இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றைய முதல் வாசகம் எடுக்கப்பட்ட தோபித்து நூலில், “அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது. தருமம் சாவினின்று காப்பாற்றும்.” என கூறப்பட்டுள்ளது.
லஞ்சம் உட்பட சட்டத்திற்கு புறம்பாக ஈட்டும் அனைத்து செல்வமும் ஆண்டவரின் பார்வையில் அருவருப்புக்குரியதே என்பதை அனைவரும் உணர இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில்,
“இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
உள்ளதில் இருந்து கொடுப்பது காணிக்கையல்ல மாறாக உள்ளத்திலிருந்து கொடுப்பதே காணிக்கை என்பதை நாம் அனைவரும் உணர இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினைப் பற்றி மாநில அரசுகள் நல்ல முடிவினை எடுக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நோய்த்தொற்றுக்கு உள்ளான அனைத்து அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள், பொது நிலையினர் மற்றும் அனைத்து முன் களப்பணியாளர்கள் அனைவரும் பரிபூரண சுகம்பெற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
நோய்த்தொற்றின் தீவிரத்தால் மரணித்த அனைவருக்காகவும் பிராத்திப்போம். அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.