டிசம்பர் 28 : நற்செய்தி வாசகம்

ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார்.

யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார்.

இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

அப்பொழுது “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
“கடவுள் ஒளியாய் இருக்கிறார்”

நிகழ்வு

மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக நடந்த நிகழ்வு இது.

இளைஞன் ஒருவன் ஒரு பெரிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான்.திடீரென்று மழை பெய்யவே, ஒதுங்குவதற்காக அவன் அருகில் இருந்த ஒரு ஆலயத்திற்குள் சென்றான். அவ்வேளையில் கோவிலில் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருந்தது. குருவானவர் “நானே உலகின் ஒளி” என்ற கருத்தினை மையப்படுத்தி, மறையுரை ஆற்றிக்கொண்டிருந்தார். அந்த இளைஞன் அவர் சொல்வதை கவனமுடன் கேட்கத் தொடங்கினான்.

சிறிதுநேரத்தில் திருப்பலி முடிந்தது. திருப்பலி முடிந்தபிறகு அவன் குருவானவரிடம் சென்று, “ஐயா நீங்கள்தான் உலகின் ஒளியா?” என்றான். அதற்கு குருவானவர் அவனிடம், “இயேசுவே உலகின் ஒளி; நான் அந்த ஒளியில் இருக்கக்கூடிய ஒருசிறு வெளிச்சம்” என்றார். அதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்ட அந்த இளைஞன், அவரிடம், “என்னுடைய பகுதியில் மிகவும் இருட்டாக இருக்கிறது. உலகின் ஒளியாக இருக்கக்கூடிய இயேசுவும் நீங்களும் என்னுடைய பகுதிக்கு வந்தால் என்னுடைய பகுதி மிகவும் பிரகாசமாக மாறும்” என்றான்.

‘ஒளியான இயேசு தன்னுடைய பகுதிக்கு வந்தால், தன்னுடைய பகுதி மிகவும் ஒளிமயமாக இருக்கும்’ என்ற அந்த இளைஞனுடைய நம்பிக்கை மிகவும் வியக்கத்தக்க கூடியதாக இருக்கிறது. இன்றைய முதல் வாசகம் ஒளியாகச் சுட்டிக்காட்டுகிறது. கடவுள் ஒளியாக இருக்கிறார் என்றால், நாமும் ஒளியாக இருக்கவேண்டும். அப்படி ஒருவர் ஒளியாக இருக்கிறபொழுது அவர் எப்படிப்பட்டவராக இருக்கின்றார். அதேநேரத்தில் அவர் இருளாக இருக்கிறது எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை

யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை” என்று குறிப்பிடுகின்றார். கடவுள் அன்பாய் இருக்கிறார் (1யோவா 4:8) வழியாக, உண்மையாக இருக்கின்றார் (யோவா 14:6) என்று குறிப்பிடும் யோவான், இங்கு கடவுள் ஒளியாய் இருக்கின்றார் என்று குறிப்பிடுவது நமது கவனத்திற்குரியதாக இருக்கின்றது. கடவுள் ஒளியாய் இருக்கின்றார் இருக்கின்றார் என்றால், அவர் வாழ்வாக இருக்கின்றார் என்பதுதான் பொருள். ஏனெனில் ஒளி இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும் (யோவா 14:6) அதே நேரத்தில் அங்கு இருள் என்பதோ, பாவம் என்பதோ இருக்கவே இருக்காது.

இருளில் நடப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

கடவுள் ஒளியாக இருக்கிறார் என்று குறிப்பிடும் யோவான், நாமும் ஒளியாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். யோவான் சொல்வதுபோன்று நாம் ஒளியாக இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. மனிதர்களாகிய நாம் நம்முடைய சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றால் உலகிற்கு ஒளியாக இருக்க முடியவில்லை இப்படி ஒளியாக இல்லாமல், இருளாக இருக்கின்றபோது நாம் உண்மையுள்ளவர்களாக இல்லாமல், பொய்யர்களாக இருக்கின்றோம். இதை யோவான் தன்னுடைய திருமுகத்தில் மிகவும் அழகுபட எடுத்துக்கூறுகிறார். ஆம் எப்பொழுதெல்லாம் நாம் இருளில் நடக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் பொய்யர்களாக, இருளில் நடப்பவர்களாக இருக்கின்றோம். இதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒளியில் நடப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

கடவுள் ஒளியாக இருக்கிறார்; நாமும் ஒளியாக இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டும் யோவான், ஒளியில் நடக்கிற பொழுது நாம் கடவுளோடு ஒருவர் மற்றவரோடு நட்போடு இருக்கிறோம் என்று சுட்டிக்காட்டுகிறார். நாம் நம்முடைய சிந்தனையால், சொல்லால், செயலால் கடவுளுடைய வழியில் அதாவது ஒளியின் வழியே நடந்தோம் என்றால் நாம் உலகிற்கு ஒளியாக இருக்க முடியும். நாம் நம்முடைய வாழ்வால், வார்த்தையால் உலகிற்கு ஒளியாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

“உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத்தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5:16) என்பார் இயேசு. ஆகையால், ஒளியான இயேசுவின் வழியில் ஒளியாக விளங்கி, அவரோடு நட்புறவு கொண்டவர்களாய் விண்ணகத்தந்தைக்குப் பெருமை சேர்ப்போம்.

சிந்தனை

‘நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’ (மத் 5:14) என்பார் இயேசு. எனவே நாம் இயேசுவை போன்று ஒளியாக இருப்போம்; ஒளியின் வழியில் நடந்து, உண்மையுள்ளவர்களாய், ஆண்டவரோடு நட்புறவு கொள்வோம். நம்மிடம் இருக்கும் இருளின் ஆட்சிக்குரிய செயல்களை விட்டொழிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.