சாம்பல் புதனுக்குப் பின்வரும் ஞாயிற்றுக்கிழமை 5 – ம் நாள் தியானம்
இயோசு நாதருடைய ஆத்துமம் அடைந்த கஸ்தி வியாகுலங்கள்
1-ம் ஆயத்த சிந்தனை – “
என் ஆத்துமமானது மரணத்துக்கு ஏதுவான துயரம் கொண்டிருக்கிறது” என்று இயோசு நாதர் தமது சீஷர்களுக்குத் திருவுளம்பற்றுகிற வாக்கியத்தை நீ கேட்பதாக ரூபிகரித்துக் கொள்.
2-ம் ஆயத்த சிந்தனை –
துன்ப துயர வேளையில் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு முழுதும் அமைந்திருப்பதற்காக தேவ உதவியை மன்றாடிக் கேள்.
தியானம்
இயோசு நாதர் துயரமடையவும் சஞ்சலப்படவும் பயப்படவும் தொடங்குகிறார். அற்பப் பாவ முதலாய் அணுகாமலிருந்த நமது திவ்ய கர்த்தர் இவ்வளவு பயமும் நடுக்கமும் கொள்வதற்குக் காரண மென்ன? அவர் கொஞ்ச நேரத்துக்குள்ளே படப்போகிற பாடுகளை எல்லாம் தூரதிருஷ்டியால் கண்டு வேதனைப்படுகிறார். தமது கையால் கணக்கற்ற நன்மை உபகாரங்களை அடைந்த யூதாஸ் இஸ்காரியோத் சதிமானமாய்த் தம்மைப் பிடிக்கத் தேடி திரிகிறதையும் தம்மைக் கட்டக் கயிறு சங்கிலிகளையும், தம்மை அடிக்கப் பிரம்பு சாட்டைகளையும், கற்றூணில் சேர்த்துக் கட்டி? தலையில் அழுத்த முள்முடி முதலியவைகளையும், அவமானமாய்க் கொல்லுகிறதற்குச் சிலுவை மரம் இருப்பாணி முதலிய ஆயுதங்களையும் தயார் செய்கிறதையும், தாம் படப் போகும் கஸ்தி துன்பம் அவமான நிர்ப்பந்தங்களையெல்லாம் தூரதிருஷ்டியால் பார்த்து விசனப்படுகிறார்.
முன்சொன்ன பயங்கரத்துக்குரிய காரியங்களை நினைக்கும் போது அவர் ஆத்துமம் அடைந்த துக்க மிகுதி இம்மாத்திரமென்று சொல்லி முடியுமோ? முன் சொன்ன கஸ்தி துயரங்களைச் சரீரத்தில் அநுபவிக்கப் போகிறதில் திருப்தியடையாமல் நமது மட்டில் அவருக்குள்ள கரைகாணாத சிநேகத்தைக் காட்டும் பொருட்டு ஆத்துமத்திலும் அவைகளை உணரத் திருவுளமானார். இப்படிப்பட்ட நிர்ப்பந்த வேளையில் நமது இரட்சகருக்கு மனமிருந்தால் மோட்ச ஆனந்தத்தைத் தமது தெய்வீகத்தால் ஸ்பரிசித்து மேற்கண்ட கஸ்தி நிர்ப்பந்தங்களை மாற்றிக் கொள்ளக் கூடுமானவராய் இருந்த போதிலும் அந்த உபாயங்களை அவர் தேடினதில்லை. நாமும் நமது திவ்ய ஆசிரியரைப் பின்பற்றி நமக்கு வரும் துன்பதுயரங்களில் முறைப்படாமல் சகலத்தையும் நல்ல மனதோடு அநுபவித்து சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்போமாக.
“என் ஆத்துமம் மரணத்துக்கேதுவான துயரம் கொண்டிருக்கிறது” என்று சொல்லுகிறார். இவ்வகையாய்ச் சேசுநாதர் தம் மனதில் அநுபவிக்கும் கஸ்தியையும் வியாகுலத்தையும் வெளிப் படுத்துவது ஏன்? அவர் தமது மனதில் அநுபவிக்கும் வியாகுலத்தை மனிதர் கண்டுபிடிக்கக் கூடாததைப்பற்றித் தாம் தேவனும், மனிதனுமாயிருக்கிறபடியால் மனுஷ சுபாவத்தில் தாம் படும் துன்பதுரிதங்களை உணர்ந்து அநுபவிக்கிறார் என்று காட்டும்படியாகவும்,
இரண்டாவது, அவர் தாபோர் மலையில் மறுரூபமானபோது மூன்று சீஷர்களுடைய கண்களை மங்கச் செய்து அவர்களுக்கு மயக்கம் வருவிக்கத்தக்க தமது மகிமைப்பிரதாபத்தைக்(மோட்சம்) காட்டியிருக்க, இப்போது அப்படிப்பட்ட ஆறுதலைத் தேடாமல் நமக்காக இந்தக் கஸ்தி துன்பங்களை முழுமனதுடன் அநுபவிக்கிறாரென்று காட்டும் படியாகவும், தமக்குண்டாயிருக்கிற வருத்தத்தை மற்ற அப்போஸ் தலர்களுக்கு வெளிப்படுத்தாமல் கொஞ்ச காலத்துக்குமுன் பரலோக இன்பத்தை ருசிபார்த்த இந்த மூன்று சீஷர்களுக்கு மாத்திரம் தெரியச் செய்கிறார்.
நாமும் யாதோர் காலத்தில் சந்தோஷம் அநுபவிக்க நேரிடும்போது சர்வேசுரன் நமக்குச் சீக்கிரத்தில் அனுப்பவிருக்கும் சிலுவையை நல்ல மனதோடு ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கக்கடவோம். கடைசியாய் நமக்கு எவ்வளவான அனுகூலங்கள் கிடைத்தபோதிலும் அதிலே பிரியம் கொள்ளாமல் பின் வரவிருக்கும் இக்கட்டுகளைப் பொறுமையுடன் அனுபவிக்கத் தயாராயிருப்போமாக.
ஜெபம்
ஆண்டவராகிய இயோசுக்கிறிஸ்துவே, உமது கசப்பான திருப்பாடுகளின் நேரத்தில் வியாகுல வாளால் தன் மகா பரிசுத்த ஆத்துமத்தில் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரி, உமது கிருபாசனத்திற்கு முன்பாக, இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேச வரமருளும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமான உலக இரட்சகருமாகிய உம் வழியாக இந்த வரத்தை மன்றாடிக் கேட்கிறோம். ஆமென்.
பரிசுத்த திருக்குடும்பமே எங்களை புண்ணிய வாழ்வு வாழ வழிநடத்துங்கள்
ஆமென்
இயோசு கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே தொடர்ந்து இந்த தவக்கால நாட்கள் தியானம் ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படும் இந்த தியானங்களை பக்தியோடு தியானித்து நம் வாழ்வை மாற்றுவோம் – ஆமென்
தொடர்ந்து இணைந்திருங்கள்
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை
Comments are closed.