அருள்பணியாளர்களின் மணமாகா நிலைக்கு ஆதரவு
இலத்தீன் வழிபாட்டுமுறையில், மணமாகா நிலையை அருள்பணியாளர்கள் தேர்ந்துகொள்வதை, அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆதரவாக இல்லை என்று, திருப்பீடம் சனவரி 13, இத்திங்களன்று அறிவித்துள்ளது.
அருள்பணியாளர்களின் மணமாகா நிலை குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மற்றும், திருவழிபாட்டுப் பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா (Robert Sarah) அவர்களின் கருத்துக்களை இணைத்து உருவாகியுள்ள, “எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து” (From the Depths of Our Hearts) என்ற ஒரு புதிய நூலையொட்டி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருப்பீட செய்தி தொடர்பக இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், இவ்விவகாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களின் மணமாகா நிலைக்கு ஆதரவு வழங்கும் தன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.
பானாமா நாட்டிலிருந்து திரும்பியவேளை, விமானத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களின் மணமாகா நிலை பற்றிய சட்டம் மாற்றப்படுவதற்குமுன், என் வாழ்வைக் கையளிக்க விரும்புகிறேன் என்றுரைத்த புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன என்று கூறினார் என்றும், அருள்பணியாளர்களின் மணமாகா நிலை குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும் புரூனி அவர்கள் கூறினார்.
என்னைப் பொறுத்தவரை, அருள்பணியாளர்களின் மணமாகா நிலை, திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்றும், அருள்பணியாளர்களின் மணமாகா நிலையில் மாற்றம் கொணர்வதில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், மேய்ப்புப்பணிகள் அதிகம் தேவைப்படும், எளிதில் செல்ல முடியாத இடங்களில் வாழும் மக்கள் பற்றி மேய்ப்பர் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும், இதில், பசிபிக் தீவுகளை நினைத்துப் பார்க்கிறேன் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, புரூனி அவர்கள் குறிப்பிட்டார்.
“எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து” என்ற தலைப்பில், சனவரி 15, இப்புதனன்று, பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்ச் மொழியில் வெளியாகும் இந்நூல், ஆங்கில மொழியில், பிப்ரவரி 20ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.