டிசம்பர் 7 : சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்.

மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு அவர்கள் மேல் பரிவு கொண்டார்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35 – 10: 1, 6-8

அக்காலத்தில் இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

இயேசு பன்னிருவருக்கும் அறிவுரையாகக் கூறியது: “வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

“அவர் அவர்கள்மேல் பரிவுகொண்டார்”

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த சமயம், பெரியவர் ஒருவர் அவரைப் பார்க்க ஒரு கடிதத்தோடு வந்தார். வந்தவர் கடிதத்தை ஆபிரகாம் லிங்கனிடம் கொடுத்துவிட்டு அவரையே பார்த்தார். ஆபிரகாம் லிங்கன் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தபோது, அதில், “இராணுவத்தில் பணிபுரிந்து வரும் என் மகன் தேசத் துரோகக் குற்றத்தைச் செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிகின்றான். நீங்கள்தான் பெரிய மனது வைத்து அவனுடைய தூக்குத் தண்டனையை இரத்துசெய்து, அவனுடைய தண்டனைக் காலத்தைக் குறைக்கவேண்டும்” என்று எழுதி இருந்தது. கடிதத்தை வாசித்துவிட்டு ஆபிரகாம் லிங்கன் அந்தப் பெரியவருடைய முகத்தைப் பார்த்தார். அவருடைய முகமோ வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு வேதனையோடு இருந்தது.

இதற்கிடையில் ஆபிரகாம் லிங்கனின் செயலர் ஒரு தந்தியை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்தத் தந்தியானது அமெரிக்க இராணுவ அதிகாரி பட்லரிடமிருந்து வந்திருந்தது. அதில் அவர், ‘அதிபர் அவர்களே! தேசத் துரோகக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஜோப் ஸ்மித்தின் வழக்கில் எந்தவிதத்திலும் நீங்கள் தலையிடாதீர்கள். அவனை என்றைக்குத் தூக்கலிடவேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்று எழுதி இருந்தது. இதை ஆபிரகாம் லிங்கன் அந்தப் பெரியவரிடம் படித்துக் காட்டியபோது, அவருடைய முகம் இன்னும் வருத்தத்திற்கு உள்ளானது. பெரியவர், ஆபிரகாம் லிங்கன் என்ன செய்யப்போகிறாரோ என்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆபிரகாம் லிங்கன் ஒரு காகிதத்தில் கீழ்க்கண்டவாறு எழுதிவிட்டு, அதை அந்தப் பெரியவரிடம் வாசிக்கக் கொடுத்தார். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “மதிப்பிற்குரிய பட்லர் அவர்களே! நீங்கள் அனுப்பிய தந்தியைப் பெற்றுக்கொண்டேன்… ஜோப் ஸ்மித்தை எப்பொழுது தூக்கிலிடவேண்டும் என்று நான் உத்தரவிடுகின்றேனோ… அப்பொழுது நீங்கள் தூக்கிலிட்டால் போதும்.”

இதைப் படித்துப் பார்த்த பெரியவர் ஆபிரகாம் லிங்கனிடம் சற்றுக் குழப்பமான மனநிலையோடு, “‘ ஜோப் ஸ்மித்தை எப்பொழுது தூக்கலிடவேண்டும் என்று நான் உத்தரவிடுகின்றேனோ… அப்பொழுது நீங்கள் தூக்கிலிட்டால் போதும்’ என்று எழுதியிருக்கின்றீர்கள்… ஒருவேளை நீங்கள் அவரிடம் அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த மாதம் தூக்கிலிடுங்கள் என்று உத்தரவிட்டால், என் மகன் ஜோப் ஸ்மித்தின் வாழ்க்கை அவ்வளவுதானா…? அவன் எனக்கு ஒரே மகன்” என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

அந்தப் பெரியவரின் பேச்சில் இருந்த தாங்க முடியாத துயரத்தை உணர்ந்தவராய் ஆபிரகாம் லிங்கன் அவரிடம், “ஐயா பெரியவரே! இராணுவ அதிகாரி பட்லருக்கு நான் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில், ‘எப்பொழுது என்னிடமிருந்து உத்தரவு வருகின்றதோ, அப்பொழுது நீங்கள் அவனைத் தூக்கிலிடுங்கள் என்றுதானே எழுதி இருக்கின்றேன்… அவனைத் தூக்கிலிடுமாறு ஒருபோதும் நான் உத்தரவிடமாட்டேன்… அவன் திருவிவிலியத்தில் வருகின்ற மெத்துசெலாவைப் (தொநூ 5:27) போன்று நீண்ட நாள்கள் உயிரோடு இருப்பான்… போதுமா” என்றார். ஆபிரகாம் லிங்கனிடமிருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்தப் பெரியவர் நன்றிப் பெருக்கோடு தன் இரு கைகளையும் கூப்பி அவரை வணங்கினார்.

இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவரின் துயரத்தைத் தன்னுடைய துயரமாகப் பார்த்து ஆபிரகாம் லிங்கன் அவர்மீது பரிவுகொண்டார். இன்றைய நற்செய்தியிலும் ஆண்டவர் இயேசு மக்கள்மீது பரிவு கொண்டதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆயனில்லா ஆடுகள்போல் இருந்த மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு

ஆண்டவர் இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்து, அங்குள்ள மக்களுக்கு கற்பித்தும் விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவித்தும் நோயாளிகளைக் குணப்படுத்தியும் வந்தார். அப்படியிருக்கும்பொழுது, மக்களெல்லாம் ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருப்பதைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார. ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருப்பது மிகவும் கொடிய நிலை (எசே 34: 5-6; எண் 22: 17; 1 அர 22:17). அப்படியிருக்கும்போது தீயவர்களால் மிக எளிதாகத் தாக்கப்படலாம். இதனை நன்கு உணர்ந்த இயேசு, அந்நிலையைப் போக்குவதற்கு ஆவன செய்கின்றார்.

மக்கள் ஆயனில்லாத ஆடுகளைப் போன்று இருப்பதைப் பார்த்து அவர்கள்மீது பரிவுகொண்ட இயேசு, அவர்களுக்கு ஆயனாகவும் தலைவனாகவும் பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்துகின்றார். இதில் நாம் கவனிக்கவேண்டியது இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்ததுதான். பன்னிரண்டு என்றால் முழுமை. நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் நல்ல ஆயன் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இவ்வாறு இயேசு மக்களுடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகப் பார்த்து, அவர்களுடைய துன்பத்தைப் போக்க, அவர்களுக்கு நடுவில் பணிபுரிய நல்லாயன்களை ஏற்படுத்துகின்றார்.

Comments are closed.