வாசக மறையுரை (நவம்பர் 25)

பொதுக் காலத்தின் முப்பத்து நான்காம் வாரம்
வெள்ளிக்கிழமை
I திருவெளிப்பாடு 20: 1-4, 11-21: 2
II லூக்கா 21: 29-33
வாழ்வின் நூல்
கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வோர் பெறும் கைம்மாறு:
சமூக சேவகர், இராணுவ வீரர், அரசியல்வாதி, சாதாரண மனிதர் என நான்கு பேர் ஒருநாள் விண்ணகத்திற்குச் சென்றனர். விண்ணக வாசலில் பேதுரு நின்றுகொண்டிருந்தார். அவரிடம் முதலில் பேசிய சமூக சேவகர், “நான் ஏழைகளுக்கு உதவி இருக்கின்றேன். தான தருமங்கள் நிறையச் செய்திருக்கின்றேன். அதனால் நான் விண்ணகத்திற்குள் போகலாமா?” என்றார். உடனே பேதுரு வாழ்வின் நூலைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “உன்னுடைய பெயர் இந்நூலில் இடம்பெற வில்லை. அதனால் உனக்கு விண்ணகத்தில் இடமில்லை” என்றார்.
அவரைத் தொடர்ந்து இராணுவ வீரர் பேதுருவிடம், “நான் எதிரிகளிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றியிருக்கின்றேன். என்னால் இயன்ற அளவு, நீதியை நிலைநாட்டி இருக்கின்றேன். அதனால் நான் விண்ணகத்திற்குள் போகலாமா?” என்றார். “கொஞ்சம் பொறும்” என்று சொல்லிவிட்டு, வாழ்வின் நூலைப் பார்த்த பேதுரு, “உம்முடைய பெயரும் இந்நூலில் இடம்பெறாததால், உமக்கும் விண்ணகத்தில் இடமில்லை” என்றார்.
மூன்றாவதாக அரசியல்வாதி பேதுருவிடம், “என்னுடைய வாழ்வில் நான் ஏராளமான நன்மைகளைச் செய்திருக்கின்றேனே ஒழிய, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. அதனால் நான் விண்ணகத்திற்குள் போகலாமா?” என்றார். பேதுரு வாழ்வின் நூலைப் பார்த்தார் அவருடைய பெயர் அதில் இடம்பெறாததால், “உமக்கு விண்ணகத்தில் இடமில்லை” என்று அனுப்பிவிட்டார்.
நான்காவதாக, சாதாரண மனிதர் வந்தார். அவர் பேதுருவிடம், தன்னுடைய பெயரைச் சொன்னதும், அவரை உள்ளே போக அனுமதித்தார் பேதுரு. இதைப் பார்த்துவிட்டு மற்ற மூவரும், “இவர் யார்? விண்ணகம் செல்லும் அளவுக்கு இவர் அப்படி என்ன செய்துவிட்டார்?” என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு அவர்களிடம், “இவர் பணம் படைத்தவரோ, பதவியில் இருந்தவரோ, அதிகாரம் படைத்தவரோ அல்லர். கடவுளுக்கு ஊழியம் செய்த ஒரு சாதாரண மனிதர். நீங்களெல்லாம் உங்களுடைய பெயர் விளங்க வேண்டும் என்று யாவற்றையும் செய்தபோது, இவரோ கடவுளின் பெயர் விளங்க வேண்டும் என்று யாவற்றையும் செய்தார். அதனால்தான், இவருக்கு விண்ணகத்தில் இடம்” என்றார்.
ஆம், நாம் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுளின் மாட்சிக்காகச் செய்யும்போது, கடவுள் நமக்குத் தக்க கைம்மாறு தருவார் என்பதை இந்தக் கதை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கடந்த இரண்டு வாரங்களாக நாம், திருவெளிப்பாடு நூலிலிருந்து முதல் வாசகத்தை வாசிக்கக் கேட்கின்றோம். இன்றைய முதல் வாசகமும் அதே நூலிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய முதல் வாசகத்தில் வாழ்வோரின் நூலைப் பற்றி வாசிக்கின்றோம். இந்நூலில் இறந்தோரின் செயல்கள் எழுதப்பட்டிருப்பதாகவும், அதற்கேற்பத் தீர்ப்பு வழங்கப்படும் என்ற குறிப்பும் இடம்பெறுகின்றது.
இக்குறிப்புக்கு முந்தைய பகுதியில், “இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகத் தலை கொடுத்தவர்களின் ஆன்மாக்களையும் கண்டேன்” என்றொரு குறிப்பும் இருக்கின்றது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஒருவர் ஆண்டவருக்குச் சான்று பகரும்போது, அவரது பெயர் வாழ்வின் நூலில் இடம்பெறும். அவர் ஆண்டவரிடமிருந்து சிறந்த கைம்மாறு பெறுவார் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
நற்செய்தியில் இயேசு காலத்தின் அறிகுறிகளை அறிந்து, கடவுளுகேற்ற வாழவேண்டும் என்று கூறுகின்றார். ஆதலால், நாம் ஒவ்வொருவரும் காலத்தின் அறிகுறிகளைக் கணக்கிட்டுக் கடவுளுக்கு ஊழியம் புரிந்தால், கடவுள் தரும் உரிமைப் பேற்றினைப் பரிசாகப் பெறுவோம் என்பது உறுதி.
சிந்தனைக்கு:
நாம் செய்யும் நற்செயல்கள் கடவுளோடு நாம் கொண்டிருக்கும் நல்லுறவின் வெளிப்பாடே ஆகும்.
கடவுளோடு ஒன்றித்திருப்பவர்களால் மட்டுமே மிகுந்த கனிதர முடியும்.
கடவுள் தன் அடியார்களைக் கண்ணின் மனியாய்க் காத்திடுவார்.
இறைவாக்கு:
‘ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்’ (ஆமோ 5: 4) என்கிறது இறைவாக்கினர் ஆமோஸ் நூல். எனவே, நாம் ஆண்டவரைத் தேடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.