போரை விதைப்பவர்கள், கிறிஸ்தவர்கள் அல்ல – திருத்தந்தை
நாம் வாழும் குடும்பங்களில், சமுதாயத்தில், பணியிடங்களில், போரை விதைப்பவர்களாக இருந்தால், நாம் கிறிஸ்தவர்கள் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 9, இவ்வியாழன் காலை திருப்பலியில் வழங்கிய மறையுரையில் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, கடவுளின் அன்பில் நிலைத்திருப்பது குறித்து புனித யோவான் திருமுகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மையப்படுத்தி மறையுரை ஆற்றினார்.
போரற்ற நிலை மட்டும் அமைதி அல்ல…
அமைதி என்று சொன்னதும் போரைப் பற்றி நாம் சிந்திக்கிறோம், போரற்ற நிலையே அமைதி என்று கூறும்போது, அது, நமக்கு வெளியே, நாடுகளுக்கிடையே நிலவும் அமைதி என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்குகிறது என்று தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய அமைதி நிலவ, நாம் செபிப்பது தேவை என்பதை எடுத்துரைத்தார்.
உண்மை அமைதி, உள்ளிருந்து…
நமக்கு வெளியே நிலவும் அமைதியைப்பற்றி மட்டும் எண்ணிப்பார்ப்பது, உண்மையான அமைதி அல்ல, மாறாக, உண்மை அமைதி, நமக்குள், நம் குடும்பங்களுக்குள் மோதல்களை உருவாக்காத நிலை என்பதை நாம் உணரவேண்டும்; அத்தைகைய அமைதி நிலவ, நாம் கடவுளுடன் ஒன்றித்திருக்க வேண்டும் என்பதை, திருத்தூதர் யோவான் அறிவுறுத்துகிறார் என்று திருத்தந்தை கூறினார்.
கடவுள் இருக்கும் இடத்தில் அமைதி தானாகவே குடிகொள்ளும், ஏனெனில், கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் நமக்கு வழங்கும் அன்பு, தொலைக்காட்சிகளில் காட்டப்படும் அன்பைப்போல வெளிவேடமாக இருக்காது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
யார் பெரியவர் என்ற எண்ணம்
நான், மற்றவர், என்ற வேறுபாடுகள், குடும்பங்களிலும், நாம் வாழும் சமுதாயத்திலும் உருவாகும்போது, அங்கு யார் பெரியவர் என்ற எண்ணமும், போட்டியும், பகைமையும் உருவாகின்றன என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, கடவுளில் நிலைத்திருக்கும் வரத்திற்காக செபிப்போம் என்று விண்ணப்பித்தார்.
அமைதி பற்றி டுவிட்டர் செய்தி
திருப்பலியில் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுடன் ஒன்றித்திருப்பதையும், அன்பையும், இணைத்து, சனவரி 9, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியைப் பதிவு செய்திருந்தார்.
Comments are closed.