ஈராக்கில், குறைந்த அளவில், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்

ஈராக்கின் கல்தேய வழிபாட்டு முறை திருஅவையில், இவ்வாண்டு கிறிஸ்து பிறப்பு காலத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம், மற்றும் பொதுவான விழாக்கள் இடம்பெறாது என்று, இந்த வழிபாட்டு முறையின் முதுபெரும் தந்தை கர்தினால் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் அறிவித்துள்ளார்.

ஈராக் நாட்டில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்தோரின் நினைவாக, இவ்வாண்டு, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், மிகக் குறைந்த அளவே இடம்பெறும் என்று அறிவித்துள்ள இத்திருஅவை, இந்த கொண்டாட்டங்களுக்கு செலவிடப்படும் தொகையை, அங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் அனாதை இல்லங்களுக்கு வழங்குமாறு மக்களிடம் விண்ணப்பித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்மஸ் விழாவையொட்டி, கல்தேய வழிபாட்டு முறை திருஅவை, அரசு அதிகாரிகளுக்கு வழங்கும் விருந்து, இவ்வாண்டு நடைபெறாது என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் அறிவித்துள்ளார்.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், அநீதிகளையும் ஒழிக்க, ஈராக் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களை, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடம்பெற்ற ‘விடுதலை இறையியல்’ போராட்டங்களுடன் ஒப்பிட்டு, கர்தினால் சாக்கோ அவர்கள், தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

தங்கள் நாட்டின் உண்மையான விடுதலைக்காகப் போராடிவரும் இளம் ஆண்கள், மற்றும், பெண்கள், ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இவ்வாண்டின் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்

Comments are closed.