டிசம்பர் 19 : நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.

அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார்.

மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.

அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.

வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” என்றார்.

செக்கரியா வானதூதரிடம், “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” என்றார்.

அதற்கு வானதூதர் அவரிடம், “நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது” என்றார்.

மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.

தற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். “மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
லூக்கா 1: 5-25

“உமது மன்றாட்டு கேட்கப்பட்டது”

நிகழ்வு

இலண்டனில் உள்ள புனித பவுல் பெருங்கோயிலுக்குச் (St.Paul’s Cathedral) செல்பவர்கள் தவறாமல், அதற்கு அருகில் இருக்கின்ற கலைக் காட்சிக்கூடத்திற்குச் செல்வதுண்டு. இந்தக் காட்சிக் கலைக்கூடத்தின் சிறப்பு என்னவென்றால், இதனுடைய ஒரு பக்கத்தின் ஓரத்தில் மெல்லப் பேசினாலும்கூட மறுபக்கத்தில் இருப்பவருக்கு மிகத் தெளிவாகக் கேட்கும்.

இப்படித்தான் ஒருமுறை இந்தக் கலைக் காட்சிக்கூடத்தின் ஒருமுனையிலிருந்து ஒரு காலணி தைக்கும் தொழிலாளி தன்னுடைய காதலியிடம், “காலணிகளைத் தைத்துத் தருவதற்கு கைவசம் தோல்கள் இல்லை. அவற்றை வாங்குவதற்கான பணமும் என்னிடம் இல்லை. இதனால் என்னுடைய வியாபாரமே நொடிந்துபோய்விட்டது… எனக்கென்னவோ பொருளாதாரப் பற்றாக்குறைவால் நம் இருவருக்குமிடையே நடக்கவிருக்கும் திருமணம் நடைபெறாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கின்றது” என்று கண்ணீர் மல்கப் பேசினான். அவன் பேசியது மறுமுனையில் இருந்த ஒரு செல்வந்தருக்கு மிகத் தெளிவாகக் கேட்டது. அது அந்த செல்வந்தரின் உள்ளத்தில் காலணி தைக்கும் தொழிலாளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

இதற்குப் பின்பு செல்வந்தவர், காலணி தைக்கும் தொழிலாளி எங்கு வசிக்கின்றான் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவனைப் பின்தொடர்ந்து சென்றார். அவன் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டதும், ஒருநாள் இரவு அவனுக்குத் தெரியாமல், அவனுடைய வீட்டுக்கு முன்னால் மோதுமான தோல்களை வைத்துவிட்டுச் சென்றார் அந்த செல்வந்தர். மறுநாள் காலணி தைக்கும் தொழிலாளி கதவைத் திறந்து பார்த்தபோது, காலணிகள் செய்வதற்குப் போதுமான அளவு தோல்கள் இருப்பது கண்டு, ‘கடவுள்தான் நம்முடைய அழுகுரலைக் கேட்டு போதுமான அளவு தோல்களை இங்கே வைத்திருக்கின்றார்’ என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

இதற்குப் பின்பு அவன் அந்த தோல்களைக் கொண்டு காலணிகளைத் செய்து, விற்று, பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேறினான்; தன்னுடைய ஆசைக் காதலியையும் திருமணம் செய்துகொண்டான். இது நடந்து சில நாள்கள் கழித்துதான், தனக்கு உதவிய அந்த செல்வந்தர் வேறு யாருமல்ல, இங்கிலாந்து நாட்டின் பிரதம அமைச்சரான டபிள்யூ. இ. கிளாட்ஸ்டோன் என்ற உண்மை தெரியவந்தது. இந்த உண்மை தெரிந்ததும், அந்தக் காலணி தைக்கும் தொழிலாளி இன்னும் மகிழ்ச்சி அடைந்தான்.

ஆம், கடவுள் தன் பிள்ளைகளின் மன்றாட்டுகளைப் புறந்தள்ளிவிடுவதில்லை. அவற்றுக்குச் செவிசாய்க்கின்றார் என்ற உண்மையை இந்த நிகழ்வுவானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் ஆண்டவர் தம் அடியாரின் மன்றாட்டைக் கேட்கின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

செக்கரியா – எலிசபெத் தம்பதியரின் மன்றாட்டைக் கேட்ட இறைவன்

நற்செய்தியில், செக்கரியா தன்னுடைய பிரிவின் முறை வந்தபோது, ஆண்டவரின் திருக்கோயிலுக்குள் சென்று, தூபம் காட்டுகின்றார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் அவருக்கு முன்பாகத் தோன்றி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது …..” என்கின்றார். முதலில் இந்த செக்கரியாவும் அவருடைய துணைவியாரான எலிசபெத்தும் எப்படிப் பட்டவர்கள் எனத் தெரிந்துகொள்வது நல்லது.

லூக்கா நற்செய்தியாளர் இவர்கள் இருவரையும் பற்றிக் குறிப்பிடும்போது, நேர்மையாளர்களாகவும் கடவுளின் அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்ப குற்றமற்றவர்களாய் நடந்து வந்தவர்களாகவும் குறிப்பிடுகின்றார். மேலும் ஆண்டவரின் தூதர் செக்கரியாவிடம் பேசுகின்ற சொற்களை வைத்துப் பார்க்கின்றபோது, செக்கரியாவும் எலிசபெத்தும் தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டும் என்று தொடர்ந்து, இடைவிடாது மன்றாடி வந்திருக்கவேண்டும் என்பது நிரூபணமாகின்றது. அவர்கள் தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டும் என்று மன்றாடி வந்த சமயத்தில்தான் ஆண்டவரின் தூதர் செக்காரியாவிற்குத் தோன்றி, உமது மன்றாட்டு கேட்கப்பட்டது என்று கூறுகின்றார். இதற்கு செக்கரியா எப்படி எதிர்வினை ஆற்றினார் என்பதைக் குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரின் தூதருடைய வார்த்தைகளை நம்பாத செக்கரியா

ஆண்டவரின் தூதர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, செக்கரியா மகிழ்ந்திருக்க வேண்டும். காரணம், இத்தனை ஆண்டுகளும் எதற்காக அவருடைய மனைவியும் அவரும் மன்றாடி வந்தார்களோ, அந்த மன்றாட்டு இறைவனால் கேட்கப்பட்டு விட்டது; ஆனால், அவர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல், “இது நடைபெறும் என எனக்குக் எப்படித் தெரியும்…?” என்று தன்னுடைய ஐயப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, மீட்புத் திட்டத்தில் யாரெல்லாம் முக்கிய இடம் வகித்தார்களோ அவர்களுடைய பிறப்பெல்லாம் ஆண்டவருடைய அருளால் அதிசயமாக நடந்திருக்கும் என்பதுதான். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டும் சிம்சோன். இவர் இவருடைய பெற்றோர் வயது முதிர்ந்தவர்களாக இருந்தபோதுதான் பிறந்தார். அந்த அடிப்படையில் மீட்புத் திட்டத்தில் முக்கிய இடம் வகிக்கப்போகும் யோவானின் பிறப்பும் ஆண்டவரின் அருளால் அதிசயமாகத்தான் இருக்கும் என்பதை செக்கரியா நம்பவில்லை. அதனாலேயே யோவான் பிறக்கின்ற வரைக்கும் அவர் பேச்சற்றவராக இருந்தார்.

செக்கரியா, ஆண்டவருடைய தூதர் சொன்னதில் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் நாம் ஆண்டவரில் தளரா நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? அல்லது ஒரு சிறு துன்பம் வந்ததும், கடலில் நடந்து செல்ல முயன்ற பேதுரு எப்படி கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பைக் கண்டு, நம்பிக்கையை இழந்து, மூழ்கத் தொடங்கினாரே, அதுபோன்று நாம் இறைவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் தளர்ந்துபோயிருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

‘அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்’ (மாற் 5: 36) என்று இயேசு தொழுகைக்கூடத் தலைவராம் யாயிரைப் பார்த்துச் சொல்வார். ஆகையால், நாம் இறைவனிடம் தளரா நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.