தாயிலும் மேலான மாவீரர்களே

தாயிலும் மேலான மாவீரர்களே…

தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில்

நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்?

வாயில்லாப் பூக்களது வாழ்வு மலரும் – அவர்

வாய் திறந்து பரணி பாடும் நாள் தெரியும்.

தீயொன்று உள்ளாமதில் கொழுந்து விட்டதா? – ஊரில்

தீமைகண்டு உன்னிதயம் வெம்பி அழுததா?

பாய்விரித்து உறங்கிவிட மனம் வெறுத்ததா ? – உன்னை

பாயும்புலி வீரனாகிப் போகச் சொன்னதா?

வானமதில் வெள்ளிஒன்று நின்றது கண்டாய் – தமிழர்

வாழ்வுயர வேண்டுமென வாழ்ந்தது கேட்டாய்

காகத்து வாழ்வதனை காதலித்துச் சென்றாய்

கண்துயிலாக் காவலிலே இன்பமா சேர்த்தாய் ?

ஈகையிலே வருவது பேரின்பம் என்றார் – உயிர்

ஈகமது செய்து நீயோ இன்பங் கண்டாய்

சோதரியர் கைகளிலே விலங்குகள் போட்டார் – வாழும்

சுதந்திரத்தை சிலபேய்கள் தீண்டியும் விட்டார்.

உன் குருதிச் சிவப்பாலே விடியல் தெரிந்தது – படைகள்

ஊரைவிட்டு முகாமுக்குள் ஒதுங்கிப்பதைத்தனை

நின் ஆவி கரைந்ததாலே கடல் எழுந்தது – அங்கே

நின்று முழங்கிய நேவியின் கப்பல் மறைந்தது.
தமிழீழம் ஒன்றே உன் தாகம் என்றாயே – இதைத்

தாங்கிய நெஞ்சுக்குச் சாந்தி வேண்டாமா?

தமிழர் துயரைநீ தாங்கி நடந்தாயே – நாமும

தாங்கிச் சுமத்தலன்றி வேறெது வேண்டும் கூறு:

Comments are closed.