பசியால் வாடும் மக்களுக்காக திருத்தந்தை திருப்பலியில் செபம்

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடிநிலையால் பசியில் துன்புறும் அனைவருக்காகவும், மார்ச் 28, இச்சனிக்கிழமை காலை திருப்பலியில் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்-19 நெருக்கடிநிலை உருவாகியது முதல், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஒவ்வொரு நாளும் உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு திருப்பலி நிறைவேற்றி, இந்நெருக்கடியால் பல்வேறு நிலைகளில் துன்புறுவோர், மற்றும் அவர்களுக்குப் பணியாற்றுவோர் ஒவ்வொருவருக்காகவும் திருப்பலி ஒப்புக்கொடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலை திருப்பலியில், பசியால் வாடும் மக்களுக்காகச் செபித்தார்.

இந்நெருக்கடி நாள்களில், இருபதாவது நாளாக, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இந்நாள்களில், உலகின் சில பகுதிகளில், இந்நெருக்கடியின் சில எதிர்விளைவுகளைக் காண முடிகின்றது, அவற்றில் ஒன்று பசி என்று கூறினார்.

வேலை செய்ய முடியாததால், பசியோடு இருக்கும் மக்களை நாம் காணத் துவங்கியுள்ளோம், அவர்கள் முறையான வேலையின்றி இருந்திருக்கலாம் மற்றும், அவர்கள், வேறுபல சூழல்களாலும் பசிக்கொடுமையை எதிர்கொள்கின்றனர் என்று, திருப்பலியின் ஆரம்பத்தில் உரைத்த திருத்தந்தை, இந்நெருக்கடியின் பின்விளைவை இப்போதே பார்க்கத் துவங்கியுள்ளோம், இத்தொற்றுக்கிருமியால் தேவையில் இருக்கும் குடும்பங்களுக்காகச் செபிப்போம் என்று கூறினார்.

இத்திருப்பலியில் வாசிக்கப்பட்ட, யோவான் நற்செய்திப் பகுதி (7:40-53) பற்றிய மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, தலைவர்களுக்கும், இறைமக்களாகிய விசுவாசிகளுக்கும் இடையேயுள்ள பிரிவினை குறித்து விளக்கினார்.

இரு குழுக்கள்

இயேசு, மெசியாவா? என்று விவாதித்தபின், அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள் என நற்செய்தி கூறுகிறது, ஒவ்வொருவரும் அவரவரின் நம்பிக்கையுடன் திரும்பினார்கள் என்று, திருத்தந்தை மறையுரையைத் துவக்கினார்.

இந்த மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்தனர், ஒரு குழு, இயேசு பேசுவதற்குச் செவிமடுத்தது, அவரை அன்புகூர்ந்தது மற்றும் அவரைப் பின்தொடர்ந்தது, சமயத் தலைவர்களை உள்ளடக்கிய இரண்டாவது குழு, முதல் குழுவை இழிவாகக் கருதியது, ஏனெனில், அக்குழுவினரின் எண்ணப்படி, இயேசு திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, அதனால் அக்குழுவினர், அவரை வெறுத்தனர் என்று திருத்தந்தை கூறினார்.

புனித இறைமக்களாகிய விசுவாசிகள் இயேசுவில் நம்பிக்கை வைத்தனர், அவரைப் பின்சென்றனர், ஆனால் அதற்கான காரணத்தை அவர்களால் விளக்க இயலவில்லை, அவர் அவர்கள் இதயத்தில் நுழைந்தார், அவர்கள் சோர்வடையவே இல்லை, இதற்கு இயேசு அப்பம் பலுகச் செய்த புதுமையை நாம் நினைத்துப் பார்க்கலாம் என்றும் கூறினார், திருத்தந்தை.

புனித இறைமக்கள், அருளை பெரிய அளவில் கொண்டிருந்தனர், நம்மைப்போல அவர்கள் பாவிகளாக இருந்தாலும், மீட்பின் பாதையை அறியும் உணர்வை, ஆவியானவர் இருப்பதை அறியும் உணர்வைக் கொண்டிருந்தனர், மாறாக, சமுதாயத்தில் உயர்நிலையிலுள்ள சட்ட அறிஞர்கள், மக்களிடமிருந்து தங்களைப் பிரித்து வைத்திருந்தனர் மற்றும், இயேசுவை அவர்கள் வரவேற்கவில்லை என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தப் பிரிவினை ஏன்?

இந்தப் பிரிவினை ஏன்? என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, சமயத் தலைவர்கள், தாங்களும் இறைமக்களைச் சார்ந்தவர்கள்தான் என்பதை மறந்திருந்தனர், தாங்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்பதை உணர்ந்திருந்தனர், இது, இன்று நாம் பார்க்கும், தாங்களே முக்கியம் என்ற உணர்வில் வாழ்கின்ற அருள்பணித்துவம் என்றும் திருத்தந்தை கூறினார்

Comments are closed.