திருவருகைக் கால வளையம், மெழுகுவர்த்திகள் (உணர்ந்து செயற்படுவோம்)

ஜரோப்பிய நாடுகளில் வாழும் சுதேச மக்கள் தங்கள் சமய, சமூக வாழ்வில், அந்நாடுகளின் கால நிலைக் கேற்ப சில வழங்களைக் கொண்டு செயற்படுகின்றனர். அவற்றுள் கத்தோலிக்க மக்கள் திருவருகைக் காலத்தில் தமது வீடுகளில் என்றும் பசுமையாக இருக்கும் இலைகளினால் வடிவமைக்கப்பட்ட வட்ட வடிவமான ஒரு அமைப்பிலே நான்கு மெழுகுதிரிகளை வைத்து திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு திரியாகப் பற்றவைப்பதுண்டு.
குறிப்பாக ஆலயங்களில் ஆன்மிகச் செழுமை நிறைந்த கருத்தோடு இது ஏற்றப்படுகின்றது. இருந்தும் நம்மில் பலர் இதன் உண்மைத் தன்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாது செயற்படுவதுண்டு.
எனவே அதற்கான சில தெளிவுகளை முன்வைக்க வரும்புகின்றோம்.

பசுமை இலைகளினால் ஆக்கப்பட்ட திருவருகைக் கால வளையம் அழகானது. பல் வேறு பசுமையான இலைகளினால் அமைக்கப்பட்ட இவ் வளையம் வாழ்வின் தொடர்ச்சியையும், அதன் வளமையையும் குறித்து நிற்கின்றது. குறிப்பாக இவ் வளையம் உருவாக்கப் பயன்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கி நிற்கின்றன.
இந்த வளையம் ஒரு வெற்றிச்சின்னம். அதாவது துன்பத்தின் மீதும்,துன்புறுத்தலின் மீதும் வெற்றி கொள்வதைக் குறிக்கின்றது. அங்குள்ள ஊசியிலைகள், கரும்பச்சை நிற இலைகள், மரப்பட்டை என்பன அழியாமையையும் – என்றும் உதிராமல் இருக்கும் மரத்தின் இலைகள் பலத்தையும், குணமளித்தலையும் குறிப்பதோடு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து முடிவில்லாக் கடவுளின் பிரசன்னத்தையும், ஆன்மாவின் அழியாமையையும், கிறிஸ்துவிடம் முடிவில்லா வாழ்வைக் கண்டு கொள்ள முடியும் என்பதனையும், வாழ்வையும், உயிர்த்தெழுதலையும் குறித்து நிற்கின்றன.

நான்கு மெழுகுதிரிகளும் திருவருகைக் காலத்தின் நான்கு ஞாயிறு வாரத்தையும் குறித்து நிற்கின்றன. இவற்றுள் மூன்று ஊதா நிறமுடையதாகவும், இன்னொன்று மெல்லிய சிவப்பு அல்லது றோஸ் நிறமுடையதாகவும் இருக்கின்றது.

முன்று மெழுகுதிரிகள் நம்பிக்கை, விசுவாசம், அமைதியை வெளிப்படுத்தி நிற்கின்றது. றோஸ் மெழுகுதிரி திருவருகைக்கால மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை பற்றவைக்கப் படுகின்றது. இது பேருவகை, அல்லது பெருமகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கின்றது.
அதாவது கிறிஸ்துவின் வருகை மிக அருகில் வந்து விட்டது என்பதின் அடையாளமே அது.

நடுவில் உள்ள வெள்ளை மெழுகுதிரி கிறிஸ்துவே உலகின் ஒளி என்பதைப் பிரசன்னப்படுத்தி நிற்கின்றது.

Comments are closed.