புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில் புதிய மன்றாட்டுகள்

புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில், சில புதிய மன்றாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளது குறித்து, உலகின் அனைத்து ஆயர் பேரவைகளின் தலைவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ள, இப்பேராயம், 1909ம் ஆண்டில், திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்ட புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில், புனித யோசேப்பு  பற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சில சிந்தனைகளும், தற்போது மன்றாட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

புனித யோசேப்பு உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டை முன்னிட்டு, அந்த மாபெரும் புனிதரின் மீது நமது அன்பை அதிகரிக்கவும், அவரது பரிந்துரையை மன்றாடவும், அவரது புண்ணியப் பண்புகளையும், இறைப்பற்று பேரார்வத்தையும் நாம் பின்பற்றவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தந்தையின் இதயத்தோடு (Patris corde) என்ற திருத்தூது மடல் வழியாக நம்மை ஊக்கப்படுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலுடன் இந்த புதிய மன்றாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன என்று, அம்மடலில் கூறப்பட்டுள்ளது. திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் பேராயத்தின் செயலர் பேராயர் X Arthur ROCHE, அப்பேராயத்தின் நேரடிப்பொதுச்செயலர், அருள்பணி Corrado MAGGIONI, S.M.M ஆகிய இருவரும் கையெழுத்திட்டு, அம்மடலை, உலகின் ஆயர் பேரவைகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

புதிய சில மன்றாட்டுகள்

Patris corde திருத்தூது மடலின் ஒளியில் இடம்பெற்றுள்ள புதிய சில மன்றாட்டுகள்:

மீட்பரின் பாதுகாவலர்; கிறிஸ்துவின் பணியாளர்; நோயுற்றோரின் திருப்பணியாளர்;

துயரங்களில் துணையாளர்; புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர்; இன்னலுற்றோரின் பாதுகாவலர்; வறியோரின் பாதுகாவலர்.

புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த மன்றாட்டுகளை, ஆயர் பேரவைகள் அந்தந்தப் பகுதிகளின் மொழிகளில் மொழி பெயர்க்கலாம், அதற்கு திருப்பீடத்தின் அனுமதி தேவையில்லை, தங்களின் நாடுகளில் புனித யோசேப்பிடம் பரிந்துரைக்கப்படும் மன்றாட்டுகளையும், ஆயர் பேரவைகள், விவேகத்தோடு தீர்மானித்து அதில் இணைக்கலாம் என்றும், அப்பேராயத்தின் மடலில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.