நற்செய்தி வாசக மறையுரை (பிப்ரவரி 19)

பொதுக்காலம் ஆறாம் வாரம் புதன்கிழமை
மாற்கு 8: 22-26
“ஊரில் நுழைய வேண்டாம்”
நிகழ்வு
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இவர் பிரதமராக இருந்த நேரம் ஒருசில செய்தியாளர்கள் இவரைப் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றும் இவரை நேர்காணல் செய்யவேண்டும் என்றும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள், முடியவில்லை. அவர்கள் இவரிடத்தில் நேரடியாக வந்து அனுமதி கேட்டபொழுதும், இவர் மறுத்துவிட்டார். அதற்கு இவர் சொன்ன காரணம் இதுதான்:
“உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இரண்டுவிதமான கற்கள் பயன்படுத்தப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றது. ஒன்று, அடித்தளம் கட்டப் பயன்படுத்தப்பட்ட பாறாங்கல். இது வெளிப்பார்வைக்குத் தெரியாது. இரண்டு, அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சலவைக்கல். இது மக்களுடைய பார்வைக்குத் தெரியும்… என்னுடைய குரு ‘நீ பாறாங்கல்லைப் போன்று யாருடைய பார்வைக்கும் தெரியாமல் மக்களுக்கு உதவி செய்யவேண்டுமே ஒழிய, சலவைக்கல்லைப் போன்று எல்லாருக்கும் தெரிகின்ற மாதிரி உதவி செய்யக்கூடாது’ என்று சொல்லியிருக்கின்றார். அதனால்தான் என்னைப் புகைப்படம் எடுக்கவோ, நேர்காணல் செய்யவோ, எந்தவொரு விளம்பரமும் செய்யவோ வேண்டாம் என்று சொல்கிறேன்.”
நம்முடைய நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மேலே சொன்ன வாரத்தைகள் நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. இன்றைய நற்செய்தியில் இயேசு பார்வையற்ற மனிதருக்குப் பார்வையளித்துவிட்டு, “ஊரில் நுழையவேண்டாம்’ என்று கூறுகின்றார். இயேசு அந்த மனிதரிடம் கூறுகின்ற வார்த்தைகள் நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
விளம்பரத்தை விரும்பாத இயேசு
மனிதர்களில் ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு குழல்விளக்கைக் கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டு, பெரிதளவில் விளம்பரத்தைத் தேட விரும்புவார்கள்; தேடியும் கொள்வார்கள். இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் எதைச் செய்தாலும் மக்கள் தங்களைப் பார்க்கவேண்டும், பாராட்டவேண்டும் என்றே செய்வார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு நடுவில் முற்றிலும் வித்தியாசப்பட்டவராக இருக்கின்றார் இயேசு.
ஆம், இன்றைய நற்செய்தியில் இயேசு பார்க்வையற்ற மனிதருக்குப் பார்வையளித்துவிட்டு, அவரிடம் இதை எல்லாரிடமும் போய்ச் சொல் என்று சொல்லவில்லை. மாறாக, அவரிடம், “ஊருக்குள் நுழைய வேண்டாம்” என்று சொல்கின்றார். இது நமக்கு இரண்டு உண்மைகளை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. ஒன்று, இயேசு விளம்பரத்தையோ அல்லது பெயரையும் புகழையும் விரும்பவில்லை என்பதாகும். இரண்டு, ஒருவேளை பார்வையற்ற மனிதர் பார்வை பெற்ற பிறகு, தன்னைக் குறித்து மக்களிடம் ‘தான் அருமடையாளங்களை நிகழத்தக்கூடியவர்’ என்று சொன்னால், அது தன்னுடைய பணிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதாலும், தான் அருமடையாளங்களை நிகழ்த்துவதற்கு மட்டும் வரவில்லை, மக்களுக்கு மீட்பை வழங்கவந்தேன் என்பதாலும் அவரிடம் அவ்வாறு சொல்கின்றார்.
இயேசுவிடமிருந்து நலம்பெற நம்பிக்கையோடு நம்மை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கும் இரண்டாவது முக்கியமான செய்தி, இறைவனிடமிருந்து நாம் நலம்பெறவேண்டும் என்றால், நம்பிக்கையோடு நம்மை அவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதாகும்.
நற்செய்தியில் இயேசுவும் அவருடைய சீடர்களும் பெத்சாய்தா வருகின்றபொழுது, அவரிடம் ஒருசிலர் பார்வையற்ற மனிதரைக் கொண்டுவந்து அவரைத் தொடும்படி வேண்டுகின்றார்கள். ஒருவேளை அவர்கள், இயேசு பார்வையற்ற மனிதரைத் தொட்டால், அவருக்குப் பார்வை கிடைக்கும் என்று நம்பியிருக்கவேண்டும். அதனாலேயே அவர்கள் பார்வையற்ற மனிதரை இயேசுவிடம் கொண்டுவருகின்றார்கள். இன்னொரு செயலையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், என்னதான் பார்வையற்ற மனிதருக்கு அறிமுகமான மனிதர்கள் இயேசுவிடம் நம்பிக்கையோடு இருந்தாலும், பார்வையற்ற மனிதர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற மனிதரை இயேசு கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் செல்கின்றபொழுது, அவர் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு, அவரிடம் தன்னை முற்றிலும் ஒப்படைத்து, அவர்பின் செல்கின்றார். அப்படியானால் அவர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டிருந்தார், அந்த நம்பிக்கையினால் அவர் பார்வைபெற்றார் என்பது உறுதியாகின்றது.
அடுத்ததாக, பார்வையற்ற மனிதர் உடனடியாகப் பார்வை பெறாமல், படிப்படியாகப் பார்வை பெற்றது என்ன செய்தியைத் தருகின்றது என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். சில நேரங்களில் இறைவனிடம் நாம் எடுத்து வைக்கும் மன்றாட்டு உடனடியாகக் கேட்கப்படாமல் போகலாம். ஆனால், இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப அது அமைந்திருப்பின் நிச்சயம் கேட்கப்படும் என்பதை உணர்ந்துகொள்ளலாம். மேலும் இந்த நிகழ்வு இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளாமல், கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் இருந்த இயேசுவின் சீடர்களை, அவர்மீது நம்பிக்கைக் கொள்ளத் தூண்டுவதாக இருக்கின்றது.
ஆகையால், நாம் இயேசுவிடமிருந்து நன்மைகளைப் பெற, அவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கு முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார்’ (எபி 10: 38) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.