கஜகஸ்தானில் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு செபம்
கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டியில், டிசம்பர் 27, இவ்வெள்ளியன்று இடம்பெற்ற விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும், காயமுற்றோருடன் தன் ஒருமைப்பாட்டுணர்வையும், அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், கஜகஸ்தான் நாட்டிற்கு அனுப்பிய அனுதாப தந்திச் செய்தியில், இவ்விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நித்தியமாய் இளைப்பாற திருத்தந்தை செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
காயமுற்றோர் விரைவில் குணமடையவும், கஜகஸ்தான் நாட்டினர் எல்லார் மீதும், குறிப்பாக, மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர் மீதும் எல்லாம்வல்ல இறைவனின் வல்லமையும், அமைதியும் பொழியப்படவும் திருத்தந்தை செபிப்பதாகவும், அச்செய்தி கூறுகிறது.
இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 7.22 மணிக்கு, Bek விமான நிறுவனத்திற்குச் சொந்தமான Fokker 100 என்ற ஜெட் விமானம், 98 பேருடன் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அருகில் இருந்த இரண்டு அடுக்கு மாடி கட்டடம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஆறு குழந்தைகள் உட்பட, குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும், 66 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் கடுமையான பனிமூட்டம் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன
Comments are closed.