நற்செய்தி வாசக மறையுரை (பிப்ரவரி 18)

பொதுக்காலம் ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
மாற்கு 8: 14-21
நேர்மறை எண்ணத்தோடு வாழ்வோம்
நிகழ்வு
மிகப்பெரிய மறைப்பணியாளரான ஒய்ட்பீல்ட் என்பவர் ஒரு பொதுக்கூட்டத்தில், “கடவுள் தான் படைத்த அனைத்தையும் மிக நேர்த்தியாகப் படைத்திருக்கின்றார்” என்று பேசிக்கொண்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் கூன்விழுந்த மனிதர் ஒருவர் இருந்தார். அவர் மெல்ல எழுந்து, “கடவுள் தான் படைத்த அனைத்தையும் மிக நேர்த்தியாகப் படைத்திருக்கின்றார் என்று சொல்கின்றார்கள். அப்படியானால், கூன்விழுந்த நிலையில் இருக்கும் என்னை என்ன சொல்வீர்கள்?” என்றார்.
ஒய்ட்பீல்ட் சிறிதும் தாமதியில், “என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு நேர்த்தியான கூன்விழுந்த மனிதரை நான் கண்டதில்லை. இதற்காகவே நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்” என்றார். இதைக் கேட்டு கூட்டம் கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.
மேலே உள்ள நிகழ்வில் வரும் மனிதர், தான் கூன் விழுந்த நிலையில் இருக்கின்றோமே என்று தன்னுடைய வாழ்க்கையை எதிர்மறையாக அணுகியபொழுது, மறைப்பணியாளரான ஒய்ட்பீல்ட் அவருடைய உடலில் இருந்த கூனை நேர்மறையாகப் பார்த்தது நமக்கு கவனித்திற்கு உரியதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் எதிர்மறையோடு இருந்த சீடர்களை நேர்மறையோடு இருக்க அழைப்புத் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சீடர்களின் எதிர்மறை எண்ணம்
நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்” என்று கூறுகின்றார். இதற்கு இயேசுவின் சீடர்கள் எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது முன், ‘பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவு என்றால் என்ன?’ என்று தெரிந்துகொள்வது நல்லது. பரிசேயர் மற்றும் ஏரோதியரின் புளிப்பு என்கிறபொழுது அவர்களுடைய உலகப் போக்கிலான வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய போக்கு அல்லது எண்ணம் அளவில் சிறிதாக இருந்தாலும்கூட, ஒட்டுமொத்த மனிதரையே சாய்த்துவிடும் (2 கொரி 13:5; கலா 5:9) என்பதால், அதைக் குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கின்றார்; ஆனால், சீடர்களோ தாங்கள் அப்பம் கொண்டுவரவில்லை என்பதைத்தான் இயேசு மறைமுகமாகச் சாடுகின்றார் என்று தவறாக நினைக்கின்றார்கள்.
இங்கு நாம் கவனிக்கவேண்டிய ஒன்று, சீடர்களின் அவநம்பிக்கை அல்லது அவர்களுடைய எதிர்மறை எண்ணம்தான். அவர்கள் தங்களோடு இயேசு இருக்கின்றார் என்பதை மறந்துவிட்டு, அப்பமில்லையே என்ற எதிர்மறை எண்ணத்தோடு இருக்கின்றார்கள். இந்நிலையில்தான் இயேசு அவர்களுக்குச் சரியான விளக்கத்தைத் தருகின்றார்.
சீடர்களின் நம்பிக்கையின்மை
சீடர்கள் தங்களிடம் அப்பமில்லையே என்று கவலைப்பட்டதை அவர்களுடைய நம்பிக்கையின்மை என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த நிகழ்வுக்கு முன்பாக இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கும், ஏழு அப்பங்களையும் சில மீன் துண்டுகளையும் கொண்டு நான்காம் பேருக்கு உணவளித்திருப்பார். ஒருவேளை இயேசுவின் சீடர்கள், குறைவானவற்றைக் கொண்டு நிறைவானவற்றை இயேசு செய்யக்கூடியவர் என்று நம்பியிருந்தால், இப்படியெல்லாம் நினைத்திருக்கமாட்டார்கள்; பேசியிருக்கவும் மாட்டார்கள். அவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாததால்தான், அவர் யாரென்று உணர்ந்துகொள்ளாததால்தான் இவ்வாறெல்லாம் எண்ணிக்கொள்கின்றார்கள். இதனால்தான் இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் காண்பதில்லையா…?” என்றெல்லாம் கேள்வி கேட்கின்றார்.
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, இந்த நொடியில் வாழ்
சீடர்கள் எதிர்மறை எண்ணத்தோடு, நம்பிக்கையின்றி இருப்பது, அதற்காக இயேசு அவர்களைக் கடிந்துகொள்வதும் நமக்கொரு முக்கியமான ஒரு செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், கடவுள்மீது நம்பிக்கை வைத்து இந்த நொடியில் வாழவேண்டும் என்பதாகும். இயேசுவின் சீடர்கள் தங்களிடம் ஓர் அப்பம் மட்டும்தானே இருக்கின்றது! அடுத்து என்ன செய்வது என்று எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். மட்டுமல்லால், ஆண்டவர்மீது நம்பிக்கையில்லாமல் இருந்தார்கள். ஒருவேளை அவர்கள் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, நிகழ்காலத்தில் வாழ்ந்திருந்தால் அவர்கள் இப்படியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள்.
ஆகையால், நாம் சீடர்களைப் போன்று இல்லாமல், ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, நிகழ்காலத்தில் வாழ்வோம். அதன்வழியாக இறைவன் தரும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்’ (மத் 6: 34) என்பார் இயேசு. ஆகையால், நாம் நாளைய நாளை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், ஆண்டவரின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் நம்பிக்கை வைத்து, நிகழ்காலத்தில் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.