வாசக மறையுரை (மே 12)

பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் வியாழக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 13: 13-25
II யோவான் 13: 16-20
“இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால்…”
காலணிகளைக் கழுவியவர்:
மலையடிவாரத்தில் இருந்த தியான இல்லம் அது. அங்கே தியானம் மேற்கொள்வதற்காகப் பலரும் வருவதுண்டு. காரணம் அந்தத் தியான இல்லத்திற்குப் பொறுப்பாளராக இருந்த அருள்பணியாளர் தியான உரைகளை

அருமையாக

வழங்குவார் என்பதால்.

ஒருநாள் இரவு வேளையில், அந்தத் தியான இல்லத்தில் ஒரு வார காலம் தியானம் மேற்கொள்வதற்காக நண்பர்கள் இருவர் வந்தனர். அவர்கள் வந்த நேரம் நல்ல மழை பெய்து, வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தன. அதனால் அவர்கள் தாங்கள் அணிந்து வந்திருந்த விலையுயர்ந்த காலணிகளைத் தாங்கள் தங்க இருந்த அறைக்கு வெளியே கழற்றி வைத்துவிட்டுத் தூங்கச் சென்றனர்.
மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் வெளியே வந்து பார்த்தபோது அருள்பணியாளர் அவர்கள் இருவருடைய காலணிகளையும் கழுவிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து அதிர்ந்துபோன இருவரும், “நீங்கள் ஏன் எங்கள் காலணிகளை கழுவுகிறீர்கள்? நாங்களே கழுவிக் கொள்ள மாட்டோமா?” என்று சொல்லி அவரைத் தடுக்கப் பார்த்தபோது, அவர், “உங்களுடைய காலடிகளை கழுவ முடியாது. ஏனெனில் அவை நன்றாக இருக்கின்றன. அதனால்தான் நான் உங்கள் காலணிகளைக் கழுவுகின்றேன்” என்று மிகுந்த தாழ்ச்சியோடு அவற்றை கழுவி முடித்தார்.
ஆம், தான் மிகப்பெரிய போதகர் என்றெல்லாம் பாராது மிகுந்த தாழ்ச்சியோடு தன்னிடம் வந்தவர்களுடைய காலணிகளைக் கழுவிய விதத்தில் இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளர் தாழ்ச்சிக்கு மிகப்பெரிய எடுத்துக் காட்டாக இருக்கின்றார். இன்றைய இறைவார்த்தை நாம் இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒருசிலர் உண்டு. இவர்கள் சாதாரண நிலையில் இருப்பார்கள்; ஆனால், பெரியவர்களைப் போன்று தங்களைக் காட்டிக் கொள்வார்கள். நற்செய்தியில் இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவிவிட்டு, “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல…. இதை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்” என்கிறார்.
காலடிகளைக் கழுவுவது அடிமைகள் செய்ய வேண்டிய வேலை. அதை இயேசு தம் சீடர்களுக்குச் செய்கின்றார். இதன்மூலம் அவர், சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபடாமல் தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்ற நெறியைக் கற்றுத் தருகின்றார். தொடர்ந்து அவர் அவர்களிடம் இந்த உண்மையை அறிந்து, அதன்படி நடப்பீர்கள் என்றால், நீங்கள் பேறுபெற்றவர்கள் என்கிறார்.
இயேசுவின் சீடர்கள் அவரைப் போன்று தாழ்ச்சியில் சிறந்து விளங்கவேண்டுமே ஒழிய, அவரை விடவும் தங்களைப் பெரியவர் போல் காட்டிக் கொள்ளக்கூடாது. இன்றைய முதல் வாசகத்தில் வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் என்று தாழ்ச்சியோடு வாழ்ந்த பவுல், யூதர்கள் நடுவில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகின்றார்.

Comments are closed.