பிப்ரவரி 6 : நற்செய்தி வாசகம்

இயேசு பன்னிருவரையும் அனுப்பினார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார். அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாறவேண்டும் என்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————-
மாற்கு 6: 7-13

“அவர்களை அனுப்பத் தொடங்கினார்”

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘London Times’ என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு விளம்பரம். “ஆபத்தான பயணத்திற்கு ஆள்கள் தேவை. குறைந்த ஊதியம், கடுமையான குளிர். பல மாதங்கள் இருட்டிலேயே இருக்கவேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம். திரும்பி வருவது சந்தேகம்தான். ஒருவேளை பயணம் வெற்றிகரமாக முடிந்தால் பெயரும் புகழும் கிடைக்கும். இதற்கு விரும்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.”

இந்த விளம்பரத்தைப் பலர் வியப்பாகப் பார்த்தார்கள். ஆனாலும் ஐயாயிரத்தும் மேற்பட்டோர் இதற்கு விண்ணப்பித்தார்கள். இந்த ஐயாயிரம் பேரில் தகுதியான 27 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, அந்த 27 பேரையும் சர் எர்னெஸ்ட் ஷக்லேடன் தன்னோடு கூட்டிக்கொண்டு தென் துருவத்தில் பயணம் செய்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பல மாதங்கள் தொடர்ந்த இந்தப் பயணம் வெற்றியோடு முடிந்தது. இதனால் சர் எர்னெஸ்ட் ஷக்லேடனோடு பயணம் செய்த அந்த 27 பேருக்குப் பெயரும் புகழும் கிடைத்தன.

சர் எர்னெஸ்ட் ஷக்லேடன், 27 பேரோடு சேர்ந்து தென் துருவத்தை நோக்கி மேற்கொண்ட பயணம் எப்படிச் சவால்கள் நிறைந்தவையாக இருந்ததோ, அதுபோன்றுதான் சீடத்துவ வாழ்வும் பணியும் சவால்கள் நிறைந்தவை. இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய பன்னிரு சீடர்களைப் பணித்தளத்திற்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு தாம் சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது அவரளுக்குக் கொடுக்கக்கூடிய அறிவுரைகள் என்ன? பணித்தளங்களில் அவர்கள் சந்திக்க இருந்த சவால்கள் என்ன? நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி இயேசுவின் சீடர்களாக இருந்து பணிசெய்வது? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அனுப்பப்பட்ட திருத்தூதர்கள்

நற்செய்தியில் இயேசு பன்னிரு திருத்தூதர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். திருத்தூதர்கள் என்றாலே அனுப்பப்படுகின்றவர்கள்தானே! இயேசு பன்னிரு திருதூதர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றகின்றபோது சாதாரணமாக அனுப்பிவிடவில்லை. தீய ஆவிகளின்மீது அதிகாரம் கொடுத்து, உடல் நலம் குன்றியவர்களை நலப்படுத்துவதற்கான வல்லமையைக் கொடுத்து இருவர் இருவராக அனுப்புகின்றார்.

ஆண்டவரை நம்பிப் பணிசெய்யவேண்டும்

இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்கு அவர் சொல்லக்கூடிய அறிவுரைகளும் மிகவும் கவனிக்கத்தக்கவையாக இருக்கின்றன. குறிப்பாக அவர்கள் எவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு போகவேண்டும்… எவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்பதைக் குறித்து இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகள் மிகவும் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

இயேசு தன் சீடர்களிடம், ‘பணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்’ என்று சொல்வதில் மூன்று முக்கியமான உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அதில் முதலாவது, இயேசுவின் போதனையை அவருடைய சீடர்கள் வழியாகக் கேட்கக்கூடியவர்கள், இயேசு தங்களுக்கு செல்வத்தைத் தரப்போகிறார் என்ற தவறான புரிதலுக்கு வந்துவிடக்கூடாது என்பதாகும். பலருக்கு இயேசுவின் போதனையைக் கேட்பதாலும் அவரைப் பின்பற்றி நடப்பதாலும் வளமையான வாழ்வு கிடைத்துவிடும் என்ற எண்ணம் இருக்கின்றது. இது ஒரு தவறான புரிதலாகும்.

இரண்டாவது, இயேசுவின் சீடர்கள் இறைவனை நம்பிப் பணிசெய்ய வேண்டுமே ஒழிய, பொருள்களையோ அல்லது பணத்தையோ நம்பிப் பணிசெய்யக்கூடாது என்பதாகும். பழங்காலத்தில் (இன்றைக்கும்கூடத்தான்) பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கச் செல்கின்றபொழுது, தங்களோடு பையையும் எடுத்துச் செல்வார்கள். அதற்கு முக்கியமான காரணம், பிச்சையாக கிடைப்பவற்றைக் அள்ளிக்கொண்டுவருவதற்குத்தான். இயேசுவின் சீடர்கள் அவர்களைப் போன்று இருக்கக்கூடாது, அவர்கள் இறைவனை நம்பிப் பணிசெய்ய வேண்டும் என்பதற்குதான் இயேசு எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று கூறுகின்றார்.

மூன்றாவது, இயேசுவின் சீடர்கள் யாரிடம் பணிசெய்கின்றார்களோ, அவர்கள் அவர்களைப் பார்த்துக்கொள்ளவேண்டும். இதைத்தான் இயேசு வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே” (மத் 10: 10) என்று கூறுகின்றார். அப்படியானால், இறையடியார்களை இறைமக்கள் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது மிகவும் இன்றியமையாத கடமையாக இருக்கின்றது.

சீடத்துவ வாழ்வில் சவால்கள் நிச்சயம் உண்டு

இயேசு பன்னிரு திருத்தூதர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, இன்னொரு முக்கிய செய்தியையும் சொல்கின்றார். அது என்னவெனில், ‘உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமல் போனால்… உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்” என்பதாகும். வழக்கமாக யூதர்கள் பிற இனத்து மக்களுடைய பகுதியைக் கடந்துவிட்டு, தங்களுடைய பகுதிக்குள் வருகின்றபொழுது, தங்களுடைய கால்களில் தூசியை உதறுவார்கள். ஆனால், இயேசு தன்னுடைய சீடர்களிடம் யாரெல்லாம் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர்களுடைய ஊரை விட்டு வெளியே வருகின்றபொழுது, உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள் என்கின்றார். இதனால் அந்த ஊர் தண்டனைக்குரியதாக இருக்கின்றது.

ஆகையால், இயேசுவின் சீடர்களாக இருந்து அவருடைய வார்த்தையை அறிவிப்பதும் அறிவிக்கப்பட்ட வார்த்தையின்படி நடப்பதும் நம்முடைய இருபெரும் கடமை என்பதை உணர்ந்து இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘கடவுளுக்கு உன்னிடத்தில் இருப்பவனவற்றுள் சிறந்ததைக் கொடுத்துவிடு, அதுவும் இப்போதே கொடுத்துவிடு’ என்பார் ரால்ப். டபில்யூ சோக்மன் என்ற அறிஞர். ஆகையால், நாம் கடவுளுக்கு நம்மிடத்தில் இருப்பவனவற்றுள் சிறந்தவற்றை ஏன், நம்மையே அவருக்குக் கொடுத்து அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.