மார்ச் 30 : திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம்.

உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில்
இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டுவந்து நடுவில் நிறுத்தி, ‘‘போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.
இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ‘‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, ‘‘அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், ‘‘இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம், ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“பாவம் இல்லாதவர் கல் எறியட்டும்”
முன்பொரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான். அவன் மக்கள்மீது மிகுந்த அன்பும் கரிசனையும் கொண்டிருந்தான். அவனுக்குப் பிறந்த நாள் வந்தபொழுது, அவன் மக்களுக்கு விருந்துகொடுக்க விரும்பினான். ஆதலால் அவன் தன்னுடைய நாட்டிலிருந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சமையல்காரரை அழைத்து, மக்களுக்கு விருந்து தயாரிக்கச் சொன்னான். சமையல்காரரும் மன்னன்மீது தனிப்பட்ட அன்புகொண்டிருந்ததால், மிகச்சிறப்பான முறையில் உணவு தயாரித்தார்.
தயாரிப்பு வேலைகள் முடிந்ததும், விருந்து தொடங்கியது. விருந்தில் மன்னனே எல்லாருக்கும் உணவு பரிமாறினான். இதைக் கண்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். இதற்கிடையில் முதலில் உணவு சாப்பிட்டவர்கள் யாவரும் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து இறந்துபோனார்கள். அவர்களைச் சோதித்துப் பார்த்த பின்புதான் தெரிந்தது, அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் நஞ்சு கலந்திருக்கின்றது என்று.
மன்னன் ஒருவினாடி அதிர்ந்துபோனான். உடனே அவன் சமையல்காரரை அழைத்து, “நீர் என்ன செய்தீர்…? உணவு உண்ட மக்கள் அனைவரும் இப்படிச் செத்துக்கொண்டிருக்கின்றார்களே…!” என்று கத்தினான். “மன்னா! எனக்கு ஒன்றும் தெரியாது! நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யக்கூடிய ஆள் கிடையாது. இது உங்களுக்கே தெரியும்” என்று வருத்தத்தோடு சொன்னார் அந்த சமையல்காரர். இதைத் தொடர்ந்து உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டது. எல்லாரும் அங்கிருந்து வருத்ததோடு கலைந்துசென்றார்கள்.
தன் அறைக்குள் சென்ற மன்னன், ‘யார் இந்தப் பாதகச் செயலைச் செய்திருக்கக்கூடும்…?’ என்று சிந்தித்தவாறு இருந்தான். உண்மையில் நடந்தது இதுதான்: பெரிய கழுகு ஒன்று, விஷப்பாம்பு ஒன்றைத் தன் அலகில் கொத்தித் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. உணவு தயாரிக்கும் இடத்தின் மேல் வந்தபொழுது விஷப்பாம்பானது தன்னுடைய விஷத்தைக் கீழே கக்கியது. விஷம் உணவு முழுவதும் கலந்தது. அப்பொழுது இதை யாரும் கவனிக்கவில்லை. இதனால் விஷம் கலந்த உணவை உட்கொண்டதால், பலர் இறந்துபோனார்கள்.
இந்த நிகழ்வை ஆண்டுகள் மெல்ல உருண்டியபொழுது, மக்களும் மறந்துபோனார்கள். இந்த வேளையில் பக்கத்து நாட்டிலிருந்து இரண்டு துறவிகள் மன்னனைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் அரண்மனைக்குள் நுழைவதற்கு முன், அரண்மனை வாசலில் நின்றுகொண்டிருந்த ஒருசிலர், அந்த இரண்டு துறவிகளிடம், “நீங்கள் மன்னனைப் பார்க்கப் புதிதாக வருகின்றீர்களா…? கவனமாக இருங்கள்; இல்லையென்றால் மன்னன் நீங்கள் சாப்பிடும் உணவில் விஷம் வைத்துக் கொன்றுவிடுவான்” என்றான். இதைக் கேட்ட அந்த இரண்டு துறவிகளும் அதிர்ந்துபோனார்கள். ஆனாலும் அவர்கள் அவர்களிடத்தில் எதுவும் பேசாமல், நேராக மன்னனிடத்தில் சென்று, வெளியே இருந்த மனிதர்கள் சொன்னதை அவனிடத்தில் சொன்னார்கள். சொல்லிவிட்டு அவனிடம், “இந்த மாதிரி நடந்தது என்னவென்றே தெரியாமல், குறைகூறிக்கொண்டிருப்பவர்களை, அடுத்தவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை நாட்டினில் வைத்திருந்தால், அது நாட்டுக்கக்கத்தான் கேடு” என்றார்கள். உடனே மன்னன் அவர்கள் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்தவாய், அரண்மனைக்கு வெளியே இருந்து குறைகூறிக்கொண்டும் தீர்ப்பிட்டுக் கொண்டிருந்தவர்களையும் இருந்தவர்களை நாடு கடத்தினான்.
ஆம், பலருக்கு அடுத்தவரைத் தீர்ப்பிடுவதும் குறைகூறுவதும்தான் முழு நேரவேலையே! இப்படி அடுத்தவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டும் குறைகூறிக்கொண்டிருக்கும் இருக்கும் மனிதர்களுக்கு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஒரு செய்தி சொல்கின்றார். அது என்ன என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
பாவம் இல்லாதவர் கல் எறியட்டும்
நற்செய்தியில், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரை என்ன செய்யலாம் என்று கேட்கின்றார்கள். மறைநூல் அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை விடவும் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்கின்ற எண்ணம்தான் பெரிதாக இருந்தது. இதை நன்கு உணர்ந்த இயேசு அவர்களிடம், உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் என்கின்றார். அவர் சொன்னதைக் கேட்டு முதியவர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து செல்கின்றார்கள்.
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் விபசாரத்தில் பிடிபட்ட பெண்மீது குற்றம் சுமத்த வந்தார்கள். ஆனால் இயேசு அவர்களைப் பார்த்து, நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்கின்றார்களா என்பது போல் கேள்வியைக் கேட்டதும், அங்கிருந்து சென்றுவிடுகின்றார்கள். நற்செய்தி இயேசு சொன்ன, உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் என்ற வார்த்தைகள் நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. மற்றவர்களைக் குறைகூறிக்கொண்டும் தீர்ப்பிட்டுக் கொண்டும் இருக்கும் நாம் குற்றமற்றவர்களா இருக்கின்றோமா? சிந்திப்போம்.
இயேசு அந்தப் பெண்ணைத் தீர்ப்பிடவில்லை. மாறாக, இரக்கம் காட்டினார். நாமும் மற்றவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், இரக்கம் காட்டுபவர்களாக இருப்போம்.
சிந்தனை.
‘உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ (ஒசே 6:6) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஒருவர் மற்றவரைத் தீர்ப்பிட்டுக்கொண்டும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு இராமல், ஆண்டவரைப் போன்று ஒருவர் மற்றவரிடத்தில் இரக்கத்தோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.