வாசக மறையுரை (நவம்பர் 27)

பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம்
சனிக்கிழமை
I தானியேல் 7: 15-27
II லூக்கா 21: 34-36
உங்கள் உள்ளம் குடிவெறியினால் மந்தமடைய வேண்டாம்
குடிகாரனும் இயேசுவும்:
நன்றாகக் குடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த குடிகாரன் ஒருவன், ஒரு குளத்தில் போதகர் ஒருவர் முழுக்குத் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருபதைக் கண்டான். அவரிடம் முழுக்குத் திருமுழுக்குப் பெற பலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். முழுக்குத் திருமுழுக்கு என்றால் என்னவென்றே தெரியாத அந்தக் குடிகாரன் அவர்களோடு வரிசையில் நின்றான்.
அவனுடைய முறை வந்தது. போதகர் அவனை நீருக்குள் முக்கி எடுத்து, “இயேசுவைக் கண்டுகொண்டாயா?” என்றார். அவன் இல்லை என்றதும், மீண்டுமாக அவர் அவனை நீருக்குள் முக்கி எடுத்து, முன்புகேட்ட அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் அவன் அதே பதிலைச் சொன்னதால், மூன்றாம் முறையாக அவனை அவர் நீருக்குள் முக்கி எடுத்தார். இந்த முறை அவர் அவனை, அவனுக்கு மூச்சுமுட்டுகிற வரை முக்கி எடுத்ததால், அவன் சற்றே பதறிப்போனான். “இந்த முறையாவது நீ இயேசுவைக் கண்டுகொண்டாயா?” என்று போதகர் அவனிடம் தன் குரலை உயர்த்திக் கேட்டபோது, அவன் மிகவும் அப்பாவியாய், “இங்குதான் இயேசு விழுந்தாரா?” என்றான்.
வேடிக்கையான நிகழ்வாக இது இருந்தாலும், குடிக்கு அடிமையான ஒருவருடைய வாழ்க்கை எப்படிப் பாழாய்ப்போகிறது என்பதை உணர்த்துகின்றது. இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, குடிக்கு அடிமையாகிவிடாமல் ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு வாழ அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
மானிட மகனுடைய இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகின்ற இயேசு, அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், உங்கள் உள்ளம் குடிவெறி, களியாட்டம், இவ்வுலக வாழ்வுக்குரிய கவலை ஆகியவற்றால் மந்த மடைந்துவிடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறார்.
குடிவெறியர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள முடியாது (1 கொரி 6:10; கலா 5:21). அதனால் இயேசு, குடிவேறியினாலும், இன்ன பிறவற்றாலும் உள்ளம் மந்தமடைந்திடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறார். மேலும், மானிட மகனை எதிர்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களாய் இருக்க விழிப்பாய் இருந்து மன்றாடுங்கள் என்கிறார்.
இவ்வாறு எவர் ஒருவர் குடிவேறியினால் மந்தமடைந்துவிடாது, விழிந்திருந்து மன்றாடுகின்றாரோ, அவர் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல், உன்னதரின் புனித மக்களாய்த் திகழ்ந்து, ஆட்சியையும் அரசுரிமையையும் பெறுவார். நாம் உன்னதரின் புனித மக்களாய்த் திகழ்ந்து, இறையாட்சியைப் பெறத் தயாரா?
சிந்தனைக்கு:
 குடியினால் மூளையை அடகு வைத்தவன், எல்லாவற்றையும் அடகு வைப்பான்.
 குடி ஒருவனுடைய மூளையை மழுங்கடித்து, அவனை முன்னேற விடாமல் செய்துவிடுகின்றது.
 குடிக்கு அடிமையாய் இருப்பதைவிட, ஆண்டவருக்கு அடிமையாய் இருப்போருக்கு ஆசிகள் பல.
ஆன்றோர் வாக்கு:
‘மனிதர்களிடம் இருக்கும் மிக வலிமையான ஆயுதம் இறைவேண்டல்’ என்பார் காந்தியடிகள். ஆகையால், நமது இறைவேண்டலால் சோதனைகளை முறியடித்து, இறைவனின் அன்பு மக்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.