்க திரு அவைக்குக் கிடைத்த அளப்பரிய பொக்கிசமாக ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் எக்காலமும் கருதப்பட வேண்டியவர்.
மேதகு ஆயப் பெருந்தகை அவர்களது 80வது பிறந்த நாளில் வாழ்க வாழ்கவென எல்லாம் வல்ல இறை யாசீர் வேண்டி, பூவோடு சேர்ந்த நாராக வாழ்த்து வதோடு, மருதமடு செபமாலை அன்னையின் பரிந்துரையால் நல்ல உடல் சுகம் கிடைத்திட வேண்டுமென எனது மனைவி, பிள்ளைகள் குடும்பத்தோடு இணைந்து செபிக்கிறோம்.

Comments are closed.