முதல் கிறிஸ்மஸ் குடில் உருவான இடத்திற்கு, திருத்தந்தை

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மறைக்கல்வி உரையை வழங்கிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ், முதல் கிறிஸ்மஸ் குடிலை உருவாக்கிய Greccioவுக்கு, டிசம்பர் 1, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, செல்லவிருப்பதாகக் கூறினார்.

கிரெச்சோவில், புனித பிரான்சிஸ், முதல் கிறிஸ்மஸ் குடிலை உருவாக்கிய இடத்திற்கு, செபிக்கச் செல்கிறேன். அத்துடன், நம்பிக்கையுள்ள மக்கள் அனைவரும், கிறிஸ்மஸ் குடிலின் பொருளைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் ஒரு மடலை அனுப்பவுள்ளேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ், புனித பூமியில் குறுகிய காலம் வாழ்ந்தபின், இத்தாலிக்கு திரும்பியபோது, கிறிஸ்து பிறந்த காட்சியை மக்களுக்கு நினைவுறுத்தும் வகையில், 1223ம் ஆண்டு, கிரெச்சோவில், முதல் கிறிஸ்மஸ் குடிலை அமைத்தார்.

ஒவ்வொர் ஆண்டும், திருவருகை காலம் துவங்கி, கிறிஸ்மஸ் காலம் முழுவதும், கிரெச்சோ நகரம், திருப்பயணிகளால் நிறைந்துவிடும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு வருகை தருவது, கூடுதல் ஆசீராக இருக்கும் என்றும், கிரெச்சோ நகரின் கிறிஸ்து பிறப்பு திருத்தலத்தின் பொறுப்பாளர், அருள்பணி Luciano De Giusti அவர்கள் கூறினார்.

2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி கொண்டாடப்பட்ட தருணத்தில், அவ்வாண்டு, சனவரி 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரெச்சோவுக்கு தனிப்பட்ட ஒரு பயணம் மேற்கொண்டு, முதல் கிறிஸ்மஸ் குடிலுக்கு முன் செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.