சனவரி 13 : நற்செய்தி வாசகம்
மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20
அக்காலத்தில் யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது, சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது, செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
மாற்கு 1: 14-20
“…விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்”
நிகழ்வு
பிரான்ஸ் நாட்டில் உள்ள லயோன்ஸ் என்ற நகரில் பீட்டர் வால்டோ என்ற வணிகர் ஒருவர் இருந்தார். இவர் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். இவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு விருந்தில் கலந்துகொண்டு, மகிழ்ச்சியில் திளைத்திருந்தபோது, திடீரென இறந்துபோனார். தன்னுடைய நண்பரின் இறப்பு, பீட்டர் வால்டோவைப் பெரிதும் பாதித்தது. அப்பொழுதுதான் இவர் உலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தார்.
இதற்குப் பின்பு இவர் தன்னுடைய உடைமைகளை எல்லாம் விற்றுவிட்டு, விவிலியத்தை அறிஞர் பெருமக்களிடமிருந்து நன்றாகக் கற்றுக்கொண்டு, ஆண்டவர் இயேசுவைப் பற்றி மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். இவருடைய போதனையைக் கேட்டு, பலரும் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இவர் மக்களிடம் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள்: “இயேசுவை உற்றுநோக்குங்கள்; இயேசு சொல்வதைக் கேளுங்கள்; இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.”
மிகப்பெரிய செல்வந்தராக இருந்து, பின்பு இயேசுவின் பால் ஈர்க்கப்பட்டு, எல்லாவற்றையும் துறந்து, இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கிய பீட்டர் வால்டோ சீடத்துவ வாழ்விற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. நற்செய்தியில் இயேசு முதல் சீடர்களை அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அவர்களுடைய அழைப்பு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்போழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
யோவான் கைதுசெய்யப்படுதல்
இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், யோவான் கைதுசெய்யப்பட்டபின் கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார் என்று வாசிக்கின்றோம். இங்கு யோவான் கைதுசெய்யப்படத்தை ஒரு முக்கிய நிகழ்வாகத்தான் பார்க்கவேண்டும். காரணம், மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்து, வந்த பின் அவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான், தன் சகோதரனின் மனைவியோடு கூடிவாழ்ந்து வந்த ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டுக்கின்றார். இதனால் ஏரோது திருமுழுக்கு யோவானைக் கைதுசெய்கின்றான். ஏற்கனவே இயேசுவை மக்களுக்குச் சுட்டிக்காட்டியிருந்த திருமுழுக்கு யோவான், ஏரோதுவால் கைதுசெய்யப்பட்டது என்பது, அவர் தன்னுடைய பணியை நிறைவுசெய்துவிட்டு, அதனை ஆண்டவர் இயேசுவிடம் ஒப்படைக்கின்றார் என்பதன் அர்த்தமாக இருக்கின்றது. ஆம், திருமுழுக்கு யோவான் ஏரோதுவால் கைதுசெய்யப்பட்டதை, இறைப்பணியை இயேசுவிடம் ஒப்படைக்கின்றார் என்பதாகக் கொள்ளலாம்.
“…மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அறிவிக்கத் தொடங்கிய இயேசு
திருமுழுக்கு யோவான் தன்னுடைய பணியை நிறைவு செய்ததும், இயேசு இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்த இறைவாக்கினர்கள், மெசியாவின் ஆட்சி வரப்போகிறது… அப்பொழுது எல்லா மக்களும் எல்லா நலன்களையும் பெற்று, மகிழ்வாக இருப்பார்கள் (எசா 11) என்று அறிவித்து வந்தார்கள். திருமுழுக்கு யோவானோ ஒருபடி மேலே சென்று மெசியாவைச் சுட்டிக்காட்டினார். ஆண்டவர் இயேசு, “இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது (ஆதலால்). மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அறிவிக்கத் தொடங்கினார். ஆண்டவராகிய கடவுள் வரலாற்றில் செயல்படத் தொடங்கியபொழுதே இறையாட்சி வந்துவிட்டதுதான். அத்தகைய இறையாட்சிக்கு உட்படுவதற்கு ஒவ்வொருவரும் மனமாறவேண்டும் என்று ஆண்டவர் இயேசு அறிவிக்கின்றார். இயேசு அறிவித்த இந்த நற்செய்தி அல்லது மனமாற்றச் செய்தி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவால் ஈர்க்கப்பட்டு, அவருடைய பணியைச் செய்ய வந்த சீடர்கள்
இயேசு அறிவித்த நற்செய்தி அல்லது மனமாற்றச் செய்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், இயேசு அறிவித்த செய்தியால் முதலில் அந்திரேயாவும் அவருடைய சகோதர் பேதுருவும், யோவானும் அவருடைய சகோதர் யாக்கோபும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆகின்றார்கள்.
இதை இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்ற அந்திரேயா தன் சகோதர் பேதுருவிடம் மெசியாவைக் கண்டோம் என்று சொல்கின்றார் (யோவா 1:41). அந்திரேயாவோடு சென்று, இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்ற இன்னொரு சீடரான யோவானும் தன் சகோதரர் யாக்கோபிடம் இயேசுவைக் குறித்து நிச்சயம் சொல்லியிருக்கக்கூடும். அதனால்தான் இயேசு அவர்களை அழைத்தபொழுது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்கள் இயேசுவைப் பின்தொடர்கின்றார்கள்.
அன்று இயேசு சீடர்களைத் தன்னுடைய பணியைச் செய்ய அழைத்ததுபோன்று, இன்று நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். நாம் அவருடைய பணியைச் செய்யத் தயாரா?
சிந்தனை
‘இதோ நானிருகின்றேன். அடியேனை அனுப்பும்’ (எசாயா 6:8) என்று சொல்லி இறைப்பணிக்குத் தன்னை கையளித்த எசாயா இறைவாக்கினரைப் போன்று, இறைப்பணி செய்ய நாம் முன் வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.