வாசக மறையுரை (பிப்ரவரி 26)

தவக்காலம் முதல் வாரம்
வெள்ளிக்கிழமை
I எசேக்கியேல் 18: 21-28
II மத்தேயு 5: 20-26
குற்றங்களின்று விலகினால் வாழ்வது உறுதி
திருடன் மனமாறுதல்:
பிளேடு வைத்துத் திருடுவதில் கைதேர்ந்த பிக்பாக்கெட் திருடன் ஒருவன் இருந்தான். இவன் திருந்தி நடக்க முடிவுசெய்தான். அதற்காக இவன் பலரிடம் ஆலோசனை கேட்டான். யாரும் இவனுக்குச் சரியான ஆலோசனை சொல்லாததால், இவன் தனக்குத் தெரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிமிடமே ஆலோசனை கேட்டான். அவரோ இவன் திருந்தி நடக்க முடிவுசெய்துவிட்டான் என்பதை அறிந்து மகிழ்ந்து, “உனக்குத் திருடவேண்டும் என்ற எண்ணம் வருகின்றபொழுது, உன்னுடைய ஆள்காட்டி விரலை எடுத்து, உன் நெற்றியில் வைத்துக்கொள், அது போதும்” என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லி, விடை பெற்றான்.
ஓரிரு மாதங்கள் கடந்திருக்கும். தனக்கு ஆலோசனை சொன்ன காவல்துறை அதிகாரியிடம் சென்ற இவன், “ஐயா! நான் திருந்திவிட்டேன். இப்பொழுது எனக்குத் திருடுகின்ற எண்ணமே வருவதில்லை” என்றார். இதைக்கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த காவல்துறை அதிகாரி இவனைப் பாராட்டினார். அப்பொழுது இவன் அவரிடம், “எனக்குத் திருடவேண்டும் என்ற எண்ணம் வருகின்றபொழுது, நீங்கள் ஏன் என் ஆள்காட்டி விரலையெடுத்து நெற்றியில் வைக்கச் சொன்னீர்கள்” என்றான். அதற்கு அவர், “திருடவேண்டும் என்ற எண்ணம் வருகின்றபொழுது உடனே உன்னுடைய ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் பிளேடைத் தேடும்; ஆனால் நீ உன் ஆள்காட்டி விரலை உன் நெற்றியில் வைக்கும்பட்சத்தில் பிளேடைத் தேடுவதற்கான வாய்ப்பிருக்காது. அதனால்தான் அவ்வாறு சொன்னேன்” என்றார்.
பெரிய பிக்பாக்கெட் திருடனாக இருந்தவன், நல்லவனாக மாறியது, இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும், “…..தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி” என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றது. அது குறித்துச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கடவுளின் விருப்பம் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே ஆகும். (யோவா 3: 16; 1 திமொ 2: 14); இதற்காகவே அவர் பொறுமையோடு இருக்கின்றார். கடவுள் பொறுமையாக இருக்கின்றார் எனில், தீயவர் தம் தீயவழிகளை விட்டுவிட்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் தீய வழிகளை விட்டுவிட்டு நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வடைவர் என்று இன்றைய முதல்வாசகத்தில் கூறுகின்றார் இறைவாக்கினர் எசேக்கியேல். இங்கு தீய வழி என்பதை நற்செய்தியில் இயேசு சொல்லும் சினம்கொள்ளுதல் ஆகியவற்றோடு இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆகவே, சினம், இன்னபிற தீமைகளை விட்டு ஒருவர் விலகினால் அவர் நிச்சயம் வாழ்வடைவார்.
சிந்தனைக்கு:
 தீமையைத் தேடாமல், நன்மையை தேடினால் வாழ்வடைவது உறுதி (ஆமோ 5: 14).
 சினம் நமக்கும் சகமனிதர்க்கும் இடையே உள்ள இடைவெளியை மட்டுமல்ல, நமக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளியையும் மிகுதியாக்குகின்றது.
 ஆண்டவர் எவருடைய சாவையும் விரும்புவதில்லை
இறைவாக்கு:
‘சினம் கொள்ளவேண்டாம். அன்பையும் மன்னிப்பையும் கொண்டு வாழுங்கள்’ என்பார் பாட்ரிசியா மேயர் என்ற எழுத்தாளர். எனவே, நாம் சினம் போன்ற தீமைகளைத் தவிர்த்து, அன்புகொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.