தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு (மார்ச் 29)

I எசேக்கியேல் 37: 12-14
II உரோமையர் 8: 8-11
III யோவான் 11: 1-45

“இயேசுவிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்”

நிகழ்வு

பிரான்ஸ் நாட்டிலுள்ள ஸ்ட்ராஸ்பர்க் பேராலயத்தில் ஒரு பெரிய, பழமையான கடிகாரம் இருந்தது. அதை ஒரு மனிதர் மிகுந்த சிரத்தை எடுத்துச் செய்துதந்தார். கடிகாரம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் நேரத்தை மிகத் துல்லியமாகவும் காட்டியதால், அங்கிருந்து குருவானவர் அதை எல்லாருக்கும் தெரியும்வகையில், கோபுரத்தில் பொருத்தினார்.

பல ஆண்டுகள் அந்தக் கடிகாரம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் அது பழுதடையவே பேராலயத்தில் இருந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த கடிகாரப் பழுதாற்றுநர்களை வரவழைத்துச் சரிசெய்ய முயற்சி செய்தார்கள், முடியவில்லை. இதற்கிடையில் கடிகாரம் பழுதடைந்த செய்தி, அதைச் செய்துகொடுத்த மனிதருக்குத் தெரியவந்தது. அவர் வேலை நிமித்தமாக ஸ்ட்ராஸ்பர்க்கை விட்டுச் சென்று பல ஆண்டுகள் ஆகியிருந்தன. செய்தி கேள்விப்பட்ட அவர் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள பேராலயத்திற்கு வந்து, கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரத்தின் ஒரு பகுதியைச் சரிசெய்தார். அவ்வளவுதான். கடிகாரம் முன்புபோல் அருமையாக இயங்கத் தொடங்கியது. இதைப் பார்த்த எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடிகாரம் செய்துதந்த மனிதர், எப்படி இயங்காமல் இருந்த கடிகாரத்தின் ஒரு சிறு பகுதியைச் சரிசெய்ததும், அது இயங்கித் தொடங்கியதோ அப்படி ஆண்டவர் இயேசு, இறந்து நான்கு நாள்களாகியிருந்த இலாசரைப் பார்த்து, “இலாசரே, வெளியே வா” என்று சொன்னதும், அவர் வெளியே வருகின்றார். ஆம், உயிர்த்தெழுதலும் வாழ்வும் இருந்தார். அதனால்தான் இறந்த இலாசரை உயிர்த்தெழச் செய்யமுடிந்தது. தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை ‘இயேசுவிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்’ என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இயேசு

நற்செய்தியில் இயேசுவிடம், பெத்தானியாவைச் சார்ந்த அவருடைய நெருங்கிய நண்பரான இலாசர் நோயுற்றிருந்த செய்தி சொல்லப்படுகின்றது. இயேசுவிடம் இச்செய்தி சொல்லப்பட்டபொழுது அவர் தன்னுடைய சீடர்களோடு யோர்தான் ஆற்றின் மறுகரையில் இருந்தார். செய்தியைக் கேள்விப்பட்டதும், உடனடியாக அவர் பெத்தானியாவிற்குச் சென்றுவிடவில்லை; இரண்டு நாள்கள் கழித்தே அங்கு செல்கின்றார். அவ்வாறு அவர் செல்ல முற்படும்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடம், “இரபி! இப்பொழுதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்கு போகிறீரா?” என்று கேட்கின்றார்கள். யூதர்கள் இயேசுவின்மீது கல்லெறிய முயன்ற நிகழ்வு யோவா 10:31ff இல் இடம்பெறுகின்றது.

யூதர்கள் தன்மீது கல்லெறிவார்கள் என்பதற்காகவோ, கொலை செய்வார்கள் என்பதற்காகவோ அஞ்சி இயேசு பெத்தானியாவிற்குப் போகாமல் இருந்துவிடவில்லை. அவர் பெத்தானிவிற்குப் போகிறார்; தன் நண்பர் இலாசரை உயிர்த்தெழச் செய்கின்றார். இதற்கு முன்பு இன்னொரு நிகழ்விலும்கூட, இயேசு அஞ்சா நெஞ்சத்தினராகத்தான் இருப்பார். பரிசேயர்களில் ஒருசிலர் இயேசுவிடம் இங்கிருந்து போய்விடும் என்று சொல்லும்பொழுது, அவர் அவர்களிடம், இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என்னுடைய பணி நிறைவுபெறும். இதை அந்த நரியிடம் போய்ச் சொல்லுங்கள் என்று துணிச்சலாகக் கூறுவார் (லூக் 13: 31-32). அந்தளவுக்கு இயேசு யாருக்கும் அஞ்சாதவராக இருந்தார்.

இந்த இடத்தில் தோமாவைக் குறித்துச் சொல்லியாகவேண்டும். இயேசுவின் மற்ற சீடர்கள் இயேசுவோடு பெத்தானியாவிற்குச் செல்ல அஞ்சியபொழுது, தோமா, “நாமும் செல்வோம்; அவரோடு இறப்போம்” (யோவா 11: 16) என்று துணிச்சலாகச் சொல்கின்றார். இயேசுவின் உயிர்ப்பில் ஐயம் கொண்டவராகவே அறியப்படும் தோமா, இவ்வளவு துணிச்சலாகவும் அஞ்ச நெஞ்சத்தோடும் பேசுவது, நாம் எப்பொழுதும் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, அஞ்சாமல் அவர் வழியில் நடக்கவேண்டும் என்ற செய்தியை உணர்த்துவதாக இருக்கின்றது.

நம்பினோருக்கு வாழ்வளிக்கும் இயேசு

பொதுவாக யோவான் நற்செய்தியில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வும் அல்லது இயேசு செய்கின்ற ஒவ்வோர் அருமடையாளமும் ஒவ்வொரு செய்தியை எடுத்துச் சொல்லும். இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கும் உரையாடல் (யோவா 4) இயேசு வாழ்வளிக்கும் தண்ணீரை அளிப்பவர் என்ற செய்தியையும், இயேசு பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவரை நலப்படுத்துகின்ற நிகழ்வு (யோவா 9) அவர் உலகின் ஒளி என்ற செய்தியையும் எடுத்துச் சொல்லும். இன்றைய நற்செய்தியில் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு, அவர் உயிர்த்தெழுதலும் வாழ்வுமாகவும் இருக்கின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

இயேசு அளிக்கக்கூடிய வாழ்வினைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால், நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் வரும் இலாசரின் சகோதரியான மார்த்தாவிடம் அது நிறையவே இருப்பதைக் காணமுடிகின்றது. குறிப்பாக அவர் இயேசுவிடம், நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான் என்று சொல்கின்றபொழுதும், இயேசு அவரிடம், உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். இதை நீ நம்புகிறாயா? என்று கேட்கின்றபொழுது, ஆம் ஆண்டவரே, நீரே மெசியா… என்று பேதுருவைப் போன்று நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுத்துகின்றபொழுதும் அவருடைய நம்பிக்கை மிகுதியாக இருப்பதைக் காணமுடிகின்றது. இதற்குப் பின்னரே அதாவது, ‘நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய்’ (யோவா 11:40) என்று இயேசு சொன்ன பின்னரே, இலாசரை உயிர்த்தெழச் செய்கின்றார்.

இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு, இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற, “இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளிநின்று மேலே கொண்டு வருவேன்” என்ற இறைவார்த்தையை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. ஆம், இயேசு உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கின்றார். அதனால்தான் அவர் இலாசரை உயிர்த்தெழச் செய்தார்.

ஊனியல்புக்கு ஏற்ப அல்ல, ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்தால் உயிர்த்தெழலாம்

இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்ததும், பின்னாளில் அவரே உயிர்த்தெழுந்ததும் நமக்கொரு செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அந்தச் செய்தியைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் இவ்வாறு கூறுகின்றார்; “இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்த ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால்… அவரே… சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்த்தெழச் செய்வார்.” ஆம், நாம் ஊனியல்புக்கு ஏற்ப அல்ல, ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றபொழுது உயிர்த்தெழுவோம் என்று உறுதி.

ஆனால், இன்று பலர் ஆவிக்குரிய வாழ்க்கை வாழாமல், ஊனியல்புக்கு (கலா 5: 9-21) ஏற்ப வாழ்ந்து கடவுள் கொடுக்க இருக்கும் நிலைவாழ்வு என்ற உன்னதக் கொடையை இழந்து நிற்கின்றார்கள். இவர்களைப் போன்று நாம் இருந்துவிடாமல், ஆண்டவரிடம் நம்பிக்கையும் அடுத்திருப்பவரிடம் அன்பும் கொண்டு வாழ்கின்றபோது, ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக நிலைவாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி. ஆகவே, நாம் ஊனியல்பைக் களைந்துவிட்டு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்’ (அப 2:4) என்பார் இறைவாக்கினர் அபக்கூக்கு. ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக அவர் தருகின்ற நிலைவாழ்வையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.