நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 06)

புனித வாரம்
திங்கட்கிழமை
யோவான் 12: 1-11
பணத்தாசையும் அழிவும்
நிகழ்வு
ஓர் ஊரில் ஒரு தாய் இருந்தார். இவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். ஒருநாள் இவருடைய மகனுக்குக் கடுமையான காய்ச்சல் வந்ததால், இவர் ஊரில் இருந்த ஒரு கைராசியான மருத்துவரிடம் அவனைக் கூட்டிக்கொண்டு போனார். மருத்துவரும் அவனுக்குக் நல்லவிதமாயச் சிகிச்சை அளித்து, அவனை நலமாக்கினர்.
அப்பொழுது தாய், மருத்துவரிடம், “என்னுடைய பையனை காய்ச்சலிலிருந்து நலப்படுத்திவிட்டீர்கள். மிக்க நன்றி. மகனை மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு வரும்பொழுது, கையில் பணம் எதுவும் எடுத்துக்கொண்டு வரவில்லை. அதனால் நான் வீட்டுக்குச் சென்று பணத்தை எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்றார். மருத்துவரும் அதற்குச் சரியென்று சொல்ல, அந்தத் தாய் வீட்டிற்கு வந்து, பணத்தை ஒரு ‘கவரில்’ போட்டுகொண்டு, மருத்துவரிடம் கொடுத்தார்.
அப்படிக் கொடுக்கும்பொழுது, தாய் அந்த மருத்துவரிடம், “ஐயா! என்னுடைய மகனை காய்ச்சலிலிருந்து நீங்கள் நல்லவிதமாய் நலப்படுத்திவிட்டீர்கள். அதற்கு எவ்வளவு பணம் செலுத்தவேண்டும் என்று தெரியவில்லை. அதனால் ஒரு சிறிய அன்பளிப்பாக இந்தக் கவரை வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். தாய் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மருத்துவருக்குச் சற்று கோபம் வந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “நண்பர்களுக்கிடைய அன்பளிப்பு கொடுக்கலாம்; ஒரு மருத்துவருக்கு நோயாளிக்கும் இடையே அன்பளிப்பு கொடுப்பது அவ்வளவு ஏற்புடையது கிடையாது. சிகிச்சைக்கேற்ப பணம் தருவதுதான் நல்லது” என்றார்
“அப்படியானால், சிகிச்சைக்கான பணம் எவ்வளவு என்று சொல்லுங்கள்; தந்துவிடுக்றேன்” என்றார் தாய். சிறிதுநேரம் ஆழ்ந்து யோசித்த மருத்துவர், “உங்களுடைய மகனுடைய சிகிச்சைக்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை, இரண்டாயிரம் ரூபாய்” என்றார். “அப்படியா!” என்று கேட்டுக்கொண்ட தாய், மருத்துவரிடம் கொடுத்த கவரைத் திரும்ப வாங்கி, அதிலிருந்த மூவாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு, மீதம் இருந்த இரண்டாம் ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு, “நீங்கள் கேட்ட இரண்டாயிரம் ரூபாய்” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தார். மருத்துவரோ, ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே’ என்று பேயறைந்தவர் போல் நின்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மருத்துவரைப் போன்றுதான், ஒருசிலர் பணம் பணம் என்று அலைந்து திரிவார்கள். இப்படிப்பட்டவர்கள் பணத்தைச் சேகரிக்கவேண்டும் என்ற வெறியில் முடிவில் தங்களுடைய வாழ்வையே இழந்து நிற்கின்றார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் பணத்தை முதன்மைப்படுத்தி வாழ்ந்துவந்த யூதாஸ் இஸ்காரியோத்தைக் குறித்துக் குறிப்பிடுகின்றது. இவரிடம் இருந்த குற்றம் என்ன என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்துவிட்டு, நாம் எத்தகைய வாழ்க்கை வாழவேண்டும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசிய மரியா
இயேசு, பெத்தனியால் இருந்த தன் நண்பர் இலாசரின் வீட்டிற்கு வந்தார். அங்கு மார்த்தா இயேசுவுக்கு உணவு பரிமாறி முடித்ததும், மரியா இலாமிச்சை எனப்படும் நறுமணத் தைலத்தைக் கொண்டு இயேசுவின் காலடிகளில் பூசி, தன் கூந்தலால் துடைக்கின்றார். தைலத்தின் வாசனை வீடங்கும் கமழ, பணத்தாசை பிடித்த யூதாசு இஸ்காரியோத்து, இந்தக் தைலத்தை முந்நூறு தெனாரியத்திற்கு விற்று, அதை ஏழைகளுக்குக் கொடுக்கக்கூடாதா? என்று கேட்கின்றார்.
உண்மையில் யூதாசு இவ்வாறு சொன்னது ஏழைகள்மீது கொண்ட அக்கறையினால் அல்ல, அதிலிருந்து ஆதாயம் தேடிக்கொள்ளவே! ஒருவேளை நறுமணத் தைலம் விற்கப்பட்டால், அதிலிருந்து ஏதாவது சுருட்டிக்கொள்ளலாம் அல்லது ஆதாயம் தேடலாம் என்ற எண்ணத்தோடுதான் அவர் இப்படிச் சொல்கின்றார். அப்பொழுது இயேசு அவரிடம், “மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்” என்கின்றார்.
பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்
யூதாசு இஸ்காரியோத்து பணம் மட்டுமே முதன்மையானது என்று அதற்கு அடிமையானதால், அவர் தவற்றுக்கு மேல் தவற்றைச் செய்கின்றார். முதலில் பணப்பையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தை எடுத்து வந்த யூதாசு, பின்னர் பணத்திற்காக இயேசுவே காட்டிக்கொடுக்கின்றார்கள். முடிவில் இயேசுவைக் காட்டிக்கொடுத்துவிட்டோம் என குற்ற உணர்வில் தற்கொலை செய்துகொள்கின்றார். ஆம், புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவது போல, பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் (1திமொ 6:10). யூதாசு பொருளுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டார். அதனால் அவருடைய வாழ்க்கை கொடுங்கனவாக முடிந்து போனது.
நாம் எதன்மீது ஆசை அல்லது பற்று கொண்டிருக்கின்றோம்? இறைவன்மீதா? பணத்தின்மீதா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
‘மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன?’ (மத் 16: 26) என்பார் இயேசு. ஆகையால், நாம் பணத்திற்காக வாழ்வைத் தொலைத்து நிற்காமல், ஆண்டவருக்காக எதையும் இழக்கத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.