வாசக மறையுரை (ஜூலை 15)

பொதுக் காலத்தின் பதினைந்தாம் வாரம்
வெள்ளிக்கிழமை
I எசாயா 38: 1-6, 21-27, 7-8
II மத்தேயு 12: 1-8
“இரக்கம் காட்டுவோம்”
இரக்கம் காட்டவே அழைத்திருக்கின்றார்:
நாட்டிலிருந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லாரும் மிகவும் ஆடம்பரமாக உடை உடுத்தியிருந்தபோது, அன்னை தெரசா மட்டும் சாதாரண உடையில் இருந்தார்.
அவரை மிகுந்த வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த பிரமுகர் ஒருவர் அவரிடம், “எவ்வளவோ பணிகளைச் செய்கிறீர்கள். அந்தப் பணிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றால், உங்களுக்கு ஏமாற்றமாக இருக்குமா?” என்றார். அதற்கு அன்னை தெரசா அவரிடம், “நிச்சயமாக எனக்கு ஏமாற்றமாக இராது” என்று சொல்லிவிட்டுத் தீர்க்கமான குரலில் இவ்வாறு சொல்லி முடித்தார்: “கடவுள் என்னை வெற்றி பெறுவதற்காக அல்ல, இரக்கம் காட்டுவதற்கே அழைத்திருக்கின்றார்.”
ஆம், இந்த பூமியில் தேவதையாய் வலம்வந்த அன்னை தெரசா, மக்களுக்கு இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் தன்னை அழைத்திருக்கின்றார் என்று உணர்ந்து செயல்பட்டது நமது கவனைத்திற்குரியது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுளிடமிருந்து பெற்ற இரக்கத்தை மற்றவருக்கும் காட்ட அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்த எசேக்கியா மன்னரிடம் வரும் இறைவாக்கினர் எசாயா, “நீர் சாகப் போகிறீர்; பிழைக்க மாட்டீர்” என்கிறார். இதைக் கேட்டு எசேக்கியா மன்னர் ஆண்டவரிடம் தன்னை நினைவுகூர்ந்தருளுமாறு கண்ணீர்விட்டு அழுகின்றார். கடவுளும் அவர்மீது இரக்கம் கொண்டு, பதினைந்து ஆண்டுகளை அவருக்குக் கூட்டித் தருகின்றார். இது பற்றி இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
கடவுள் சாகும் தறுவாயில் இருந்த எசேக்கியா மன்னரிடம் இரக்கம் காட்டியதை நம் ஒவ்வொருவரும் காட்டியதாகப் பொருள் எடுத்துக் கொள்ளலாம். இப்படிக் கடவுள் நம்மீது இரக்கம் காட்டும்போது, அந்த இரக்கத்தை மற்றவரிடம் காட்டுவதுதான் முறை. ஆனால், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர், இயேசுவின் சீடர் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து உண்டார்கள் என்று அவர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.
இயேசுவின் சீடர்கள் பசியில்தான் இப்படிச் செய்தார்கள் என்று ‘பெரிய மனது’ வைத்துப் பரிசேயர் அவர்களை அப்படியே விட்டிருக்கலாம். ஏனெனில், கைகளால் கதிர்களைக் கொய்து உண்பது ஒன்றும் தவறில்லை; கதிர் அரிவாளை கதிர்கள்மீது வைப்பதுதான் தவறு (இச 23:25), இப்படி இருக்கையில், பரிசேயர் தன்னுடைய சீடர்மீது குற்றம் சுமத்தியதைக் கண்டு, இயேசு அவர்களுக்குத் தாவீதின் வாழ்வில் நடந்த நிகழ்வைச் (1சாமு 21: 4-6) சுட்டிக் காட்டி, மனிதருக்காகத்தான் ஓய்வுநாளே அன்றி, ஓய்வுநாளுக்காக மனிதர் இல்லை என்கிறார். ஓய்வுநாள்களில் குருக்கள் கோயிலில் வேலை செய்வது அனுமதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி விட்டு, பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன் என்று ஆண்டவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிறார் அவர்.
பரிசேயர் கடவுளை முழுமையாக அறிந்திருந்தார்கள் என்றால், கடவுள் மக்கள்மீது இரக்கம் காட்டியது போன்று, இயேசுவின் சீடர்கள்மீது அவர்கள் இரக்கம் காட்டியிருக்கலாம். ஆனால், அவர்கள் இயேசுவின் சீடர்மீது இரக்கம் காட்டவில்லை. எனவே, நாம் பரிசேயரைப் போன்று இல்லமால், இயேசுவைப் போன்று மற்றவர்மீது இரக்கம் காட்டுபவர்களாய் வாழ்வோம்.
சிந்தனைக்கு:
ஆண்டவரைப் பற்றிய அறிவே வாழ்வுக்கு வழி
சட்டம் வலியவர்களிடம் தன் வேலையைக் காட்டாது; அது வறியவர்களிடமே காட்டும்.
கடவுளின் இன்னொரு பெயர் இரக்கம். அந்த இரக்கத்தை நாம் எல்லாருக்கும் காட்டுவோம்.

Comments are closed.